மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

சலுகை அல்ல உரிமை
  K. ஜலாலுத்தீன், 2025 ஜனவரி 16 - 31


 

 

 

 முதியவர்கள் இந்த நாட்டின் சுமை அல்ல; அவர்கள் இந்த நாட்டை உருவாக்கத் தங்களுடைய இளமையை அர்ப்பணித்தவர்கள். இருபது வயது முதல் அறுபது வயது வரை சுமார் நாற்பது ஆண்டுகள் நேரடியாகத் தம் குடும்பத்தின் நலனுக் காகவும் மறைமுகமாக இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஓயாமல் உழைத்து அரும்பாடுபட்டவர்கள்.

 அடுத்த தலைமுறையைச் செதுக்குவதில் தங்களுடைய அறிவாலும் அனுபவத்தாலும் தம் முதுமைப் பருவத்திலும் பங்களித்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால் இன்று முதிய வர்கள் குடும்பத்தில் சுமைகளாகப் பார்க்கப்படும் அவலம், ஊரெங்கும் முதியோர் இல்லங்கள் பெருகி வரும் அபாயம். தம்முடைய பிள்ளைகளின் நலனுக்காகத் தன் சக்திக்கு மீறி அவர்களை நன்கு படிக்க வைத்து அவர்களுடைய வாழ்வு வளம் பெறத் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர்களின்  முதுமைப்  பருவம்  பேச்சுத் துணைக்குக்கூட யாரும் இல்லாத தனிமை.

 தனிமனிதர்கள்  மட்டுமல்ல  அரசும் முதியவர்களை வாட்டி வதைக்கிறது. அவர்களுடைய இளமைப் பருவத்தில் வருமான வரி கட்டினார்கள், சொத்துப் பதிவுக்கான வரி, வாகன வரி, விற்பனை வரி இப்படி அவர்கள் உழைக்கும் காலத்தில் வருமானத்தில் இருந்து வரி பிடித்தம் செய்ததது மட்டுமல்லாமல் பணி ஓய்விற்குப் பிறகு கிடைக்கும் பணிக்கொடை, ஓய்வூதியம் போன்றவற்றிற்கும் வரி வசூலித்து முதுமையிலும் அவர்களைத் தொந்தரவு செய்வதில் அரசும் பங்கு வகிக்கிறது.

 நீண்ட காலமாக முதியவர்களுக்குக் கிடைத்துவந்த இரயில் பயணக் கட்டணத்திற்கான சலுகைகள் கொரானா காலத்தி லிருந்து ஒன்றிய அரசால் அநியாயமாகப் பறித்துக் கொள்ளப்பட்டது. 70 வயதுக்கு மேல் வாழ்பவர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் கிடையாது. பேருந்துகள், இரயில், விமானங்களில் முழுமையான பயணக் கட்டணத்தையே அவர்களும் செலுத்த வேண்டும். முதியோருக்குச் சேரவேண்டிய கட்டணச் சலுகைகள் இரத்து செய்யப்பட்டதால் 2022 

 23ஆம் ஆண்டில் இரயில்வே துறைக்கு  2,242 கோடி ரூபாய் இலாபம் கிடைத்துள்ளதாக ஒன்றிய அரசு பெருமைப்பட்டுக்கொள்கிறது. இது சலுகை அல்ல முதியவர்களின் உரிமை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

நீண்ட காலமாக முதியவர்களுக்குக் கிடைத்துவந்த இரயில் பயணக் கட்டணத்திற்கான சலுகைகள் கொரானா காலத்திலிருந்து ஒன்றியஅரசால் அநியாயமாகப் பறித்துக் கொள்ளப்பட்டது.நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பயனளிக்கக்கூடியதாக ஆட்சி நிர்வாகம் அமைய வேண்டும். அதுதான் மக்கள் நல அரசாகத் திகழமுடியும். ஆனால் வாய்ப்புக் கேடாக கடந்த சில ஆண்டுகளாக முதியவர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 ‘முதியோரை மதிக்காதவரும் சிறியோர் மீது அன்பு செலுத்தாதவரும் நம்மைச்  சேர்ந்தவர் அல்ல’ என்றார்கள் நபிகளார் (ஸல்) அவர்கள்.

 முஹம்மது நபி(ஸல்) அவர்களின்  தோழர் உமர்(ரலி) அவர்கள் இஸ்லாமியக் குடியரசின் தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை நேரடியாகச் சென்று விசாரித்து அவற்றுக்குத் தீர்வு காண்பது அவருடைய வழக்கமாக இருந்தது.ஒரு முறை கலீஃபா (இஸ்லாமியக் குடியரசுத் தலைவர்) உமர்(ரலி) அவர்கள் கடைத்தெருவில் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு முதியவர் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். காணப் பொறுக்கவில்லை ஆட்சியாளர்  உமர்(ரலி)  அவர்களுக்கு. 

ஓடோடிச் சென்று அந்த முதியவரின் கைகளைப் பிடித்தார். அந்த முதியவர் யாரென்று விசாரித்தார். அவர் தன் ஆட்சி யின் எல்லைகளுக்குட்பட்ட முஸ்லிமல்லாத குடிமகன். ஆட்சியாளர் உமர்(ரலி) அவர்கள் அவர் இரந்துண்டு வாழ்வதன் காரணத்தைக் கேட்டார். அந்த முதியவர் இப்படிப் பதில் தந்தார்:

 ‘எனக்குத் தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. என்னால் என் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட உழைத்திட இயலவில்லை, இதனால் தான் நான் என் தேவைகளை நிறைவு  செய்ய  யாசகம்  கேட்டுக்  கொண்டிருக்கின்றேன்’.

 கண்ணீர் ஆட்சியாளரின் கண்களில்! பின்னர் அந்த இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்படிக் கூறினார், ‘பெரியவரே! நாங்கள் உங்களிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. நீங்கள் இளைஞராக இருந்து உழைத்த நேரத்தில், உங்கள் உழைப்பிலிருந்து வரி வசூலித்த நாங்கள் நீங்கள் உழைக்க முடியாத நாள்களில் கவனிக்காமல் விட்டு விட்டோமே!’

 தழுதழுத்தக் குரலில் இப்படித் தன்னைத்தானே  கடிந்து  கொண்ட  ஆட்சியாளர் முதியவரின் கண்கள் பனிப்பதை உணர்ந் தார். 

அவரைத் தன் இல்லம் நோக்கி அழைத்து வந்தார். தனக்குத்தானே பரிகாரம் தேடிடும் அளவில் தம் கைகளாலேயே உணவு தயாரித்து அவருக்குத் தந்தார். அவர் உண்பதை மகிழ்ந்து பார்த்தார். பின்னர் அது போன்ற மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த ஆணை பிறப் பித்தார்.

 இதனால்தான் நம் தேசத்தந்தை காந்தி விடுதலை இந்தியாவில் உமரைப் போன்ற ஆட்சியாளர்கள் தேவை என்றார். மூத்த குடிமக்களைச் சுமையாகக் கருதாமல் அவர்களுடைய உரிமைகளை மீண்டும் வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அப்படிச் செயல்படும் அரசே மக்கள் நல அரசாக இருக்க முடியும்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்