8.11.2024 அன்று உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு 4:3 என்ற பெரும்பான்மையான அடிப்படையில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் அந்தஸ்து பெறத் தகுதியுடையதே எனத் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நால்வரும் இந்தப் பல்கலைக்கழகம் சிறுபான்மை அந்தஸ்து பெறத் தகுதியுடையதே எனத் தீர்ப்பளித்துள்ள நிலையில் மீதி மூன்று நீதிபதிகளான சூர்ய காந்த், திபங்கர் தத்தா, சர்மா ஆகியோர் தனித்தனியே மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பின் மூலம் 1967ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பு இரத்து செய் யப்படுகிறது. அதாவது இந்தப் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் அந்தஸ்து பெறத் தகுதியில்லை என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
சர் செய் யது அஹமது கானின் அரிய முயற்சியால் 24.5.1875 அன்று அலிகார் நகரில் முஹம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரி 1920ஆம் ஆண்டு முஸ்லிம் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகப் பல்கலைக்கழகத் தரம் உயர்த்தப்பட்டது. அன்றைய முஸ்லிம் லீகின் தலைவர் ஆகாகான் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சுமார் முப்பது இலட்சம் நிதி திரட்டி ஆங்கிலேய அரசிடம் அளித்தது. கோரிக்கையையும், நிதியையும் ஏற்றுக் கொண்ட அரசு அக்கல்லூரியைப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்தது. அதன் பின்னர் அது மத்தியப் பல்கலைக்கழகமாகியது. அன்றிலிருந்து 1967ஆம் ஆண்டு வரை அது சிறுபான்மையினர் பல்கலைக்கழகமாகவே விளங்கியது.
எனினும் RSS, ஜன சங்கம் (தற்போதைய பாஜக) ஆகிய அமைப்புகள் அந்தப் பல்கலைக்கழகத்திற்குச் சிறுபான்மையினர் அந்தஸ்து பெறத் தகுதியில்லை எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டே வந்தனர். கல்லூரிக்குத் தான் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டது. எப்போது அது பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டு அரசின் சட்டத்தின் மூலம் மத்தியப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டதோ, அப்போதிருந்தே அதன் சிறுபான்மையினர் அந்தஸ்து நீங்கி விடுகிறது என அந்த அமைப்புகள் வாதிட்டன.
மன்னர் ராஜமகேந்திர பிரதாப் சிங் அளித்த நிலத்தில்தான் சர் செய் யது அஹமது கான் கல்லூரியை நிறுவினார். எனவே அதனை முஸ்லிம் சிறுபான்மையினர் பல்கலைக்கழகமாகக் கருத முடியாது என்றும், அந்தப் பல்கலைக்கழகத்தில் தலித்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் இடஒதுக்கீடு இல்லையென்றும், அந்தப் பல்கலைக்கழகம் நடத்தி வரும் மருத்துவக் கல்லூரியில் இந்துக்களுக் குப் பாரபட்சம் காட்டப்படுகிறது எனவும் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். அதே நேரத்தில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக இப்ராஹீம் சுலைமான் சேட், பனாத்வாலா, சிராஜுல் மில்லத் அப்துல் ஸமது, இ.அகமது உள்ளிட்டோர் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மையினர் அந்தஸ்து பாதுகாக்கப் பட வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில்தான் 1967ஆம் ஆண்டு இது சம்பந்தமாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு பல்கலைக்கழகம் சிறுபான்மை அந்தஸ்து பெறத் தகுதியற்றது எனத் தீர்ப்பளித்தனர். எனினும், நாடெங்கிலும் உள்ள முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து வைத்து வந்த கோரிக்கையை ஏற்று 1981ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான ஒன்றிய அரசு, இந்தப் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றியது.
இந்தச் சட்டத்தை எதிர்த்தும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான் தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு 8.11.24 அன்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் அந்தஸ்து பெறத் தகுதியானதே என உச்ச நீதிமன்றம் பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி சந்திர சூட் உள்ளிட்ட நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. இந்திய அரசியல் சட்டத்தின் 30, 30(A) பிரிவுகளின் படி மத, மொழிச் சிறுபான்மையினர் தங்களது சமூக மக்களின் கல்வி வளர்ச்சிக்காகக் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வரலாம். அந்த அடிப்படையிலேயே முஹம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்குச் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. 1920ஆம் ஆண்டு அந்தக் கல்லூரி பல்கலைக்கழகமாக ஆன பின்னரும் சிறுபான்மையினர் அந்தஸ்து தொடர்கிறது.
2. 1920ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஒன்றிய அரசின் சட்டத்தின்படியே அந்தக் கல்லூரி பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க வழிவகை செய் யப்படவில்லை என்ற போதிலும், இந்தியாவில் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வரும் முன்னரே இது பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டது. எனவே கல்லூரிக்கு வழங்கப்பட்டு வந்த சிறுபான்மையினர் அந்தஸ்து அது பல்கலைக்கழகமான பின்னரும் நீடிக்கும்.
3. அந்தக் கல்வி நிறுவனத்தின் வரலாறு என்ன? அது யாருடைய முயற்சியால் தொடங்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? அரசிடம் அங்கீகாரம் பெற முயற்சித்தவர்கள் யார்? கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைச் செய் தவர்கள் யார்? ஆகிய அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும். அப்படிப் பரிசீலிக்கும்போது ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி சர் செய் யத் அஹமது கான் என்ற முஸ்லிமின் முயற்சியால் தொடங்கப்பட்டது. அதற்கு நிதி அளித்தவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களே! எனவே கல்லூரி, பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்ட போது, அதன் சிறுபான்மையினர் அந்துஸ்து தொடரவே செய்யும்.
4. பல்கலைக்கழகங்கள் தேசிய முக்கியத்துவம் வாய் ந்தவை. ஒன்றிய அரசிடமிருந்து நிதி உதவி பெறும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை சிறுபான்மையினர் கல்வி நிறுவனமாகக் கருத முடியாது என்ற வாதம் ஏற்புடையதல்ல. சிறுபான்மையினர் அந்தஸ்து ஒரு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படுவதாலேயே அதன் தேசிய முக்கியத்துவம் குறைந்து விடாது.
5. கல்லூரி தான் சிறுபான்மை முஸ்லிம்களின் முயற்சியால் தொடங்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகம் ஒன்றிய அரசின் சட்டம் மூலம் தொடங்கப்பட்டது. எனவே சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்படக் கூடாது என்ற வாதமும் ஏற்கத்தக்கதல்ல. கல்லூரிக்கு வழங்கப்பட்ட சிறுபான்மையினர் அந்தஸ்து பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட வேண்டும். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றில் இது ஒரு முக்கியமான தீர்ப்பாகக் கருதப்படுகிறது. நீண்ட சட்டப் போராட்டங்களைத் தாண்டி இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தத்தா, முஹம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியைத் தரம் உயர்த்துவதற்கு முஸ்லிம் தலைவர்கள் அன்றைய ஆங்கிலேய அரசிடம் முப்பது இலட்சம் ரூபாய் அளித்தனர் என்ற வாதத்தை ஏற்கவில்லை. இது சரி அல்ல. கவர்னர் ஜெனரல் அலுவலக உறுப்பினரான ஹார்கோர்ட் பட்லர் (Harcourt Butler) கல்லூரி நிர்வாகிகளுக்கு 9.8.1912 அன்று எழுதிய கடிதத்தில், கல்லூரியைப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்துவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசிற்குச் செலுத்த வேண்டும் என்பதை ஒரு முன் நிபந்தனையாகவே வைத்துள்ளார். அதன்படியே முஸ்லிம் தலைவர்கள் முப்பது இலட்சம் ரூபாய் மத்திய அரசிடம் செலுத்தினர்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், முஹம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியின் தொடர்ச்சியே! அக்கல்லூரிகளின் கடன்களையும், அது செலுத்த வேண்டியவற்றையும், உரிமைகளையும் தனித்தன்மையையும் பல்கலைக்கழகம் சுவீகரித்துக் கொண்டது என்ற உண்மையை நீதிபதி தத்தா கவனிக்கத் தவறிவிட்டார். (இதுகுறித்து இந்து ஆங்கில நாளிதழில் 16.11.2024 அன்று சட்ட நிபுணர் பைஃஸன் முஸ்தபா (Faizan Mustafa) எழுதியுள்ள கட்டுரையைப் படிக்க வேண்டுகிறேன்)
8.11.2024 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் அந்தஸ்து பெறத் தகுதியுள்ளது என்று தீர்ப்பளித்த போதிலும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வினைக் கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும் இந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்தப் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் அந்தஸ்து பெறத் தகுதியுள்ளது என்ற தீர்ப்புக்கு உட்பட்டே வழிமுறைகளை உருவாக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.