மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

மனிதநேயக் குரலின் நூற்றாண்டு
புதுமடம் ஜாஃபர் அலீ, 1-15 ஜனவரி 2025


 

‘இறைவனிடம்  கையேந்துங்கள்’ என்னும் இஸ்லாமியப் பாடல் அனைத்து மதத்தினரும் விரும்பிக் கேட்கும் ஆன்மிக மணம் கமழும் பாடல். பாவ  மன்னிப்பு   திரைப்படத்தின் ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ பாடலில் டி.எம்.எஸ்ஸுடன் இணைந்த அந்தக் குரல் செம்பருத்தியில் ‘நட்ட நடு கடல் மீது’, ராமன் அப்துல்லாவில் ‘உன் மதமா என் மதம் ஆண்டவன் என்ன மதம்?’ போன்ற பாடல்கள் வழி பெரும் வரவேற்பையும் புகழையும் பெற்ற குரல் அது. ‘ஓடி வருகிறான் உதய சூரியன்’, ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்றெல்லாம் அரசியல் மேடைகளில் கம்பீர மாக ஒலித்த குரல் அது.

அரசியல் கூட்டத்திற்கு முன் ஏழு பத்தாண்டுகளாக ஒலித்த அந்தச் சிம்மக் குரலால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அமைதி காத்தது தமிழ்நாட்டு வரலாறு. தி.மு.கவின் வரலாற்றுச்சிறப்புமிக்க மாநாடு, பொதுக்கூட்டம் போன்றவை அந்தக் குரலிசையில்லாமல் தொடங்கியதே இல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் உணர்வெழுச்சி ஊட்டிய பாரதிதாசனின் பாடல்களான ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழுங்கு’, ‘தமிழுக்கு அமுதென்று பெயர்’ ஆகியவற்றைப் பாடி அந்தக் காலத்தில் இந்தி எதிர்ப்பில் பரப்புரை வானொலியாக இருந்த மாபெரும் ஆளுமை அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.

பதிமூன்று வயதுச் சிறுவனாக இருந்தபோதே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற தமிழுணர்வாளர். தொடர்ந்து 70 ஆண்டுகள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகள் வழி தமது குரலைக் காற்றலைகளில்  தவழச்  செய்திருக்கிறார். அழகு தமிழைப் பட்டிதொட்டியெங்கும் பாடிப் பரப்பிய அந்தக் கண்ணிய ஆளுமைதான் நாகூர் E.M.ஹனீஃபா. அவரது நூற்றாண்டுத் தருணம் இது.

முஹம்மது இஸ்மாயீல் மரியம் பீவி தம்பதியினருக்கு மூன்றாம் மகனாக 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 25இல் பிறந்தார் இஸ்மாயீல் முஹம்மது ஹனீஃபா என்கிற இசைமுரசு நாகூர் உ.M. ஹனீஃபா. அவரது தாயார் இராமநாதபுரம் வெளிப்பட்டினத்தைச் சேர்ந்தவர். அவர் பிறந்தது இராமநாத புரம்தான். அவரின் தந்தை நாகூரைச் சேர்ந்தவர் என்பதால் சிறு வயதில் குடும்பத்தினர் நாகூருக்கு மாறிவிட்டார்கள். எனவே அவரின் பெயருடன் நாகூர் ஒட்டிக் கொண்டது. நாகூர் அரசுப் பள்ளியில் படிக்கும்போதே 11 வயதில் பள்ளியில் இறைவனைப் பற்றிப் பாடினார். அழகிய குரல் வளத்துடன் தொடர்ந்து பாடி வந்தார். அவருடைய தந்தை வேலை காரணமாக மலேசியா சென்றார். தாயின் அரவணைப்பில் இருந்து வந்த ஹனீஃபா திருமணத்திற்குப் பிறகு சென்னை கோட்டூர்புரத்திற்கு இடம்பெயர்ந்தார்.

இஸ்லாமியர் வீட்டுத் திருமணங்களில் மாப்பிள்ளை அழைப்பின்போது தப்பு (வட்டப்பறை) தட்டி இஸ்லாமியப் பாடல் பாடி அழைத்து வரும் வழக்கம் முஸ்லிம் கிராமங்களில் உண்டு. அதைப்போல நாகூரில் பைத்து சபை ஒன்று இருந்தது. இந்த நிகழ்வுகளில் ஹனீஃபாவின் குரலுக்குத் தனி மரியாதை கிடைத்து வந்தது. பாடகராக இருப்பதில் ஆர்வம் காட்டினார். படிப்பில் கவனம் இல்லாது இருந்தார். இப்படியே இருந்தால் பிள்ளை கெட்டுவிடுவான் என்ற பயத்தில் தாயார் அவரின் சிறிய தந்தை அபூபக்கர் திருவாரூரில் நடத்திய மளிகைக் கடைக்கு அனுப்பினார்.

திருவாரூரில் நீதிக் கட்சியின் பொதுக்கூட்டங்களுக்குப்  பார்வையாளராகச் சென்ற வருக்கு அந்தக் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட் டது. திருவாரூரில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்தவர்கள் சிங்கராயர், ரெங்கராஜ், இராமன், கலைஞர் கருணாநிதி போன்றோர். ஆகவே அவர்களுடன் ஹனீஃபாவும் கட்சி வேலையில் ஈடுபடத் தொடங்கினார்.  நீதிக்கட்சி  திராவிடர் கழகமாக மாறியது. அதன்பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது, நாகூரில் தி.மு.க கிளை தொடங்கியது முதல் தனது இறுதி மூச்சு வரை கழகத்துடன் இரண்டறக் கலந்திருந்தார்.

பெரியாரிடம் பாராட்டும் பரிசும் வாங்கி யவர். ஹனீஃபாவின் சிம்மக் குரலைச் சுட்டிக்காட்டி ஹனீஃபா அய்யாவுக்கு ஒலி பெருக்கி தேவையில்லை எனக் கூறியதோடு அவருக்கு ஒரு ரூபாய்பரிசும் அளித்து இருக்கிறார் பெரியார்.1953ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர்களின் வறுமையைப் போக்க தி.மு.க தமிழ்நாடு முழுவதும் கைத்தறித் துணிகளை விற்பனை செய்தது. அப்போது அண்ணாவுடன் திருச்சி மக்களிடம் கைத்தறித் துணியை விற்க ஒலிபெருக்கி இல்லாமலேயே தன் வெண்கலக் குரலால் பாடி கைத்தறித் துணி விற்பனையைப் பெருக்கி அண்ணா வின் பெரும் கவனத்தை ஈர்த்தார் இசை முரசு ஹனீஃபா.

நாகூர் ஹனீஃபாவைக் குறித்து 1993ஆம் ஆண்டு முத்து விழா மலரில் கலைஞர் தமது நினைவலைகளில் பின்வருமாறு எழுதியுள்ளார்: ‘அரசியலில் நான் அடியெடுத்து வைத்த சிறு பிராயம் தொட்டு நாகூர் ஹனீஃபாவை அறிவேன். அன்று கேட்ட அதே குரல். வளமிக்க குரல். அனைவரையும் வளைக்கும் குரல். ஆதிக்கக்காரர்களின் செவிப்பறை கிழிக்கும் இடியோசைக் குரல். அந்தக் குரல் மட்டுமே இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவர் நெஞ்சில் பதித்த கொள்கை உறுதியுமன்றோ ஆடாமல் அசையாமல் அப்படியே நிலைத்து நிற்கின்றது. அளவு கடந்த பாசத்தை என் மீது கொட்டி பற்றினை கழகத்தின் மீது காட்டி கழகத்தின் பேரன்பைப் பரிசாகப் பெற்றுள்ள இசை முரசு ஹனீஃபா அவர்களும் நானும் இணைந்து நடத்தும் இலட்சியப் பயணம், இடையூறுகளை சோதனைகளை வேதனைகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது’.

தி.மு.க பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர், மேலவை உறுப்பினர் (MLC), வக்ஃப் வாரியத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். 1957இல் தி.மு.க தேர்தல் அரசியலில் களம் கண்டது. அப்பொழுது கலைஞர் நாகப்பட்டினம் தொகுதியில் நிற்பதற்கு விரும்பினார். ஆனால் அண்ணா அவர்கள் நாகப்பட்டினம் தொகுதியில் இசை முரசு நாகூர் ஹனீஃபாவை வேட்பாளராக அறிவித்து, குளித்தலையை கலைஞருக்கு ஒதுக்கினார். 2001ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வாணியம்பாடித் தொகுதியில் வேட்பாளராக ஹனீஃபாவை நிறுத்தினார்கள். அப்போது திமுக, பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருந்தது. இரு தேர்தலிலும் அவரது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

திராவிடத் தலைவர்களைத் தாண்டி கண்ணியமிகு காயிதே மில்லத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். காயிதே மில்லத் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும்போது, அவர் ஹனீஃபாவைப் பாடச் சொல்லி, அவருடைய பாடலைக் கேட்டு ரசிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த அளவுக்கு நாகூர் ஹனீஃபாவின் ரசிகராக இருந்திருக்கிறார் காயிதே மில்லத்.


1941இல் 15 வயதில் மேடைக் கச்சேரி தொடங்கிய ஹனீஃபா தமிழ்நாட்டில் மட்டு மல்லாமல் உலகில் தமிழ்ப் பெருமக்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும் தமது குரலை ஒலிக்கவிட்டவர். அரசியல் கட்சிக் கூட்டங்கள், மாநாடுகள், மீலாது விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் என்று மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் அவரது கணீர்க் குரல் கம்பீரமாக ஒலித்தது; ஒலிக்கிறது; ஒலிக்கும். வட்ட வடிவ ஒலித் தகட்டில் தொடங்கிய அவரது குரல் இணையம், சமூக வலைதளங்கள் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்தில் அலைப்பேசிவரை வந்து தமிழர்களை உணர்வாளர்களாக வைத்திருக்கிறது. சாதி, மத, அரசியல் பிணக்குகளைக் கடந்த மனித நேயக் குரலாக காற்றலை தவழும்வரை ஹனீஃபாவின் குரல் காலகாலத்துக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.


நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் இசைமுரசு ஹனீஃபாவுக்குக் கண்ணியம் சேர்க்கும் வகையில் நாகூரில் ஹனீஃபா வசித்துவந்த தைக்கால் தெருவுக்கும், நாகூர் சில்லடியில் அமையவுள்ள சிறுவர் பூங்காவிற்கும் இசை முரசு E.M.நாகூர் ஹனீஃபாவின் பெயரைச் சூட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்துள்ளார். நாகூரில் நுழைவு வாயில் அமைத்து அதற்கும் நாகூர் ஹனீஃபாவின் பெயரைச் சூட்ட வேண்டும். அவருடைய பெயரில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இது வரவேற்கத்தக்க முன்னெடுப்பு என்றாலும் திராவிட இயக்கத்தின் குரலாகவும், சமுதாயத்தின் குரலாகவும் ஓயாமல் ஒலித்த நாகூர் ஹனீஃபாவின் பெரும் உழைப்புக்கு இது போதாது. ஹனீஃபாவின் பெயரில் நலிவுற்ற இசைக் கலைஞர்களுக்கு விருது, பள்ளிப் பாடத்திட்டத்தில் ஹனீஃபாவின் வரலாற்றை இடம்பெறச் செய்தல், சென்னை அடையார் அரசு இசைக் கல்லூரிக்கு நாகூர் ஹனீஃபா அவர்களின் பெயரைச் சூட்டுதல், நாகூர் ஹனீஃபா நூற்றாண்டு நூலகம் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங் களையும் அரசு அறிவிக்க வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்