மது இரண்டாவது இன்னிங்ஸை, பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டு, கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
கடந்த முறை தேர்தலில் தோற்று அதை ஏற்றுக் கொள்ளாமல் தரையில் புரண்டு அழாத குறையாக அழிச்சாட்டியம் செய்து தம் ஆதரவாளர்களைத் தூண்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரத்தை நிகழ்த்திய பெருமை அமெரிக்க வரலாற்றில் அவருக்கு மட்டுமே உண்டு. அந்த அக்கிரமக் கூத்தை எல்லாம் தாண்டி, இம்முறை அவர் அடைந்துள்ள வெற்றி வெறுமே வெற்றி அல்ல. அபார வெற்றி. இதுவும் அமெரிக்க வரலாற்றில் அவருக்கான தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
பதவியேற்ற கையுடன் கையெழுத்திட்டு அவர் அறிவித்துள்ள சட்டங்களும் திருத்தங்களும் அதிரடி. எவற்றையெல்லாம் தேர்தலில் வாக்குறுதியாகத் தெரிவித்து வாக்குக் கேட்டாரோ அவற்றையெல்லாம் கடகடவென்று நிறைவேற்றி வருகிறார் அவர். வியப்பிலும் திகைப்பிலும் விரிந்துள்ளன மக்களின் விழிகள். கடந்த மூன்று நாள்களில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒவ்வொன்றும் ஆயிரம் வாலா பட்டாசு. அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.
பிறப்புரிமைச் சட்டத் திருத்தம்
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்நொடியே அமெரிக்கக் குடியுரிமையை வழங்கி விடுகிறது. பெற்றோர் எந்நாட்டவர் என்பதை அது பொருட்படுத்துவதில்லை. அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு, 1868ஆம் ஆண்டு ஜூலை மாதம் காங்கிரஸ் 14ஆவது திருத்தச் சட்டத்தை அங்கீகரித்தது, அடிமைகளாகப் பாதிக்கப்பட்டுக்கிடந்த கருப்பு நிறத்தவர்களுக்கு முழுமையான குடியுரிமைகளை வழங்கு வதற்காக உருவாக்கப்பட்டது அந்த சட்டத் திருத்தம். பெற்றோர்களின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல், அமெரிக்காவில் பிறந்த குழந்தையா, அது அமெரிக்கர் என்று எளிதாக அச்சட்டம் வரையறுத்தது.
அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாக குடியுரிமையை அள்ளித் தந்துவிட முடியாது என்று அச்சட்டத்திற்கு இப்பொழுது திருத்தத்தை வெளியிட்டுள்ளார் ட்ரம்ப். குழந்தை பிறக்கும்போது பெற்றோரில் ஒருவர், சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் தங்கியிருந்து மற்றவர் அமெரிக்கராகவோ, சட்டப்பூர்வமாகக் குடியிருப்பவராகவோ (அதாவது கிரீன் கார்ட் உள்ள வராகவோ) இல்லாதபட்சத்தில் அக்குழந் øதக்குக் குடியுரிமை இல்லை. அதேபோல், பெற்றோரில் ஒருவர் சுற்றுலாப் பயணியாக, மாணவராக, தொழில் விசாவில் உள்ளவராக இருந்து, மற்றவர் அமெரிக்கராக இல்லாவிட்டாலும் குழந்தைக்குக் குடியுரிமை தரப்படாது. இதுதான் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள திருத்தம். பல மாநிலங்கள் இந்தப் பிறப்புரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளன. அதன் தீர்ப்பு என்னாகும் என்பது பிறகு. இப்பொழுது அதன் விளைவுகள் என்ன? அமெரிக்காவில் வசிக்கும் பல நாட்டினருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக H1-B எனும் தொழில் விசாவில் உள்ள பெரும்பாலான இந்தியர்கள் இனி பிறக்கவிருக்கும் தங்கள் பிள்ளைகளுக்குத் தானாகக் கிடைக்க வேண்டிய அமெரிக்கக் குடியுரிமை வாய்ப்பை இழந்துவிடுவர். H1-B விசாவில் உள்ளோரில் 72 விழுக்காட்டினர் இந்தியர் என்பது இங்கு கவனத்திற்குரியது. அது மட்டுமின்றி, ட்ரம்பின் வெறுப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முக்கியமான ஒன்று இந்த H1-B விசா திட்டம்.
அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்குவோம் Make America Great Again (MAGA) என்பது ட்ரம்பின் தாரக மந்திரம். அதை உச்சாடனம் செய்வதற்குக் குழு உண்டு. அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் H1-B விசாவைப் பயன்படுத்திக் குறைந்த செலவில் சல்லிசாக வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்; விளைவாக, அமெரிக்கத் தொழிலாளர்களை அது பாதிக்கிறது என்பது Mஅஎஅ குழுவின் முக்கியமான குற்றச்சாட்டு. 2022ஆம் ஆண்டு Pew Research Centre வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்காவில் அனுமதியற்ற குடிவரவு மக்கள் தொøகயினர் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளவர்கள் இந்தியர்கள். அதில் அவர்களது எண்ணிக்கை 7,25,000. ட்ரம்ப் பதவியேற்ற அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ருபியோ, இந்திய வெளியுறவுச் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் இதைப் பற்றி விவாதித்துள்ளார். உடனே மோடி தலைமையிலான இந்திய அரசு அமெரிக்காவில் உள்ள அனுமதியற்ற இந்தியக் குடிமக்களை அடையாளம் கண்டு திரும்ப அழைத்துக்கொள்ளும் என்று தெரிவித்து விட்டது.
முந்தைய தேர்தலில் ‘ஆப் கி பார் ட்ரம்ப் சர்க் கார்’ என்று ட்ரம்புக்கு ஆதரவாக இந்தியப் பிரதமர் மோடி ஹூஸ்டன் நகரில் பரப்புரை செய்தது நமக்கு இங்கு பெட்டிச் செய்தி.
பறிபோகும் சமவாய்ப்பு
DEI - Diversity, Equity, Inclusion (பன்முகத் தன்மை, சமத்துவம், உள்ளடக்கல்) என்பது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள முக்கியமான திட்டம். ஒடுக்கப்பட்ட, கருப்பின சமூகங்கள் DEI. வெள்ளையர்களுடன் போட்டியிட்டுத் தொழில், வேலைகளில் சம வாய்ப்புக் கிடைக்கப் பெறாமல் இருந்த அவலத்தைக் களைய உருவாக்கபட்டது பணியிடங்களில், கல்விக்கூடங்களில், அனைவரும் நிற, மத, கலாச்சார, பால் வேற்றுமையின்றி ஒன்றிணைந்து செழித்தோங்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம். அத்திட்டம் அளிக்கும் பயிற்சிகள் கலாச்சார வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்கும் அந்த வேறுபாடுகளையே ஒரு பாலமாக ஆக்கிக்கொள்வதற்கும் பணியாளர்களைப் பயிற்றுவிக்கின்றன. இத்திட்டத்தினால்தான் இந்தியர்களும் பிற நாட்டினரும் பல மதத்தவரும் இங்கு பாகுபாடின்றி கற்கவோ, பணியாற்றவோ, வெற்றி ஈட்டவோ முடிகிறது.
அமெரிக்காவுக்கும் பல தரப்பு வல்லுநர்களின் அறிவும் உழைப்பும் முதலீடாகிறது. ஆயினும், இடுக்கு இல்லாத திட்டம் என்று ஏதாவது உண்டா என்ன? சிறுபான்மையினருக்கும் சலுகை என்று இத்திட்டத்தில் உள்ள அம்சத்தின் அடிப்படையில் LGBTQ எனப்படும் முறைகேடான பாலியலாளர்களுக்கும் ஏராளச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவர்களது அந்தப் பாவச் செயல்களும் யதார்த்தம் என்று சமத்துவம் பேசி சகஜமாக்கப்படுகிறது.
அது ஒருபுறமிருக்க DEI காரணமாக அமெரிக்கர்களுக்கு, வெள்ளையர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது; சமத்துவம் என்ற பெயரில் வேறுவித சமத்துவமின்மை நடைபெறுகிறது என்பது இத்திட்டத்தை எதிர்ப்பவர்களின் கடுமையான விமர்சனம். ‘DEI என்பது இனவெறிக்கு மற்றொரு சொல்லே. இதைப் பயன்படுத்தும் யாருக்கும் வெட்கமே இல்லை வாஸ்தவத்தில், பாலினம், இதர பல காரணிகளின் அடிப்படையில் ஈஉஐ பாகுபாட்டையே விளைவிக்கிறது; இது ஒழுக்கக்கேடு மட்டுமன்று, சட்டவிரோதமும் கூட’ என்று வெளிப்படையாக எழுதியுள்ளார் ட்ரம்ப்பின் அத்தியந்த நண்பராக ஆகியுள்ள முன்னாள் ட்விட்டர், இந்நாள் x எலான் மஸ்க். தென் ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடிமகனான எலான் மஸ்க்கின் மனத்தின் உள்ளே குடியிருக்கும் வெள்ளையர் மேலாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு இது என்பது விமர்சகர்களின் கருத்து.
உலகம் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதில்லை. நாடு, நிறம், மதம், வளர்ப்பு அடிப்படையில் பாதிக்கப்படும் மக்களிடம் உள்ள சிறப்புத் தகுதியை மேம்படுத்தி, நியாயமான முறையில் அவர்கள் வாய்ப்புகளைப் பெற்றிட DEI உதவுகிறது. இத்திட்டத்தைப் பின்பற்றாமல் நிறுவனங்கள் விலகுமேயானால் அம்மக்களுக்கு வாய்ப்புகள் பறிபோகும் என்று கவலை தெரிவித்துள்ளார் மெர்க் நிறுவனத்தின் முன்னாள் CEO கென் ஃப்ரேசியர்.
இத்திட்டத்தையும் தூக்கி வீசியுள்ளார் ட்ரம்ப். ‘பொது வாழ்க்கை, தனி வாழ்க்கை அனைத்திலும் வெவ்வேறு சமூகத்தையும் பாலினத்தையும் ஒரே சமூகமாக வடிவமைக்கும் அரசாங்கக் கொள்கையை நான் முடிவுக்குக் கொண்டு வருவேன். நாம் நிற பேதமற்ற திறமை அடிப்படையிலான ஒரு சமூகத்தை உருவாக்குவோம். இன்று முதல், இனி அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக ஆண், பெண் என இரு பாலினங்கள் மட்டுமே உள்ளன’ என்று தமது பதவியேற்பு உரையிலும் அறிவித்து விட்டார் அவர்.
ட்ரம்ப் பதவிக்கு வருவதை அறிந்ததுமே, வால்மார்ட், மெக்டொனால்ட்ஸ், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா தங்கள் நிறுவனம் DEI கொள்கையிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்து விட்டன. பாலின முறைகேடர்களை இது பாதிக்கும் என்பதிருக்க, தகுதிகளும் திறமையும் உள்ள மற்றவர்களும் இதனால் சம வாய்ப்பின்றி பாதிப்புக்கு உள்ளாவர்; குறிப்பாகக் கருப்பினத்தவரும் சிறுபான்மையினரும்!
முந்தைய தேர்தலில் ட்ரம்பின் தோல்விக்குப் பிறகு ஏற்பட்ட அதகளத்தின் போது அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து கட்டுப்பாடுகளை விதித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், ட்ரம்ப் பதவியேற்கும் முன்பே அவருடன் இணக்கம் பேண DEI கொள்கையைக் கை கழுவுவதாக அறிவித்து விட்டார். பணம், காசு என்று வந்த பின் கொள்கையாவது, மண்ணாவது! ஃபேஸ்புக் அளிக்கும் இலவச கணக்கில் இயங்கிய படி மார்க்கிடம் அறம் எதிர்பார்க்கும் நம்மூர் சமூகப் போராளிகளுக்கு இதில் குறிப்பு உள்ளது.
ட்ரம்ப்போ, வெறுமே அறிவிப்புடன் நின்று விடாமல், ஜனவரி 22 மாலை ஐந்து மணியுடன் ஈஉஐ கொள்கைக்காகப் பணியாற் றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் ஓய்வளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். ஜனவரி இறுதிக்குள் அவர்களை நிரந்தரமாக வேலையிலிருந்து நீக்கும் திட்டம் அமல்படுத்தப்படும். இது எத்தனை இலட்சம் அமெரிக்க அரசு ஊழியர்களைப் பாதிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. சிவில் உரிமைகள் குழு இதை எதிர்த்து வழக்காட முடிவு செய்துள்ளது.
ஆப்கனியர்கள் இனி?
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கப் பøடகளுக்குப் பல ஆப்கனியர்கள் உதவி செய்தனர். அவர்களுக்கும் ஏற்கெனவே அமெரிக்க இராணுவத்தில் பணியில் உள்ள ஆப்கனியர்களின் குடும்பத்தினருக்கும் அமெரிக்காவில் குடியேற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ட்ரம்ப் அத்திட்டத்தையும் குப்பைக் கூடைக்குள் எறிந்து விட்டார். ஆப்கனில் இருந்து பயணத்திற்குத் தயாராக இருந்த விமானங்கள் இரத்தாகி சுமார் 1660 ஆப்கனியர்கள் அதிர்ச்சியில் நிலைகுலைந்துள்ளார்கள். அமெரிக்கா அவர்களுக்கு வாக்களித்த அடைக்கலம் காலாவதியாகி, இங்கும் வர முடியாமல், சொந்த நாட்டினருக்கு எதிராக உதவிய குற்றத்திற்கு அங்கு அவர்களுக்கு என்ன தீர்ப்பு கிடைக்கும் என்பதும் தெரியாமல் அநிச்சய நிலையிலும் அச்சத்திலும் உள்ளனர். இங்கும் அங்குமாகப் பிரிந்துள்ளன அக்குடும்பங்கள்.
ட்ரம்ப் பற்ற வைத்துள்ள மற்றும் பல பட்டாசுகள் இன்னும் சப்தமாக வெடித்தபடி உள்ளன. அடுத்து இவரது ஆட்சியில் அமெரிக்காவினுள் என்னென்ன மாற்றங்கள் நிகழும்; எந்தளவு வெள்ளை நிற வெறி மேலோங்கும் என்பது பலரது மனத்தில் எழுந்துள்ள கவலைக்குரிய கேள்விக் குறி. ஆனால், தமது இன்னிங்ஸ் நான்கு ஆண்டுகளுடன் முடிந்து விடும் என்பதை அறிந்துள்ள ட்ரம்ப் தமக்கே உரிய பாணியில் தொடர்ந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாகவிளாசப் போகிறார் என்பது மட்டும் ஐயத்திற்கு இடமற்ற உண்மை.