மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

பேசத் தயங்கும் கருப்பொருள் காதல்
ஃபாத்திமா ஜலால், 2025 ஜனவரி 16 - 31


 

 

அன்பு, நேசம் என்ற அழகிய பொருள்களைத் தரும் அழகான சொல் காதல். ஆனால் காதல் என்ற சொல்லைக் கேட்டாலே ஏதோ  சொல்லக் கூடாத, பேசக் கூடாத வார்த்தையைப் பேசி விட்டோமா என அச்சப்படும் சூழல் தான் இன்று நிலவுகிறது. காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாகரிங்களே காதல் என்ற உண்மையான அன்பைத் தவறாகப் புரிவதற்குக் காரணமாகிறது.

மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும் மார்க்கமான இஸ்லாம் உண்மையான காதலுக்கும் வழிகாட்டியுள்ளது. ஒழுக்கத்துடன் தூய நேசத்தையும், காதலையும் குறித்து நபிகளார், நபித்தோழர் வாழ்விலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். காதல் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தமும், அந்தக் காதல் எப்படி இருக்க வேண்டும்? எப்போது இருக்க வேண்டும்? திருமணத்திற்கு முன்னரா? பின்னரா? என்ற வரையறைகளை இஸ்லாம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது.

காதல் என்ற பெயரில் நடக்கும் அநாச்சாரங்களைக் களைந்து சமூகத்தைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பேசத் தயங்கும் கருப்பொருள் காதல் என்ற பெயரில் மௌலவி நூஹ் மஹ்ழரி எழுதிய இந்நூலை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT) வெளியிட்டுள்ளது.

இந்நூலில் திருமணத்திற்கு முந்தைய காதல், ஆண் பெண் தனித்திருத்தல், காம உணர்வுடன் நோக்குதல், ஆணுக்கும் கற்பு உண்டு, அந்நிய ஆண் பெண் கலப்பு, நேசிப்பதற்கான அளவுகோல், ஒருவரை விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? கள்ளக்காதல், அத்துமீறுவதால் ஏற்படும் ஆபத்து, திருமணமே அழகு, உண்மைக் காதல் என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும் என்ற  தலைப்புகளில் குர்ஆன், நபிமொழி, நபித்தோழர்களின் வாழ்வியலிலிருந்து அழகான சம்பவங்களுடன் எளிதில் புரிந்து கொள்ளும் நடைமுறை உதாரணங்களுடன் ஆசிரியர் தெளிவாகக் கூறுகிறார்.

முத்தாய்ப்பாக கற்பொழுக்கம் மிக்க சமூகம் கட்டமைக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், எல்லை மீறுவதிலிருந்து பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விழுமங்களையும் பட்டியலிடுகிறார் ஆசிரியர். இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான நூல். படித்துத் தெளிவு பெற வேண்டிய நூல். இளம் தலைமுறையினர், திருமணமானவர்கள், திருமணமாகப் போகிறவர்கள் என அனைவருக்கும் காதலின் உண்மையை உணர்த்துவோம். இறைவனும், இறைத்தூதரும் காட்டிய வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படுவோம்.

 

நூல்: பேசத் தயங்கும் கருப்பொருள் காதல்

ஆசிரியர்: மௌலவி நூஹ் மஹ்ழரி 

வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT),   

138, IFTசந்து, பெரம்பூர்  நெடுஞ்சாலை, சென்னை 600012. 

தொலைப்பேசி: 04426620041 

பக்கங்கள்: 180 

விலை: ரூ. 185/

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்