இன்றைய காலச்சூழலில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் படித்துப் பட்டம் பெறும் நிலைக்கு உயர்ந்து விட்டார்கள். பெண்கள் அதிகப்படியாக வேலைகளையும் தேடிக் கொள்கிறார்கள். திறம்பட அதில் சிறந்தும் விளங்குகிறார்கள். ஆனால் அல்லாஹ் காட்டிய வழிமுறையான திருமணம் என வரும்போது இன்றைய சூழலில் முன்பில்லாத அளவு விவாகரத்துகள் அதிர்ச்சி அளிக்கும் அளவிற்கு அதிகரிப்பது கவலை அளிக்கிறது.
கணவன் மனைவி என்பது இருவர் மட்டுமல்ல அதுவே குடும்பம்; அதுவே சமூகம். எனவே நோயின் தீவிரம் வீரிய மாகும் முன்பே மிக வேகமாக, விவேகத் தோடு தீர்வு காண்பது அவசியம். எங்கே தவறு நிகழ்கிறது என்பதைக் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
திருமணத்திற்கு முன்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் இருக்கும். உதாரணத் திற்கு வரவேற்பு முறையிலிருந்து உணவு, உபசரிப்பு என எல்லாம் மிகவும் வேறுபாடுஉடையது. அண்டை வீடாக இருந்தாலும் சரி! இந்த நிலையில் பிறந்தது முதல் ஒரே வகையான சூழலில் வாழ்ந்த பெண் முற்றிலும் மாறுபட்ட மேலும் புதிய உறவுகள் நிறைந்த சூழலுக்குள் தன்னைப் பொருத்தி நகர்த்திச் செல்வதற்கு மிகவும் சிரமப்படவேண்டி உள்ளது. அதே நேரம் மணப்பெண்ணின் குடும்பம் மட்டும் திருமண கொடுக்கல் வாங்கல், வரவேற்பு, பத்திரிகை, சீதனம் என எல்லாவற்றிலும் உள்ள குறைகளைக் குத்திக்காட்டும் நெருக்கடியான சூழலில் இளம்பெண் தள்ளப்படுவதை விட சிக்கல் வேறு என்ன இருக்க முடியும்?
ஏனோ இங்கு ஒரு பெண்ணை பொறுப்பேற்று திருமணம் முடித்த ஆண் இதனைக் கண்டு கொள்வது இல்லை. இது பக்குவமில்லாத மணமகனின் நிலையையும் குடும்பத்தின் நிலையையுமே தெளிவாகக் காட்டுகிறது.
‘உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும், மேலும், உங்களுடைய ஆண் பெண் அடிமைகளில் நல்லவர் களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் வறியவர்களாயிருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை தனவந்தர்களாக்குவான். அல்லாஹ் மிகவும் விசாலமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.’ (திருக்குர்ஆன் 24:32)
இங்கே மணமகனின் தாய் மணப்பெண்ணின் நிலையில் தான் எதிர்கொண்ட சவால்களை எண்ணி கருணையோடு மருமகளைப் பார்க்கத் தவறி விடுகிறார். இதில் கூடி நிற்கும் உறவுகள் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுப்பதற்குப் பகரமாக நம் ஊரின் சீர், அவர்களின் ஊரின் சீர்களைப் பட்டியலிட்டு இல்லாத வகைகளை எல்லாம் அடுக்கி பெரும் பாவத் தைச் சம்பாதிப்பதையே அதிகம் காண்கிறோம்.
இவ்வாறாகத் தொடங்கும் இல்லற வாழ்வு பெண்ணின் இதயத்தில் திருமண நாளுக்கு முன்பே ஒருவகையான பயத்தையும், வெறுப்பையும் உருவாக்கிவிடுகிறது. பிறகு நடக்கும் ஒவ்வொரு மனக்கசப்பும் வெறுப் பைப் பலப்படுத்தி விரிசலாக மாற உதவுகிறது. இறுதியில் இரண்டு மாதங்கள்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் தாய் வீட்டிற்குத் தானாக தள்ளப்பட்டு விடுகிறாள்.
வழிகாட்டுதல்கள்
பெரும்பாலும் மன முறிவுக்குப்பிறகே மனநல ஆலோசகர்களை நாடுவது பழக்கமாக உள்ளது. உண்மையில் திருமணத்திற்கு முன்பே திருமண வழிகாட்டுதல்களை வழங்குவது விவாகரத்துச் சூழலை முற்றிலும் வராமல் காக்க உதவும். பலவற்றைக் கருத்தில் கொண்டு திருமணத்தை முடிவெடுக்கும் பெற்றோர்கள் இளம் தலைமுறையினரின் எண்ண ஓட்டங்கள், விருப்பு வெறுப்புகள், எதிர் காலக் கனவுகள் குறித்து பரஸ்பர கலந்தா லோசனைகளைச் செய்து தெளிவான புரிதலை உருவாக்க குடும்ப நல ஆலோசனை மையத்தில் திருமணத்திற்கு முன்னரான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் பெற வேண்டும்.
திருமணமாக இருப்பவர்கள் பொறுப்பேற்கும் குடும்பப் பொறுப்பின் முக்கியத்துவங்களையும் ஒருவருக்கு ஒருவர் அமானிதம் என்பதையும் மிகத் தெளிவாகப் புரிய வைத்து, திருமணம் எனும் பந்தத்தில் அவர்களுக்கான வட்டத்தில் வேறு எந்த ஒருவரும் தலையிடுவது அனுமதியற்றது, அவர்களுக்கான உணர்வுப்பூர்வ முடிவு களை அவர்களாகவே இணைந்து செயல் பட்டு வெற்றி காண வேண்டும் எனப் புரிய வைப்பது அவசியமாகும்.
புதிய தம்பதியரின் உரிமைகளில் மற்றவர்கள் தலையிடாமல் இருப்பது அவசியம். கணவன், மனைவி இருவருக்குமான கடமைகள், உரிமைகள் ஆகியவற்றை விளக்குவதும், அவர்களுக்கு ஆலோசனை களை வழங்குவதும் இரு வீட்டார் தரப்பி லிருந்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்முயற்சியாகும். புதிய தம்பதியினரின் எதிர்காலத் திட்டத்தை வகுப்பதுடன், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிதலுடன் நடப்பதைக் குறித்தும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கலாம்.
‘ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதõனம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை; எந்நிலையிலும் சமாதானம் செய்து கொள்வதே நலம் தரக்கூடியதாகும். மனித உள்ளங்கள் குறுகிய எண்ணத்திற்கும் உலோபித்தனத்திற்கும் (விரைவாக) உட்பட்டுவிடுகின்றன. ஆனால், நீங்கள் இஹ்ஸான் நன்முறையில் வாழ்ந்து, இறையச்சத்தோடு செயல்படுவீர்களானால் திண்ணமாக அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்’ (திருக்குர்ஆன் 4:128)
இரு குடும்பத்தாரும் இன்றைய புதிய சூழலில் அவர்கள் சிக்கல் இல்லாமல் சிறப்பாக வாழ வாழ்த்தும் மனநிலையோடு நல்ல ஆலோசனைகளைக் கூறி சுதந்திர மனப்பான்மையோடு செயல்பட உதவுவதே சிறந்ததாகும்.