மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

உண்ணா நோன்பு ஓர் இலக்கியப் பார்வை
அ. அப்துல் சத்தார், 16-31 மார்ச் 2025


 


‘இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்’ (திருக்குர்ஆன் 2:183)

இதற்கு முன்பு வாழ்ந்த சமுதாயத்தினர் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பதை திருக்குர்ஆனின் இந்த வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. சங்க காலத்திலும் உண்ணா நோன்பு நடைமுறையில் இருந்துள்ளது. வஞ்சினம் கூறிய பொழுது நோன்பிருப்பது பழந் தமிழர் மரபு. பதிற்றுப்பத்து பாடலில்

‘மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது உண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக் கண்ணி கண்ணிய வயவர்..’
ஆறாம் பத்து 8: 5.8

பொருள்: மண்ணால் புனையப்பட்ட மதிலை வெற்றி பெற்றுக் கடந்தல்லது நாளை உணவு உண்ண மாட்டோம் என்று வஞ்சினம் கூறுகின்றனர். அதாவது வெற்றி பெற்ற பிறகு தான் உணவை உண்போம் என்கிறார்கள் வீரர்கள்.

திருமூலர் திருமந்திரத்தில்

உடம்பா ரழியிற் உயிரா லழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவு மாட்டார்.
உடம்பினை வளர்க்கும் உபாய மறிந்தேன்
உடம்பினை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!’

பொருள்: உடம்பு நோய்களால் அழிந்தால், உயிரால் அழியும். எனவே உடம்பை வளர்க்கும் உபாயமறிந்து, உடம்பினை நோய்களுக்கு ஆளாகாமல், அழியாமல் உடம்பை வளர்ப்பதன் மூலம், உயிரையும் வளர்த்தேனே என்கிறார்.

‘பிண்டம் சுருங்கின் பிராணன் நிலை பெறும்.
உண்டி சுருங்கின் உபாயம் பலவுள’

பொருள்: உடல் சுருங்க, சுருங்க, குறையக் குறைய உடலுக்கு அழிவில்லை. உணவு சுருங்க உபாயம் பலவுண்டு. அதாவது மனிதனது செயற்கை உணவாகிய அனைத்து சமைத்த உணவு களையும் உண்டு வாழ்வதால், பிண்டம் (உடல்) பருத்துக்கொண்டே போகிறது. அதன் விளைவாக, மரணமும் விரைவில் ஏற்படுகின்றது.

இயந்திரகதியில் வாழ்க்கையை நடத்தும் மக்கள் விவரம் அறியாமல், ‘வெந்ததைத் தின்போம், விதி வந்தால் சாவோம்’ என, நோயையும் மரணத்தையும் இயற்கைக்கு மாறான தவறான உணவுப் பழக்கங்களால் வரவழைத்துக் கொள்கின்றனர்.

சித்த மருத்துவம் நோன்பை ஊக்குவிக்கிறது.  இன்றைய அலோபதி மருத்துவமும் உணவுக் கட்டுப்பாட்டைக் கட்டாயப்படுத்துகிறது. லங்கணம் பரம ஔஷதம் என்கிறது சித்த மருத்துவம். அதற்குப் பொருள் நோயுற்ற பின் அந்த நோயைக் குணப்படுத்தும் நோக்கோடு பட்டினி கிடப்பதற்கு லங்கனம் என்று பெயர். அவசேதம் என்றால் மருந்து. அதாவது பட்டினியைச் சிறந்த மருந்து என்று பொருள் தருகிறது சித்த மருத்துவம்.

‘தேடி உண்டு விட்டுக் குறை தீரும் வரை உபவாசம்’ என்பதும் வழக்கான பழமொழி! பொதுவாக பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் காய்ச்சலுக்கு மாத்திரை விழுங்கும் பழக்கம் நமக்கு இருக்கவில்லை, பட்டினியுடன் சில மூலிகை கஷாயம் குடிப்பதே வழக்கம், இதனை சுரத்திற்கு (காய்ச்சலுக்கு) ஒரு சிகிச்சையாக அகத்தியர் வரையறுத்துள்ளார். அவை,

அகத்தியர் வைத்தியம் இரண்டாயிரம் பாடல்கள்;

வாதமான சுரமானால் மருவும் பட்டினி மூன்றாகும் சூது பித்த சுரமாகில் ஒன்றேயாகு முபவாசம் சீதமான சுரமாகில் செய்ய நாளே யேழாகும்மாதே சுரத்தின் குத்தம் வர வருத்த வேண்டாம் மருந்து
(சுர நிதானம் பாடல் 24)

பொருள்: வாத சுரத்திற்கு மூன்று நாள்கள் பட்டினி போட வேண்டும். பித்த சுரத்திற்கு ஒரு நாள் உபவாசம் இருந்தால் போதும். கபத்தால் வந்த சுரத்திற்கு ஏழு நாள்கள் உபவாசம் இருத்தல் வேண்டும். ஆகவே சுரத்திற்கு மருந்து களைக் கொடுத்து குற்றத்தை உண்டாக்க வேண்டாம்.

தொக்கமுமாய் மூத்தோர் தூரத்திற் சுமந்தோர் மத்த
மிக்க பாரிடித்தோர் பின்னை
விஷமுண்டோ ரய்யமே றோ
ரக்கெனக் காமத்தையா லடியுண்டோர்
சிறியோர் மூத்தோர்
ரிக்கண மொழியாகேளாயிவர்க்கு லங்கன மாகாதே
பாலகர் கிழவர் தாது பாவிய நட்டர் கண்ணில்
சீலகோ யுனோர் மத்தச் சயங்கோண்டோர் கிரணியாளர்
சாலமுன் வழி நடந்தோர் தாங்கு
கர்ப்பிணி சேர்மாதர்
காலமாயிவர் களுக்கெல்லாங்
கடியலங்க கனமாகாதே
(சுர நிதானம் பாடல் 2526)

பொருள்: வயது முதிர்ந்தோர், வழி நடந்தோர், பாரத்தைச் சுமந்தவர், விஷம் உண்டவர், உடலுறவு கொண்டவர், சிறு குழந்தை, கர்ப்பிணி, வயது முதிர்ந்தவர்கள், கிராணி உள்ளோர், க்ஷயம் உள்ளோர், இவர்களுக்கு உபவாசம் பலன் அளிக்காது. பட்டினி என்று சொன்னாலே நாம் புரிந்து கொள்வது இந்த முதல் வகை பட்டினியைத்தான். ஏகாதசியோ, ஈஸ்டர் நோன்போ, ரமளானோ இடையிடையே வயிற்றைப் பட்டினி போட சில நாள்களைக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. மருத்துவமும் கூட இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருக்கப் பரிந்துரைக்கிறது. வயிற்றுக்கு மாதம் ஓரிரு முறை விடுமுறை அளிப்பது மாயாஜாலம் போல் நம் உடலில் பல நல்ல வளர்சிதை மாற்றங்களை ஊக்குவிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. Detox எனப்படும் விஷமுறிவு இடையிடையே வயிற்றைப் பட்டினி போடுவதால் உந்தப்படுகிறது.

எல்லா மதங்களிலும் உபவாச விரதம் அல்லது உண்ணா நோன்பு சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. இந்துக்கள் ஏகாதசி போன்ற குறிப்பிட்ட தினத்திலோ, வெள்ளிக்கிழமை போன்ற குறிப்பிட்ட கிழமைகளிலோ, சில விசேஷ நாள்களிலோ சாப்பிடாமல் உபவாச விரதம் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் ரமளான் மாதத்தில் உண்ணா நோன்பு இருக்கிறார்கள். அது அவர்களுக்குக் கடமையாக்கப்பட்டிருக்கிறது. கிறித் தவர்களும் உபவாசம் இருந்து ஜெபிப்பதை விசேஷமானதாக எண்ணுகிறார்கள்.

சமஸ்கிருதத்தில்  ‘உப’  என்றால் அருகில் என்று பொருள். ‘வாசம்’ என்றால் வசித்தல் அல்லது இருத்தல் என்று பொருள். சிலர் இறையருளைப் பெறவும், தங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவும், புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், மன வலிமையை மேம்படுத்திக் கொள்ளவும் உபவாச விரதம் இருக்கிறார்கள். அவரவர்களின் சக்திக்குத் தகுந்தவாறு உணவு நீர் உட்கொள்ளாது இருப்பது விரதம் உபவாசம் எனப்படுகிறது. இன்றைக்கு உலகில் பல பண்டிகைகள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கொண்டாடப்படுகிறது, ஆனால் இஸ்லாம் மட்டும் தான் பட்டினி கிடந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகையைக் கடைப்பிடிக்கின்றது.

ஆன்மாவை உள்ளிலும் வெளியிலும் பரிபூரணமாக சுத்திகரிக்கிற ஒழுக்கத்தின் அடிப்படையிலான ஒரு வேள்விதான் நோன்பு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதகுலம் கடைப்பிடித்து வருகிற நோன்பு நோற்கும் முறை ஒவ்வொரு மதத்திலும் வேறுபட்டுக் காணப்படினும் குறிப்பிட்ட ஒரு குறிக்கோளை முன்வைத்தே நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருவதை வரலாற்றில் காண்கிறோம். கிரேக்கர்கள் தங்கள் அறிவை வளர்ப்பதற்காக நோன்பிருந்திருக்கிறார்கள். தங்களது கடவுளின் ஓவியத்தை வரைவதற்கு முன் ரஷ்யர்கள் நோன்பிருந்தார்கள். மூஸா நபி தன் இறைவனைக் காண்பதற்காக தூர்சினா மலையில் நோன்பிருந்ததாக விவிலியம் சொல்கிறது. தாவூத்(அலை) அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு இருந்ததாக வரலாறு கூறுகிறது.

உலகத்தில்  பசித்திருந்த  சமுதாயம் தான் பெரு வெற்றிகளைப் பெற்றுள்ளது. பாரசீகர்கள் ரோமானியர்கள் ஆகியோர் முஸ்லிம்களின் படையெடுப்புகளின் போது தோல்வியுற்றார்கள். உணவின்றி தாக்குப் பிடிக்க முடியாமல் முஸ்லிம்களிடம் சரணடைந்தார்கள். பிரெஞ்சு மாவீரன் நெப்போலியன் ‘எனது ராணுவத்தில் முஸ்லிம்கள் நிறைந்திருந்தால் என்னால் வெற்றிக்கனிகளை எளிதாகத் தட்டிப் பறிக்க முடியும். ஏனென்றால் நீண்ட நேரமாக உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் இருக்கிற கட்டுப்பாடு அவர்களிடம் இருக்கிறது’ என்கிறார். பிரான்ஸ் நாட்டின் மதத் தலைவரான கோலம் போன் என்பவர் ராணுவ வீரர்கள் நாள்தோறும் நோன்பு வைக்க வேண்டும் என கட்டுப்பாட்டை விதித்து இருந்தார். விவேகானந்தரும் ஆன்ம பலம் அதிகரிக்க பசித்திரு என்று கூறியுள்ளார்.

நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே என்று பாடுகிறான் பாரதி.

அதாவது ‘நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன் பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத் தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன?’ என்று வியக்கிறான் பாரதி.

மற்ற மதங்கள் எல்லாம் நோன்பைக் கடமை ஆக்கவில்லை. அங்கீகரிக்கவில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும் தான் நோன்பை மார்க்கக் கடமையாக அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் அண்டை வீட்டார் பசித்திருக்க  தான்  மட்டும்  உண்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல என்ற நபிகளாரின் பொன்மொழிகள் நிலை நிறுத்தப்படுவதால் உலகத்தில் பசி ஒழிந்து கொண்டு வருகிறது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்