நம் வாழ்வில் மீண்டும் ஒரு ரமளான். இது மாற்றத்திற்கான மாதம். வெறுப்பு, கோபம், அதிருப்தி, பகைமை, பொறாமை, தவறான எண்ணம் முதலான அசுத்தங்களைக் களைந்து சுத்தமான உள்ளம் கொண்ட வர்களாக நம்மை மாற்றிக் கொள்ளக்கிடைத்த அருமையான காலம் ரமளான்.
பொய், புறம் பேசுவதில், கோள் சொல்லு வதில், சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுவதில், பிறருடைய உள்ளத்தைப் புண்படுத்துவதில், வீண் பேச்சுகள் பேசுவதில், வீணாண காரியங்களில் பங்கேற்பதில், அரட்டை அடிப்பதில், மொத்தத்தில் நோன்பின் பயனைக் கெடுக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடõமல் நம்மைத் தடுக்கும் கேடயம் ரமளான்.
கடந்த காலங்களில் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, ரமளான் மாதத்தை அடைந்து, அவனுக்காக நாம் நோன்பு நோற்றோம். பல்வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டோம். அதன்மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா? என்பதைச் சுய ஆய்வு செய்து இந்த ரமளாøனப் பயனுள்ளதாகக் கழிக்க நாம் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நோன்பு நம்மைத் தீய நடவடிக்கைகளிலிருந்து தடுக்க வேண்டும். நல்ல வழிகளில் நடைபோடத் தூண்ட வேண்டும். ரமளானிலும் நாம் மற்ற மாதங்களில் செய்வது போன்றே தீய செயல்களைத் தொடர்வோமேயானால், நமது ஈமான் வலுப்பெறாது. வழிபாடுகளைச் செய்வதற்கும், மன அமைதியைப் பெறுவதற்கும், அதன் மூலம் இறையச்சத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கும் ரமளான் மாதமும், அதில் நாம் நோற்கும் நோன்பும் ஓர் அரிய வாய்ப்பாகும்.
ரமளானை நாம் மிகச் சரியாகப் பயன் படுத்தவில்லை என்றால் நம்மை விட வாய்ப்புக்கேடானவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள்.
எண்ணத்தைத் தூய்மையாக்குவோம்செயல்களால் அடைய முடியாததை அழகிய எண்ணத்தால் அடைந்து கொள்ள முடியும். இந்த உலகம் நான்கு வகையான மனிதர்களுக்கு பாக்கியமானதாகும். ஓர் அடியாருக்கு அல்லாஹ் அறிவு (மார்க்க) ஞானத்தையும், நிறைவான பொருளாதாரத்தையும் வழங்கி இருக்கின்றான். அல்லாஹ் வழங்கிய அந்த அருட்கொடைகளைக் கொண்டு அவர் அல்லாஹ்வை அஞ்சி வாழ்கிறார், உறவுகளைப் பேணி வாழ்கிறார், அல்லாஹ்விற்காக மேற்கொள்ள வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதையும் அறிந்து வைத்துள்ளார் எனில் அவர் உயர் அந்தஸ்துகளைப் பெற்றவராவார்.
இன்னொரு அடியார், அல்லாஹ் அவருக்கு அறிவு (மார்க்க) ஞானத்தை வழங்கி பொருளாதாரத்தை வழங்காமல் விட்டிருப்பான். அந்த அடியார் உண்மையான எண்ணத்தோடு, ‘எனக்கும் அல்லாஹ் இன்ன அடியாரைப் போன்று பொருளாதாரத்தை வழங்கி இருந்தால் அவரைப் போன்றே நானும் நல்லறங்கள் செய்திருப்பேன்’ என்று சொல்கிறார் எனில் அவருடைய உயர்வான எண்ணத்தைக் கொண்டு இவரும் நன்மையில் அவருடன் சமமாக்கப்படுவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி
‘உங்கள் உள்ளங்களில் (சிறிதளவாவது) நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிவானாகில், உங்களிடமிருந்து வாங்கப்பட்டதை விடவும் சிறப்பானதை அவன் உங்களுக்கு வழங்குவான். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்’ (திருக்குர்ஆன் 8:70)
‘இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்’ (திருக்குர்ஆன் 48:18)
சரியான எண்ணம்தான் அச்செயலை நன்மையானதாக மாற்றும் எனவே நாம் எண்ணத்தைச் சீராக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாவமன்னிப்புக் கோருவோம் பாவங்களிலிருந்து விலகி பாவமன்னிப்புக் கோருவதற்கான சிறந்ததோர் மாதமாக ரமளானை அல்லாஹ் ஆக்கியுள்ளான்.
‘நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி
இம் மாதத்தை அடைந்த பின்னரும் யார் தமது பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறவில்லையோ அவர் தான் மனிதர்களில் மிகப் பெரிய நஷ்டவாளி.
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; தூய்மையான பாவமன்னிப்பு! விரைவில் அல்லாஹ் உங்கள் தீமைகளை உங்களைவிட்டு அகற்றவும் செய்யலாம்; மேலும் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் படியான சுவனங்களில் உங்களைப் புகுத்தவும் செய்யலாம். அது எப்படிப்பட்ட நாளெனில், அன்று அல்லாஹ் தன்னுடைய தூதரையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் இழிவுபடுத்த மாட்டான். அவர்களின் ஒளி அவர்களுக்கு முன்னாலும், அவர்களின் வலப்பக்கத்திலும் பாய்ந்து கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறிக் கொண்டிருப்பார்கள்: எங்கள் அதிபதியே! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்கித் தருவாயாக! மேலும், எங்களை மன்னிப்பாயாக! திண்ணமாக, அனைத்தின் மீதும் நீ பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றாய்!’ (திருக்குர்ஆன் 66:8)
கலப்பற்ற முறையிலான பாவமன்னிப்பு என்பதற்கு அறிஞர்கள் விளக்கமளிக்கையில் ‘கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக வருந்தி வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டேன் என்று உறுதியேற்று நிகழ்காலத்தில் பாவங்களை விட்டுத் தூரமாவது தான் தவ்பதுன் நஸூஹா (தூய்மையான பாவமன்னிப்பு)’ என்று கூறியுள்ளார்கள். (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )
இந்த ரமளானைத் தூயத் எண்ணத்துடன் அணுக வேண்டும். பயன்பெற வேண்டும். பாவ மன்னிப்புப் பெற்று தூய்மையடைய வேண்டும். ரமளான் அருளப்பட்ட நோக்க மும் அதுதான்.