‘நான் இந்த விஷயத்தில் இவ்வாறு முடிவு எடுத்திருக்கலாமே அல்லது அவ்வாறு எடுத்திருக்கலாமே’ என்று புலம்பக்கூடிய மனிதர்கள் அதிகம். தாங்கள் எடுத்த தவறான முடிவைக் குறித்து வாழ்க்கை முழுவதும் சிரமப்படுபவர்களும் உண்டு. தவறான முடிவுகளால் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டவர்களும் உண்டு. ஒரு முடிவு சரியான முடிவாக இருக்குமா? என்று ஆராய்ந்து சிறந்த முடிவை எடுக்க வேண்டும். பெரும்பாலான விவாகரத்துகள் யோசிக்காமல் முடிவெடுப்பதினால் நடக்கிறது. பிறகு நாம் தவறான முடிவு எடுத்து விட்டோமே என்று கவலைப்படுபவர்களும் உண்டு. இது வெறும் திருமண வாழ்க்கையில் மட்டுமல்ல!
மேற்படிப்பிற்காக என்ன படிக்க வேண்டும் என்கின்ற முடிவை யோசிக்காமல் எடுத்துவிட்டு நாம் தவறான முடிவு எடுத்துவிட்டோமோ என வருந்தக் கூடிய மாணவர்களும் உண்டு. வியாபாரத்தில் சரியாக முதலீடு செய்ய வேண்டும் என்பதை யோசிக்காமலேயே முடிவு எடுத்துவிட்டு பிறகு இழப்படைபவர்களும் இருக்கின்றார்கள். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் அவசரப்பட்டு சில முடிவுகளை எடுத்தால் காலம் முழுவதும் சிரமத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும். ஒரு முடிவை எப்படி எடுக்க வேண்டும், எவ்வாறு எடுக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. நூஹ்(அலை) அவர்கள் 950 ஆண்டுகள் பணி புரிந்த போதும் குறைவான எண்ணிக்கையினரே அவர்களை ஏற்றுக் கொண்டனர். அதற்காக அவர்கள் உடனடியாக முடிவு எடுக்கவில்லை. மிக நிதானமாக, உறுதியாக இறுதியில் ஒரு முடிவை எடுத்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் பின் விளைவுகளைத் தெளிவாக ஆய்வு செய்வார்கள். பிறகு (இஸ்திகாரா) செய்வார்கள். அதாவது ஒரு விஷயத்தில் நாம் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் தொழுது பிரார்த்திப்பார்கள். ‘இறைவா, அது எனக்கு நல்லது என்றால், அதை என் பங்காக ஆக்குவாயாக. மேலும் அது தீயதாக இருந்தால், அதில் நன்மை செய்து அதை என் பங்காக ஆக்குவாயாக.’ இவ்வாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்து அதற்கான முடிவுகளைத் தேடுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
நாம் எந்த முடிவை எடுத்தாலும் ஆலோசித்து, யோசித்து நிதானமாக எடுக்க வேண்டும். குழப்பமான சூழல் ஏற்படும்போது இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் செருப்பின் வார் அறுந்தால் கூட இறைவனிடத்தில் பிரார்த்தியுங்கள்’ என்று கூறியுள்ளார்கள். ‘யார் ஆலோசனை செய்து முடிவு எடுக்கின்றார்களோ அந்த முடிவு சிறந்ததாக இருக்கும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் சொல்வது தான் சரி என் கருத்து தான் சிறந்தது என்று வாதாடாமல் பிறருடைய கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் வீட்டில் ஒரு பிரச்னை என்றாலும் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். ஆலோசனை என்பது மிகப்பெரிய விஷயங்களுக்கு மட்டும் அல்ல. எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் நாம் அதை ஆலோசனை செய்ய வேண்டும்.
‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று முடிவு எடுக்கக் கூடாது. நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஆலோசனைகளைப் பெற வேண்டும். அதன் பிறகு இறைவன் மீது நம்பிக்கை (தவக்குல்) வைக்க வேண்டும். அந்த முடிவு சரியாக அமைந்தால் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த முடிவு நமக்குப் பாதகமானால் அல்லாஹ்வுடைய நாட்டம் என்று கடந்து செல்ல வேண்டும். நாம் எடுத்த முடிவு தவறாகத் தெரியும் பட்சத்தில் அதை மாற்றிக் கொண்டு அடுத்த முடிவின்பக்கம் செல்ல வேண்டும். இவ்வாறு முடிவு செய்வதால் வாழ்வின் பல சிக்கல்களிலிருந்து நாம் விடுபட முடியும். எனவே முடிவு எடுப்பதில் நிதானம் கொள்வோம். இறைவனைச் சார்ந்திருப்போம். ஆலோசித்து முடிவெடுப்போம்