2024 நவம்பர் 15,16,17 ஹைதராபாத்தில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய உறுப்பினர் மாநாட்டின் ஒரு துளியாக நானும் பங்கேற்றது இறைவனின் அருள். மாநாட்டு உரைகள் மூலம் பல தாக்கங்கள், பயிற்சிகளைப் பெற்றாலும் ஜமாஅத் உறுப்பினர்களிடமிருந்தும் செயல்வழிப் பயிற்சியையும், தாக்கத்தையும், பாடங்களையும் பெற முடிந்தது. இஸ்லாமிய இயக்கம் எத்தகைய மகத்தான தொண்டர்களை உருவாக்கியிருக்கின்றது. அவர்களை எப்படியெல்லாம் பயிற்றுவித்திருக்கின்றது என்பதை இந்த நிகழ்வுகளின் வழியாக நீங்களும் உணர்ந்து கொள்ள முடியும் என்று கருதுகிறேன்.
இறைவா.. இவருக்கு நிழலை வழங்குவாயாக!
மாநாட்டின் முதல் நாள். வெள்ளிக்கிழமை. ஜும்ஆ தொழுகை நேரம். மைதானத்தில் மக்கள் நிரம்பத் தொடங்கினார்கள். சற்றேறக்குறைய இருபதாயிரம் பேர். கொளுத்தும் வெயில். சரியான நேரத்திற்கு ஜும்ஆ உரை தொடங்கியது. 25 நிமிட உரையை மகாராஷ்டிரா மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் மௌலானா இல்யாஸ்கான் ஃபலாஹி மிகச் சிறப்பாக நிகழ்த்தினார். புதிய தரை விரிப்புகள், விசாலமான மைதானம், அற்புதமான உரை என்றாலும் வெயில் போட்டுத் தாக்கியது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஒருவர் எழுந்து நின்றார். நமக்கு அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்தால் சற்றே கோபமும், எரிச்சலும் வரும் இல்லையா..! அப்படித்தான் இருந்தது எனக்கு.
மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு முதுகில் மாட்டிக் கொள்ளத் தோதாய் சுருக்குப் பை தந்திருந்தார்கள். அதில் குறிப்பேடு, பேனா இருந்தது. நின்று கொண்டிருந்தவர் அவரிடமிருந்த பையிலுள்ள குறிப்பேடை எடுத்து என்னருகில் அமர்ந்திருந்த நண்பர் பீர் முஹம்மதிடம் நீட்டினார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன்? எதற்கு? யாரிடம் தரவேண்டும்? என்றெல்லாம் குழம்பியபோது நின்று கொண்டிருந்தவர் வெயில் அதிகமாக இருக்கிறது. நோட்டை வைத்து முகத்தில் வெயில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சைகை செய் தார்.
இதுவரை வெயில் எங்களை சுடவில்லை ஏன் என் உண்மை சுட்டது. அவர் 25 நிமிடமாக நின்று கொண்டிருந்தது எங்களுக்காகத்தான்..! அந்த இளைஞரின் நிழலில்தான் நாங்கள் அமர்ந் திருக்கின்றோம். அந்த வெயில் நகரவும் அவர் நோட்டை எடுத்து நீட்டியிருக்கின்றார். தான் வெயிலில் கால் கடுக்க நின்றாலும் தன் அருகில் இருப்பவர்களுக்கு நிழல் தர வேண்டும் என்று நின்றிருந்தவர் வரிசைகளைச் சரி செய் கையில் முன்னேறிச் சென்றிருந்தார். அவரை நான் அதற்கு முன்பும், பின்பும் சந்திக்கவில்லை. ஆனால் மனம் நிறைந்து பிரார்த்தித்தேன். ‘இறைவா..! இந்த இனிய இயக்கத் தோழருக்கு நீ மறுமையில் உன் அர்ஷிலிருந்து நிழலை வழங்குவாயாக!’ என்று.
அறிவால் நிரம்பு. உணவால் அல்ல!
மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கான சுய தேவைகள் மட்டுமின்றி, உணவுக்கான ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாகவே செய் யப்பட்டிருந்தன. மாநில வாரியாக உணவரங்கங்களைப் பிரித்திருந்தார்கள். மாநிலங்களுக்கேற்ப உணவு முறை மாறுவதுடன், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த ஏற்பாடு தனிச் சிறப்பானது.
தமிழ்நாடு, கர்நாடகா, கோவாவிற்கு என 1800 பேர் உணவருந்தும் அரங்கு எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மூன்று வேளையும் சிறப்பான உணவு என்றாலும் சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் தந்த தேநீரின் சுவை அலாதியானது. இன்னும் நாவில் சுவை எஞ்சியிருக்கிறது. பீங்கான் கோப்பைகளில்தான் எல்லாருக்குமே தேநீர் பரிமாறப்பட்டது.
என் அருகில் சாப்பிட்ட நண்பர் ஒருவர் மிகக் குறைவாகவே உணவை வாங்கினார். அவரிடம் கேட்டேன். ‘மிகவும் குறைவாகச் சாப்பிடுகின்றீர்களே.. இது எப்படிப் போதும்?’ அந்த நண்பர் சிரித்துக் கொண்டே சொன்ன பதில் சிந்தனைக்குரியது.
18,000 பேருக்கு உணவு ஏற்பாடு செய் திருக்கின்றார்கள். எல்லாருமே வயிறு நிரம்ப திருப்தியாகச் சாப்பிட்டால் ஒருவேளை பற்றாக்குறைக்கு வாய் ப்பு உள்ளது இல்லையா! அதை விடுங்கள். வயிறு நிரம்பினால் எப்படி நிகழ்வைக் கவனிக்க முடியும். தூக்கம் மேலோங்கும். குறைவான உணவு இருந்தால்தான் சிந்தனை வேலை செய் யும். எல்லாவற்றுக்கும் மேல் சாப்பிட்ட உணவு வெளியேற வேண்டும் இல்லையா! கழிப்பறைகளை நாம் நிறைத்து அசுத்தம் செய் து விடவும் கூடாது.
உரையைக் கேட்பதற்கான குறைவான உணவை எடுத்துக் கொண்டால் போதும் தானே! என்று அந்த நண்பர் தட்டைக் கழுவச் சென்றார். அவருடன் நானும் எழுந்து கொண்டேன். இந்தச் சிந்தனை முதல் நாளே எனக்கு எட்டியிருக்கக் கூடாதா?
மறுபடியும் முதல்ல இருந்தா..?
மதிய உணவு வேளை. நீண்ட வரிசை. அகில இந்தியத் தலைவர்கள்கூட வரிசையில் நின்று அந்த உணவரங்கங்களில் உணவு உண்டார்கள். பசி ஒருபுறம் என்றால் கொளுத்தும் வெயிலில் சூடு மறுபுறம். மெல்ல நகர்கிறது வரிசை. முதியவர்கள்கூட வரிசை ஒழுங்கைப் பேணினார்கள். நீண்ட நேரம் வரிசையில் நின்று அரங்கின் வாசல்வரை வந்துவிட்டோம். வயதான ஒருவர் வரிசையில் நிற்பதற்காக மெல்ல, மெல்லச் சென்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னால் நின்றிருந்தவர் அந்தப் பெரியவரை அழைத்து நீங்கள் இங்கே நில்லுங்கள் என்றார். அதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை. வயதானவருக்கு இடம் தருவது ஒன்றும் புதிய செய் தி அல்ல.
ஆனால் அவருக்கு இடம் தந்த நண்பர் வரிசையிலிருந்து வெளியேறினார். ‘பரவாயில்லை. நீங்கள் ஏன் வெளியேற வேண்டும்?’ என வினவியபோது, ‘இல்லை இது ஒழுங்கு அல்ல. எனக்கான இடத்தைத்தான் அந்த முதியவருக்குத் தந்தேன். நான் மீண்டும் வரிசையில் வருவதுதான் சரியாக இருக்கும்’ என்று சொல்லிவிட்டு நீண்ட வரிசையின் இறுதி ஆளாய் மீண்டும் இணைவதற்குச் சென்றார் ஜமாஅத்தே இஸ்லாமியின் அந்த உறுப்பினர்.
அதுவரை இறையருள் இறங்கட்டுமே!
தங்குவதற்கும் தமிழ்நாட்டிற்கான தனி இடம் என்றாலும் இடப் பற்றாக்குறையின் காரணமாக சிலர் வேறு சில மாநிலத் தங்குமிடத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கர்நாடகாவிற்கான தங்குமிடத்தில் தமிழ்நாட்டு நண்பர்கள் சிலர் தங்கியிருந்தார்கள். மதிய உணவு இடைவேளையில் அந்த நண்பர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். பலர் ஓய் வெடுத்துக் கொண்டிருந்தார்கள். அருகருகே வரிசையாகப் போடப்பட்டிருந்த படுக்கையில் நாங்கள் நண்பர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
நான் அமர்ந்திருந்தது வேறொருவரின் படுக்கை விரிப்பில். விரிப்பிற்குரியவர் களைப்புடன் ஓய் வெடுக்க வந்தார். நாங்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு திரும்பிச் சென்றதும் நண்பர் அவரை அழைத்து, ‘வாருங்கள். ஓய் வெடுங்கள்’ என அழைத்தார். அந்த நண்பர் மெதுவாகச் சொன்னார். ‘எனக்கான விரிப்பில் நீங்கள் இருக்கும் வரை இறையருள் எனக்குக் கிடைக்கும். இன்னும் கொஞ்ச நேரம் இருங்கள். நான் வெளியே சென்று வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு தங்குமிடத்தை விட்டு மெல்ல வெளியேறினார்.
எல்லாரும் தன்னார்வலர்களே!
என்னிலும் வயது பெரியவர் ஒருவர் தற்காலிகக் கழிப்பறையைத் திறந்து தண்ணீர் ஊற்றிச்சுத்தம் செய் து கொண்டிருந்தார். அவர் செல்வதற்காகத்தான் சுத்தம் செய் கிறார் என நினைத்தேன். ‘இல்லை.. நீங்கள் செல்லுங்கள். இதுவெல்லாம் தன்னார்வலர்கள்தான் செய் யணும் என்றில்லை. நாமும் செய் யலாம். அவர்களின் சுமையைக் குறைக்கலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு தன்னார்வலர்தானே!’ என்றார்.
இன்னும் சில காட்சிகள் பயிற்சிகளாய் அமைந்தது. இதுவெல்லாம் இஸ்லாமும், இயக்கமும் தந்த பயிற்சிகள். இலட்சக்கணக்கில் செலவழித்து இதுபோன்ற மாநாடுகளை நடத்துவதால் என்ன பயன்? என்று சிலர் வினவுவதுண்டு. சொற்பொழிவுகளையும் தாண்டி இதுபோன்ற பயிற்சிகளை வேறு எங்கு பெற்றுக் கொள்ள முடியும்? இதைத்தானே இஸ்லாமும் போதிக்கிறது. அந்த போதனைகளைத் தான் இஸ்லாமிய இயக்கம் வழங்கிக் கொண்டிருக்கிறது.