மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

யார் இந்தப் பெரியார்? கட்டுரை குறித்த கலந்துரையாடல்
சேயன் இப்ராகிம், 1-15 மார்ச் 2025


 


சமரசம் பிப்ரவரி 115 இதழில் ‘யார் இந்தப் பெரியார்’ என்றதலைப்பில் நான் எழுதிய கட்டுரை மிகப் பரவலான அளவில் வாசகர்களைச் சென்றடைந்துள்ளது. கட்டுரையாளர் என்ற முறையில் இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை ஆதாரமின்றி தரக்குறைவான முறையில் விமர்சித்ததிற்குப் பதில் கொடுக்கும் வகையிலேயே இந்தக் கட்டுரையை எழுதினேன். சமரசம் வாசகர்கள் மட்டுமின்றி இந்தக் கட்டுரையை சமூக வலைதளங்களில் படித்த பலரும் இது மிகச் சிறப்பான நடுநிலை மாறாத ஒரு பகுப்பாய்வு எனப் பாராட்டியுள்ளனர்.

வேலூரைச் சேர்ந்த ஆசிரியர் மா.சுரேஷ் இக்கட்டுரை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுவும் பரவலான கவனத்தைப் பெற்றது.கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொறுப்பாளர்கள் என்னிடம் அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பெரியார் குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை மிகச் சிறப்பான முறையில் இருப்பதாகவும், இது குறித்த ஒரு கலந்தாய்வுக் கூட்டம் 11.02.25 (செவ்வாய்) அன்று சத்தியச் சோலை சார்பாக நடைபெறவிருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் எனக்கு அழைப்பு விடுத்தார்கள்.

அதனை ஏற்றுக் கொண்டு நான் அந்தக் குறிப்பிட்ட தேதியில் கும்பகோணம் சென்று அந்தக் கலந்தõய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். சுமார் 50 பேர் கலந்து கொண்ட அந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் சரி பாதியினர் சகோதர சமயத்தைச் சார்ந்தவர்கள். குறிப்பாக பெரியார் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பற்றுறுதி கொண்டவர்கள். கூட்டத்தில் நான் முதற்கட்டமாக சுமார் 15 நிமிடங்கள் எனது கருத்துகளை முன் வைத்தேன். அதில் தமிழ் தேசியம் என்பது திராவிட தேசியத்தின் உள்ளடக்கமே என்றும், திராவிடம் என்ற சொல் வரலாற்றுக் காலம் தொட்டு வழங்கப்பட்டு வருவதையும், திராவிட தேசியத்தையும், தமிழ் தேசியத்தையும் எதிர் எதிரே நிறுத்துவது தேøவயற்றது என்றும், பெரியார் சமூக நீதிக்காகப் பாடுபட்டது குறித்தும், பெரியாரை விமர்சிக்கும் சீமானின் உள்நோக்கம் குறித்தும் பேசினேன். பின்னர் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். பிற தேசியத் தலைவர்கள் கூட சாதிய அடையாளத்தைப் பெற்றிருக்கும் சூழலில், பெரியார் மட்டுமே சாதிய அடையாளத்தைப் பெறாத தலைவர் என நான் அக்கட்டுரையில் எழுதியிருப்பதை ஓர் அன்பர் சுட்டிக் காட்டிப் பேசினார். பெரியாரும் அம்பேத்கரும் சமூக நீதிக் கொள்கைக்காகப் போராடிய இரு பெரும் தலைவர்கள் என்றும் வேறு சில அன்பர்கள் குறிப்பிட்டனர்.

அதன் பின்னர் நிறைவுரையாற்றிய நான், பெரியாரும் அம்பேத்கரும் இந்து சமயத்தின் சாதியக் கட்டமைப்பையும், தீண்டாமையையும், மூடக் கருத்துகளைப் பரப்புகின்ற புராணங்களையும், இதிகாசங்களையும் கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்த நிலையில், இந்துத்துவவாதிகள் அம்பேத்கரை இந்து தேசியவாதி என்று தற்போது கொண்டாடி வருவது நாட்டிலுள்ள 20 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ள பட்டியலின மக்களின் வாக்குகளைக் கவரவே என்றும், பெரியாருக்கு அத்தகைய வாக்கு வங்கி இல்லாத காரணத்தால் அவ ரைத் தூற்றுகின்றனர் என்றும், இடஒதுக்கீடு முறையில் தரம் குறைந்து போகிறது என்று பேசியும் எழுதியும் வந்த உயர் சாதியினர் தற்போது ஒன்றிய அரசு வழங்கியுள்ள பொருளாதார நிலையில் பின்தங்கியோருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை எந்த விதமான கூச்ச நாச்சமுமின்றிப் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாய்ப்புகளில் பயனடைந்து வருவதையும், இந்தப் பத்து விழுக்காடு இடஒதுக்கீட்டில் வருபவர்கள் பட்டியலின மக்களை விடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களே என்றும், பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்தும், முஸ்லிம்களின்  கோரிக்கைகளுக்காகப் பெரியார் குரல் கொடுத்ததையும் விரிவாகப் பேசினேன்.

இந்த நிகழ்ச்சியினை கும்பகோணம் சத்தியச் சோலை பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தனர். சமரசம் இதழில் நான் கடந்த 17 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருந்த போதிலும், பெரியார் குறித்த இந்தக் கட்டுரை வாசகர்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்தும், அது தொடர்பாக ஒரு கலந்துரையாடல் கும்பகோணத்தில் நடைபெற்றது குறித்தும் ஒரு கட்டுரையாளர் என்ற முறையில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமரசத் திற்கும் எனது நன்றிகள்!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்