விடியலின் முன்னே விழித்தெழுந்து, ஸஹர் செய்து, ஃபஜ்ர் தொழுது , பசித்திருந்து, தாகித்து, இச்சைகளைக் கட்டுப்படுத்தி, இரவில் நின்று வணங்கி, திருக்குர்ஆனைத் தினமும் ஓதி நோன்பிருந்த அழகிய அருள் நிறைந்த நாள்கள் நம்மைக் கடந்து செல்கிறது. இந்த ரமளான் நம்மிடம் பல செய்திகளை விட்டுச் செல்கின்றது. அதனை நாம் பற்றிப் பிடித்து பின்பற்ற வேண்டும். ரமளான் நம்மிடம் சொல்லிச் சென்ற செய்திகளில் சில!
மனக்கட்டுப்பாடு
உணர்வுகளை, மன இச்சைகளை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நோன்பு நமக்குக் கற்றுத் தந்தது. இதனால் நோன்பின் போது பாவங்களை விட்டு நாம் விலகி இருந்தோம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் ரமளானில் கைவிட்ட பாவங்களை ரமளான் முடிந்த பிறகு மீண்டும் மற்ற மாதங்களில் தொடர்வதைப் பார்க்கிறோம். மனிதன் பாவத்தின் பக்கம் நெருங்கும் போது படைத்த இறைவனுக்குப் பயந்து அதை விட்டு விடுவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான செயல். இந்த இறையச்சத்தை நம்மிடத்தில் விதைப்பதுதான் ரமளானுடைய முக்கியமான நோக்கம். நோன்பு நோற்கும் போது உணவோ பானமோ நம்முடைய தொண்டையில் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாகவும் கட்டுப்பாட்டோடும் இருக்கிறோமோ அதே போன்று நம்முடைய வாழ்க்கையிலும் அல்லாஹ் தடுத்த காரியங்களைச் செய்து விடக்கூடாது என்பதில் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அந்தக் காரியத்தை உள்ளம் எவ்வளவு விரும்பினாலும் அல்லாஹ் அதனைத் தடுத்திருக்கிறான் என்பதற்காக அதை விட்டு விடுவதும், ஒரு காரியத்தை உள்ளம் எவ்வளவு வெறுத்தாலும் அல்லாஹ் அதை விரும்புகிறான் என்பதற்காகச் செய்வதுமே மனக்கட்டுப்பாடாகும். இதுவே நோன்பு நமக்கு அளித்த பயிற்சியாகும். இறைவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற சிந்தனை நோன்பு நோற்றிருக்கும் போது மட்டுமல்லாமல் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும்.
நற்செயல்கள்
தொழுகையைப் பேணுதல், குர்ஆன் ஓதுதல் போன்ற நல்லமல்களை ரமளானில் மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் செய்யக் கூடியவர்களாக நாம் மாற வேண்டும். நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பத்திற்குரிய செயல் எது என்று கேட்கப்பட்டபோது, ‘குறைவாகச் செய்தாலும் தொடர்ச்சியாகச் செய்யும் நல்லறங்களே’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே நல்லமல்களை ரமளானுக்குப் பிறகும் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும்.
பின் இரவுத் தொழுகைகள் அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கி வைக்கக்கூடிய ஒரு சிறந்த அமலாகும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்’ என்று கூறுவான். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி), நூல் புகாரி: 1145
ரமளானில் எப்படி இரவுத் தொழு கையிலும் துஆச் செய்வதிலும் ஆர்வம் காட்டினோமோ அதே போன்று ஏனைய நாள் களிலும் இரவு நேர தஹஜ்ஜத் தொழுகையைத் தொடர வேண்டும்.
நாவடக்கம்
‘நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள்த் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ’நான் நோன்பாளி! ’ என்று இருமுறை கூறட்டும்!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கெட்ட பேச்சுகள், பிறரைப் புண்படுத்துவது, பொய், கோள், புறம் ஆகியவற்றைப் பேசக்கூடிய நாவு மனிதனை இலகுவாக நரகத்திற்குக் கொண்டு சென்றுவிடும் எனவே தான் நோன்பாளி இவற்றில் ஈடுபடக்கூடாது என்று நபியவர்கள் கூறினார்கள். ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டும் நல்ல அமல்கள் செய்வதற்காக ரமளான் பயிற்சி தரவில்லை. அடுத்து வருகின்ற பதினோரு மாதங்கள் எப்படி வாழ்வைக் கழிக்க வேண்டும் என்பதற்கான அற்புதமான பயிற்சியை ரமளான் வழங்கிச் செல்கிறது.
ரமளானில் நிறைந்து காணப்படும் பள்ளி வாசல்கள் மற்ற மாதங்களிலும் அதே போல் இருக்க வேண்டும் என்றால் நாம் ரமளானில் பெற்ற பயிற்சிகளைத் தொடர வேண்டும். அப்போதுதான் நாம் இறையச்சமுள்ள நல்லடியார்களாக மாற முடியும். அதைத்தான் ரமளான் நம்மிடம் அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறது.