கலீஃபா உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் சுவனம் அறிவிக்கப்பட்ட பத்து நபித்தோழர்களில் ஒருவர். இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் இறைவனின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் நூல் வடிவில் தொகுக்கப்பட்டது. இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் கடற்படை உருவாக்கப்பட்டது. உஸ்மான்(ரலி) அவர்கள் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தபோதிலும் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். இவர் மிகவும் மென்மையானவரும் அதிகக் கூச்ச சுபாவமும் உடையவர். வானவர்களும் இவரைக் கண்டு நாணம் கொள்வார்கள் என்று நபிகளாரால் சிறப்பித்துக் கூறப்பட்டவர்.
வறுமைக்கு அஞ்சாமல் இறைவனுக்காக, நன்மைகளுக்காகச் செலவு செய்பவர்களில் உஸ்மான்(ரலி) முன்னிலையில் இருந்தார். உஸ்மான்(ரலி) ஆட்சியில் ஈரான், வடக்கு ஆப்ரிக்கா, சிரியா, சைப்ரஸ் ஆகிய நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன. பொது நிதிக்கான வருமானம் பெருகிய போது அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கினார். நபி(ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு கலீஃபாக்களின் வரிசைத் தொடரில் இந்நூல் உஸ்மான்(ரலி) அவர்களின் வாழ்வு குறித்த நிகழ்வுகளை ஆதாரப்பூர்வமான தகவல் களுடன் முழுமையாகக் கூறுகிறது.
உஸ்மான்(ரலி) அவர்களின் வரலாறு ஒரு பொக்கிஷம் போன்றது. இதில் சமூகத்திற்கான சிந்தனை, கலாச்சாரம், கல்வி, போராட்டம் நாடுகள் வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்வுகள் பிற சமூகங்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற பாடங்கள் பொதிந்து கிடக்கின்றன. இவரது அரசியல் கொள்கை உயரிய நீதியின் அடிப்படையில் அமைந்திருந்தது. தவறு செய்த ஆளுநர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது. உஸ்மான்(ரலி) அவர்கள் இவ்வுலக வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள உஸ்மான்(ரலி) அவர்களின் படுகொலை மிகவும் உருக்கமாகவும் நெகிழ்வாகவும் எழுதப்பட்டுள்ளது. இதைப் படித்து முடிக்கும் போது நம்மையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிகிறது. தன்னைப் பாதுகாப்பதற்காக குடிமக்கள் யாரும் இரத்தம் சிந்தக் கூடாது என்பதைக் கட்டளையாகப் பிறப்பித்து பெரும் கொந்தளிப்பு ஏற்படாமல் மரணத் தருவாயிலும் கவனமாகச் செயல் பட்டார்.
டாக்டர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி எழுதிய இப்புகழ்பெற்ற நூலை மௌலவி நூஹ் மஹ்ழரி அழகு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது!
நூல்: உஸ்மான்(ரலி)
ஆசிரியர்: டாக்டர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி
தமிழில்: மௌலவி நூஹ் மஹ்ழரி
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT), 138, IFT சந்து, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 600012.
தொலைப்பேசி: 04426620041
பக்கங்கள்: 632
விலை: ரூ.750