மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ரமளானின் நோக்கமும் அடைகின்ற வழிமுறைகளும்
A.R. கமருன்னிசா ஜாஃபர் அலீ, 1-15 மார்ச் 2025




ஒவ்வொரு முஸ்லிமுக்கும் புத்துணர்வைத் தரக்கூடிய ஈமானையும் இறையச்சத்தையும் புதுப்பிக்கக்கூடிய இதயத்திற்கு இதமான மகிழ்ச்சியான மாதம் ரமளான் மாதம். ரமளான் அருள்வளம் மிக்க மாதம். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவித்த மாதம். சுவனம் திறக்கப்படும் மாதம். நரகம் மூடப்படும் மாதம். அத்தகைய அருள் மாதத்தை எதிர்பார்த்து நபி(ஸல்) அவர்கள் தயாராவதுடன், தமது தோழர்களையும் தயார் செய்தார்கள். ‘யா அல்லாஹ்! ரமளானை அடைந்து கொள்ளும் நற்பாக்கியத்தை தந்தருள்வாயாக!’ எனப் பிரார்த்தனை செய்தார்கள்.

‘மக்களே உங்கள் மீது மகத்தான நற்பேறுகள் நிறைந்த மாதம் நிழலிட இருக்கிறது. இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஒரு கடமையான செயலை நிறைவேற்றினால் மற்ற மாதங்களில் 70 கடமைகளை நிறைவேற்றிய நற்கூலியைப் பெற்றுத்தரும்’ என இதயத்திற்கு மகிழ்ச்சியூட்டும் செய்திகளை நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

ஏதோ காலச் சுழற்சி காரணமாக ரமளான் மாதம் வந்திருக்கிறது அதனால் நோன்பு நோற்கிறோம் என்றில்லாமல் உள்ளத்தைத் தூய்மையாக்கி ரமளானை எதிர்கொள்ள வேண்டும். நன்மைகளைக் குவிக்க வேண்டும். நோன்பாளிகள் மட்டுமே நுழையக்கூடிய ரய்யான் வாசல் வழியாகச் சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆசையோடு ரமளானை அணுக வேண்டும்.

எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக மழை பெய்தாலும் பாத்திரத்தின் கொள்ளளவுக்கு ஏற்பவே மழை நீர் நிரம்பும். அதுபோல ரமளான் மாதத்தில் எவ்வளவுதான் அருள் வளங்களும் இறைக் கருணையும் பாவமன்னிப்பும் மழையாகக் கொட்டினாலும் உள்ளத்தின் கொள்ளளவைப் பொறுத்துதான் நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். எனவே ரமளானுடைய நோக்கத்தையும், சிறப்புகளையும், புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

ரமளானின் நோக்கம்

ஈமானுக்கும் நோன்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. ஈமானை வளர்க்கவும், வளப்படுத்தவும் தான் ரமளான் மாதம் வருகிறது. இறை வேதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் இறக்கியருளப்பட்டது. இறைவன் ஒருவனே என்னும் உணர்வு உள்ளத்தில் ஆழமாக ஊடுருவினால் தான் நம்மால் இறைவனுக்கு அஞ்சி வாழ முடியும். அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய முடியும். இறைவன் விரும்புகின்ற பண்புகளை வளர்த்தெடுக்க முடியும். அவன் வெறுக்கின்ற பண்புகளிலிருந்து விலகி வாழ முடியும்.

‘இறை நம்பிக்கையாளர்களே உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப்) பின்பற்றியவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாய்த் திகழக்கூடும்’. (திருக்குர்ஆன் 2:183)

ரமளானின் நோக்கத்தை அடைவதற்காக முழு முயற்சி மேற்கொள்ள  வேண்டும். நோன்பு, தொழுகை, குர்ஆன் ஓதுதல், ஜகாத் இவை அனைத்தும் நோக்கமல்ல. அவை நோக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள்.  நோன்பின் நோக்கம் இறையச்சம் ஆகும். நோன்பின் நோக்கம் குறித்து நபி(ஸல்) அவர்கள் ‘வெறுமனே உண்ணாமலும் பருகாமலும் இருப்பதல்ல நோன்பு. தீமையானவற்றிலிருந்தும் மானக்கேடானவற்றிலிருந்தும் விலகி இருப்பதாகும்’ என்று குறிப்பிடுகின்றார்கள்.

‘நீங்கள்  நோன்பிருக்கும்  போது உங்களுடன் ஒருவர் தர்க்கித்தால் நான் நோன்பிருக்கின்றேன் என்று கூறிவிடுங்கள்’ என  நபி(ஸல்)  அவர்கள்  கூறியுள்ளார்கள். ஒவ்வொரு  ரமளானிலும் இறைவன் வெறுக்கின்ற பண்புகளையும், இறை நம்பிக்கைக்கு ஒவ்வாத விஷயங்களையும் விட்டுவிட்டு இறை நெருக்கத்தைப் பெற்றுத் தருகின்ற பண்புகளை மேலோங்கச் செய்ய வேண்டும்.

வழிமுறைகள்

  • திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட ரமளான் மாதத்தில் இரவு தொழுவதுடன் குர்ஆன் ஓதுவதன் மூலம் இறை உவப்பைப் பெறும் நோக்கத்துடன் சுயமதிப்பீடு செய்தும் இதயம் மகிழ இனிய ரமளானை அனுபவிப்போம்.
  • ஷரீஅத் வழங்கியுள்ள சலுகை இல்லா மல் நோன்பை நோற்காமல் இருக்கக் கூடாது. வாழ்நாள் முழுவதும் நோன்பு நோற்றாலும் ஈடு செய்ய இயலாத ரமளானில் நோன்பு முழுவதையும் நோற்போம்.
  • ஹலாலான உணவும் உடை யும் மட்டுமே அன்றி ஹராமான எதுவும்  இரைப்பைக்குள்ளும் வெளியேயும் இருந்து விடாமல் கவனம் செலுத்துவோம்.
  • இறை உவப்பை அடையும் நோக்கத்துடனேயே  ஜகாத், பிஃத்ரா என இறைவழியில் செலவு செய்தும் பாவங்களிலிருந்து விலகி வாழ்வேன் என கண்ணீர் சிந்தி ரமளான் மாத இரவு வணக்க வழிபாடுகளிலும் திக்ரு, துஆ, பாவமன்னிப்புக் கோருதல் என சரியான முறையிலும் ரமளானை மன மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம்.
  • திருக்குர்ஆனை  உள்ளச்சத்தோடு நேர் வழி அடைய வேண்டும் என்ற எண்ணத் துடன் ஓதியும், பிறருக்குக் கற்றுக் கொடுத்தும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய வர்களாகவும் மாறுவோம். ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனத்தை அடைய முயல் வோம்.

சிந்தனை மாற்றமே தனிமனித சீர்திருத்தத்திற்கான சிறந்த வழி என்னும் புரட்சி மாற்றத்தை நிகழ்த்திய ரமளான் என்னும் புரட்சிகரமான மாதத்தை நம் வாழ்வில் உற்சாகத்தையும் வசந்தத்தையும் ஏற்படுத்துவதற்கான உன்னத காலமாகப் பயன்படுத்தி ஈருலக வெற்றியை அடைவோமாக..!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்