மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

தலாக் தெரியும்..! குலா தெரியுமா?
நஸ்ரத் ரோஸி, 1 - 15 டிசம்பர் 2024


 

இந்தியா முழுக்க, ஏன் உலகம் முழுக்கவே இன்று அறியப்படும் ஒரு வார்த்தை என்றால் அது தலாக். கணவன், தன் மனைவிக்குக் கொடுக்கும் விவாகரத்தே தலாக். அதுவே பெண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாத கணவனுக்கு அவர்களாக விவாகரத்து கொடுப்பதே குலா அல்லது குலஃ.

திருமணம் என்னும் வாழ்க்கை ஒப்பந்தத்துடன் வாழ்விலே சங்கமிக்கும் ஓர் ஆணும் பெண்ணும், பரஸ்பரம் நேசித்து, இன்பங்களைப் பகிர்ந்து, துன்பங்களில் பங்கெடுத்து, துயரங்களில் தோள் கொடுத்து, ஓருயிர் ஈருடலாய் ஒருமித்து வாழ்வதே இனிய இல்வாழ்க்கையாகும். இரத்த பந்தமில்லா ஓர் அந்நியம் திருமண பந்தத்தின் மூலம் அந்நியோன்யமாகி, மற்றெல்லா உறவுகளையும் நட்புகளையும் விட நெருக்கமாகி, அந்தரங்க உணர்வுகள் வரை ஊடுருவி இரண்டறக் கலந்துவிடும் கணவன் மனைவி உறவுதான் மகிழ்வான குடும்பச் சூழ்நிலையின் அஸ்திவாரமாக உள்ளது. ஆனால் அந்த அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடுமானால் அன்பும், மன அமைதியும் நிலவும் வாழ்க்கை என்பது கேள்விக்குறியே!

இன்று எத்தனையோ தம்பதியினரைப் பார்க்கிறோம். பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கணவன் மனைவியின் முழுச் சம்மதத்துடன் நடந்த திருமணமாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு முன்பே இருவரும் தங்களின் சொந்த விருப்பத்தின் படி முடிவு செய் து, தாங்களே விரும்பி ஏற்றுக்கொண்ட திருமண வாழ்க்கையாக இருந்தாலும்கூட, ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்பது போல் வெகு விரைவிலேயே பிரிந்துவிடுமளவு மனக்கசப்பு ஏற்பட்டு தவிப்பதைப் பார்க்கிறோம்.

ஒவ்வொரு தம்பதிக்கு மத்தியிலும் காரணங்கள் வேறுபட்டாலும், குழந்தைகள் பெற்று வாழ்வின் சில கட்டங்களை ஒன்றாகக் கைகோர்த்துத் தாண்டியவர்கள் கூட, அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமையாலும், உப்புச் சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் சகிப்புத்தன்மை இழந்துவிடுவதாலும், ‘நீயா..? நானா..?’ என எதிரும் புதிருமாகப் பிளவுபட்டு, தங்களின் குழந்தைகளின் எதிர்கால வாழ்வைக்கூட பொருட்படுத்தாமல் பிரிந்துவிட எண்ணும் அவலங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதே சமயம், கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் அடிப்படையிலேயே மோசமான குணாதிசயங்கள், நடத்தைகள் கொண்டவராக இருந்து, அதனால் பாதிக்கப்படும் மற்றவர் வாழ்நாள் முழுவதும் அதைச் சகித்தே ஆகவேண்டும் என்பது போன்ற நிர்பந்தங்கள் யாருக்கும் கிடையாது. குறிப்பாக இஸ்லாத்தைப் பொறுத்தவரை, பாதிக்கப்படுவது ஒரு பெண்ணாக இருந்தாலும் அந்தப் பெண், பிடிக்காத தன் கணவனிடமிருந்து பிரிந்துவிட விவாக விலக்கு செய் யலாம் என பெண்ணுக்கும் விவாகரத்தில் சம உரிமை அளித்துள்ளது.

மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும் அதற்குரிய மிகச் சரியான தீர்வைச் சொல்லும் மார்க்கம் இறைவன் வகுத்த இஸ்லாம் மார்க்கம் மட்டுமே! நம் நாட்டின் மிகக் கடினமான விவாக ரத்து சட்டமுறைதான், கணவன் மனைவிக் கிடையிலான பிரச்னைகளில் பல கொடுமைகளும், உயிரிழப்புகளும்கூட நடக்கக் காரண மாக இருக்கிறது. தன் வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து வாழ இயலவே இயலாது என்று எப்போது ஒருவர் உறுதியாக நினைக்கிறாரோ அப்போதே, வாழப் பிடிக்காத தன் முடிவைத் தெரியப்படுத்தி பிரிந்துவிட அந்தச் சட்டம் இடமளிப்பதில்லை.

இதனால் நீதிமன்றத்திற்குச் சென்று தீர்ப்பை எதிர்பார்க்கும் பெண்கள் பல ஆண்டுகள் காத்துக் கிடப்பது மட்டுமின்றி, தனக்குச் சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக ஏற்கத்தக்க காரணங்களைச் சொன்னால்தான், தான் எதிர்பார்க்கும் தீர்ப்பு கிடைக்கும் என்பதற்காக, உண்மையிலேயே தகுதியுள்ள கணவனாக இருந்தாலும், தனக்குப் பிடிக்காத அந்தக் கணவன் மீது ‘இல்வாழ்வுக்கு தகுதியற்றவன்’, ‘பொம்பளைப் பொறுக்கி’, ‘வரதட்சணை கேட்கிறார்’ போன்ற இல்லாத பழிகளைப் போட்டு விவாகரத்து கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.  இதனால்  பிரிந்து செல்லும் அவளுடைய கணவனும் தன் எதிர்கால வாழ்க்கையில் பாதிக்கப்பட்டுவிடுகிறான். அதேபோல் ஒரு ஆணும் தன் மனைவியைப் பிரிவதற்காக, அவள் ஒழுக்கமானவளாக இருந்தாலும் அவளை நடத்தை கெட்டவளாகச் சித்திரித்து நீதிமன்றத்தில் முறையிடுகிறான்.

சரியில்லாத தன் கணவனை நினைத்த மாத்திரத்தில் பிரிய இயலாத ஒரு பெண், ஒருவனுக்கு மனைவியாக இருந்துகொண்டு அவளது உணர்வுகளையும், நிம்மதியையும் சோதிக்கக்கூடிய வறண்ட வாழ்க்கையை அனுபவிக்கிறாள். அத்துடன் சட்டப்படி விவாகரத்துப் பெற்று இன்னொரு திருமணம் செய் ய இயலாத அவளது கணவன் ஏற்படுத்திக் கொண்ட சின்ன வீடு சமாச்சாரங்களையும் சகித்துக் கொண்டு வாழும் நிலைக்குத் தள்ளப்படுவதன் மூலம் அவள் மனதளவில் பெரும் சித்ரவைதைக்கு ஆளாக்கப்படுகிறாள்.

இதைவிடக் கொடுமையாக, பிடிக்காத தன் மனைவியைவிட்டு உடனே பிரிய இயலாத காரணத்தினால் அவளுடைய மரணச் செய் தி ‘ஸ்டவ் வெடித்து பெண் சாவு’ என தலைப்பிட்டு வரும்படியான ஏற்பாடுகளைக் கச்சிதமாக முடித்துவிடுகிறார்கள் சில ஆண்கள். அல்லது மனைவி தன் பக்கம் தவறை வைத்துக் கொண்டே கணவனைப் பிரிய விரும்புபவளாக இருந்தால், அவனிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிரிய முடியாத சிக்கலான சட்டச் சூழ்நிலையினால், அந்தக் கணவனோடு வாழ முடியாத, விருப்பமில்லாத நிலையில், அந்த மனைவி மூலமே மர்மக் கொலைகளோ அவளுடைய கள்ளக் காதலன் மூலமோ கணவனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதையும் அவ்வப்போது செய் திகளாகப் பார்க்கத்தான் செய்கிறோம்.

இதற்கெல்லாம் வழி கொடுக்காமல்தான் இஸ்லாம் மார்க்கம் சுலபமான தீர்வாக ‘குலா’ என்று சொல்லக்கூடிய பெண்களுக்கான விவாகரத்து உரிமையை அளித்துள்ளது. இதற்கு இந்தியாவின் முஸ்லிம் தனியார் சட்டம் (Muslim Personal Law) அனுமதிக்கிறது. மோசமான அத்தனை விளைவுகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது இந்தியாவின் விவாகரத்து சட்டமுறைதான். இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல்கள்தான் மனிதனின் வாழ்வியல் பிரச்னைகளுக்குச் சரியான வழியை அமைத்துக் கொடுத்துள்ளன.

இன்று வலுவான காரணங்கள் ஏதுமில்லாமல் உன்னோடு வாழ்ந்தது போதும் எனக்கொரு இடைவெளி வேண்டும் அல்லது எனக்கு வேறு ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் ஆகவே எனக்கு Compromise petition கொடுத்து சமாதானமாகப் பிரிந்துகொள்ளும் நடைமுறைக்கு ஒப்புதல் வேண்டுமென நாகரிகத்தில் வளர்ந்த மேற்கத்திய நாடுகள் தீர்வுகளை முன்øவக்கின்றன. ஆனால் இஸ்லாம் தகுந்த காரணம் இன்றி விவாகரத்துப் பெறுவதை வெறுக்கும் செயலாகச் சுட்டிக்காட்டிவிட்டே  விவாகரத்திற்கு அனுமதி வழங்கியிருக்கின்றது.

குலா உரிமையில் ஒரு ஆண் விவாகரத்திற்கு ஆதரளிப்பான் எனக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் பெண்ணுக்கு இல்லை. காரணங்கள் ஏதும் கூறாமலேயே குலா விட்டு அந்தத் திருமண உறவில் இருந்து கடந்து போக முடியும். நாகரிகம், புதுமை, பெண்ணியம் எல்லாம் இந்த ஓர் உரிமைக்குள் அடக்கப்பட்டு போகிறதுதானே!

ஆனாலும் குலாவின் உரிமையில் பெண்களுக்குச் சில அறிவுரைகளும் கூறப்பட்டுள்ளது. பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவனிடமிருந்து ஊரறிய மஹர்தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவாகரத்துப் பெற்றதற்குப் பின்னால் பெண்களே அதிகச் சிரமத்திற்கு ஆளாக நேர்வதால் இத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய் ய வழி ஏற்படுகின்றது. எனவே சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பிடிக்காத கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பெண்னைக் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூட பரீரா என்ற பெண்ணிற்கு, அவளுடைய கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பரிந்துரை செய் தார்களே தவிர பிரிவுக்கு நிர்பந்திக்கவில்லை. பொது வாழ்வில் இருப்பவர்களின் விவாகரத்துகள் மக்களிடையே அதிகம் பேசப்படுகின்றன. அதிலும் முஸ்லிம் பின்னணியில் இருப்போரது சொந்த வாழ்க்கை விவகாரங்கள் அனைத்தும் சமூக ஊடகங்களில் பூதாகரமாக்கப்பட்டுவரும் நிலையில் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற முழக்கத்தை முன்னெடுப்போர் 1440 ஆண்டுளுக்கு முன் இஸ்லாம் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கிய முற்போக்கு உரிமைகளைப் பற்றி அறிவது அவசியமாகிறது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்