மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

டாக்டர் K.V.S. ஹபீப் முஹம்மத்
தீ விபத்து தண்டனையா? பாடமா?, 1-15 பிப்ரவரி 2025


 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 15,000 கட்டடங்கள் தீக்கிரையாகி விட்டன. 160 கிலோ மீட்டருக்குத் தீ பரவியிருக்கிறது. 1,80,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள். இதனை மீண்டும் கட்டமைக்க வேண்டுமென்றால் 150 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என கணித்துள்ளார்கள்.

இந்தப் பெரும் விபத்து குறித்து நாம் அனுதாபம் தெரிவிக்க வேண்டும். நமது பிரார்த்தனைகளைப் புரிய வேண்டும். அதைவிடுத்து தேவையற்ற வாதங்களைப் புரிவது ஏற்புடையதல்ல. இது இறைவன் அமெரிக்கர்களுக்குக் கொடுத்த தண்டனை என்று சொல்பவர்களுக்கு அது இறைவனின் தண்டனைதான் என்பது எப்படித் தெரியும்? இறைத்தூதர்கள் வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற தண்டனைகள் இறங்கின. இறைவனிடமிருந்து செய்தி வருகின்ற காரணத்தால் இறைத்தூதர்கள் அது இறைவனின் தண்டனை என்று சொன்னார்கள். ஆனால் நாம் எப்படிச் சொல்ல முடியும்?

இந்த நேரத்தில் இப்படியெல்லாம் பேசுவது மனிதாபிமானமற்ற செயல். ஒரு தீயவன் துன்பத்திற்கு ஆளானாலும் கூட அவனுக்கு ஆறுதல் கூறுவார்களே தவிர, ‘நீ செய்த அநியாயத்திற்கு உனக்கு இந்தத் துன்பம் வேண்டும். நன்றாக அனுபவி’ என்று சொல்ல மாட்டார்கள். பாவம் செய்தவர் ஒருவர் மரணித்தால் அவருடைய வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறி அவருடைய பாவங்களை இறைவன் மன்னிக்க வேண்டும் என்றுதான் பிரார்த்திப்பார்களே தவிர ‘இவன் சாக வேண்டியவன் தான்’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

பிறர் துன்பத்தைக் கண்டு நாம் மகிழக் கூடாது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பிறர் துன்பத்தைக் கண்டு மகிழாதீர்கள். இறைவன் அவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றிவிட்டு உங்களைத் துன்பத்தில் ஆழ்த்தி விடலாம்’ அமெரிக்கா வியட்நாமை அழித்தது, ஹிரோஷிமா, நாகசாகியில் குண்டுமழை பொழிந்து அழித்தது, வளைகுடாப் போரில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்றது. ஃபலஸ்தீன மக்களை அழித்தொழிக்க இஸ்ரேலுக்குப் பக்க பலமாக இருந்தது. இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது? இவர்களுக்காக நாம் எப்படி இரக்கப் டாக்டர் ஓ.ங.கு. ஹபீப் முஹம்மத்பட முடியும்? என சிலர் நினைக்கலாம்.

அமெரிக்க அரசு செய்த தவறுகளுக்கு அமெரிக்க மக்கள் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்? ஃபலஸ்தீனிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அமெரிக்கர்களும் இருக்கின் றார்களே..! பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் கல்வியைப் பொருட்படுத்தாமல் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாகப் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அரசு செய்த தவறுக்கு லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?

தமக்குக் காலமெல்லாம் கொடுமை இழைத்த மக்காவாசிகள் பஞ்சத்தில் தவித்த போது நபி(ஸல்) அவர்கள் உணவுப் பொருட்களை அனுப்பி உதவினார்கள். சிலுவை யுத்தத்தில் சுல்தான் ஸலாஹுதீன் அய்யூபியின் தலைமையில் முஸ்லிம்கள் ஜெருசலத்தை வெற்றி பெற்றார்கள். அப்போது தொழுநோயால் பாதிக்கப்பட்ட எதிரிப்படைத் தளபதி ரிச்சர்டுக்கு உதவ முன் வந்து தனது மருத்துவரை அனுப்பி வைத்தார் ஸலாஹுதீன் அய்யூபி.

அமெரிக்காவுக்குச் சில கேள்விகள்

உலக வல்லாதிக்க நாடான உங்களிடம் பணமும், ஆயுதமும், தொழில்நுட்பமும், அதிகாரமும் குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதனை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்குப் பதில் அழிவுக்குத்தான் பயன்படுத்துகின்றீர்கள். பிற நாடுகளுடைய விவகாரங்களில் நீங்கள் தலையிடுகின்றீர்கள். உங்கள் நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் நீங்கள் பிற நாடுகளில் எதேச்சதிகார ஆட்சியாளர்களை அதிகாரத்தில் அமர்த்துகின்றீர்கள். அங்கு பொம்மை அரசுகளை உருவாக்குகின்றீர்கள்.

உங்களுக்குக் கட்டுப்படாத ஆட்சியாளர்களைக் கொலை செய்கின்றீர்கள், தண்டிக்கின்றீர்கள். இரு நாடுகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி ஆயுதம் வழங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு வராது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா? வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். உங்களுக்கு முன் கொடுமை புரிந்த எதேச்சதிகாரிகளின் நிலை என்னவாயிற்று என்று பாருங்கள்.

இவ்வளவு வலிமை பெற்ற நாடாக நீங்கள் இருந்தும் இந்தத் தீயை அணைக்க உங்களால் முடியவில்லை. உதவிக்கு மெக்சிக்கோ, கனடா வருகிறது. ஈரான் உதவத் தயாராக இருப்பதாகக் கூறுகிறது. இறைவனுடைய வல்லமைக்கு முன்னால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகத்திற்கு நீங்கள் தலைமை ஏற்க விரும்பினால் உங்கள் செல்வத்தாலும், தொழில்நுட்பத்தாலும் தேவையுடைய நாடுகளுக்கு உதவுங்கள். கொடுமை புரியும் ஆட்சியாளர்களை நீங்கள் நேரடியாகத் தண்டிக்காமல் ஐ.நா சபை உதவியுடன் அந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்துங்கள். இந்தத் தீ விபத்திலிருந்து நீங்கள் பாடம் பெறுங்கள்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்