உலகம் இன்று மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. வளரும் நாடுகளுக்கு மட்டுமின்றி வளர்ந்த நாடுகளுக்கும் பொரு ளாதாரம் மிகப்பெரும் சவாலாக உள்ளது. இந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு இஸ்லாம் காட்டும் அழகிய பொருளாதாரத் திட்டம்தான் ஜகாத். வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய கடமையாக இஸ்லாம் ஜகாத்தை வலியுறுத்தியுள்ளது. ஜகாத்தைச் சரியாகக் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டுமென்பதில் கண்டிப்பும், கட்டாயமும் இருப்பதனால் எவரும் இக் கடமையை தவிர்க்க முடியாது.
‘அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட உரிமை இருக்கிறது, யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும்..’ திருக்குர்ஆன் 70:24,25
வறுமையை அகற்றும் ஜகாத்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஏழைகள் சிரமப்படாமல் இருப்பதற்காக அவர்களுக்குத் தேவையான அளவு தொகையை வசதி படைத்த இஸ்லாமியர்களின் செல்வத்தில் இறைவன் கடமையாக்கி இருக்கின்றான். ஏழைகள் பட்டினியாலோ, ஆடை இன்றியோ சிரமப்படுகின்றார்கள் எனில் அது செல்வந்தர்களின் கஞ்சத்தனத்தால் மட்டுமே ஏற்படுகின்றது. அறிந்து கொள்ளுங்கள்! அவர்களை இறைவன் மிகக் கடுமையாகக் கேள்வி கேட்பான். மிகக் கொடூரமான வேதனையும் அவர்களுக்கு உண்டு’ (தபரானி)
சமூகத்தில் ஏழை, எளியவர்கள் அநாதைகள், விதவைகள் போன்றோரின் நிலைமைகளைக் கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைவதற்கு வசதி படைத்தவர்கள் தங்களின் ஜகாத் நிதியைச் சரியான முறையில் பங்கீடு செய்தால் நாட்டில் வறுமை ஒழிந்து போகும். வறுமை ஒழிப்பை இது போன்ற துல்லியமான திட்டங்களின் மூலமே வகுக்க முடியும்.
வட்டியை அகற்றும் ஜகாத்
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள்! இறைவனுக்கு அஞ்சுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும்’. (திருக்குர்ஆன் 3:130)
ஏழை முதல் பணக்காரர்கள் வரை வட்டி எனும் பெரும்சுழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். உலக அளவில் இயங்கி வரும் எல்லாத் தொழில் நிறுவனங்களும் வட்டியை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகிறது. இதனால் பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதில்லை. மாறாக மென்மேலும் சுரண்டலும், கொள்ளையும் தான் அதிகரிக்கும். இனியொரு பக்கம் வறுமையினால் வட்டியில் வீழ்ந்து அதிலிருந்து மீளமுடியாமல் தற்கொலைகளும் அதிகரிக்கின்றன. இதுபோன்ற பெரும் பிரச்னைகளை ஒழிப்பதற்காகத்தான் ஜகாத் எனும் உயரிய திட்டத்தை இறைவன் வகுத்துத் தந்துள்ளான்.
வறுமையினால் வட்டியில் வீழ்பவர்கள் ஒருபுறமென்றால் ஆடம்பர வாழ்வுக்காக வட்டி வாங்குபவர்களும் இருக்கின்றார்கள். இறைவன் ஒரு போதும் அவர்களை விருத்தியடையச் செய்ய மாட்டான். ஏழைகளுக்குச் சிறு உதவித்தொகை வழங்குவதனால் அவர்களுடைய அன்றையத் தேவையைப் போக்க முடியுமே தவிர வறுமையிலிருந்து அவர்களை முழுமையாக மீட்டெடுக்க முடியாது. ஏழைகளின் எதிர்பார்ப்பே சுயமாகச் சம்பாதிப்பதற்கான மூலதனங்களை வேண்டி நிற்பதுதான். அதனால் அவர்கள் வட்டியின் பக்கம் செல்கின்றனர்.
இவ்வாறு சிரமப்படும் ஏழைகளின் மூலதன உதவியாக அவர்கள் சொந்தமாகச் சிறு தொழில் தொடங்குவதற்கான ஏற்பாட்øடயும் ஜகாத்தின் மூலம் செய்வதால் அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடியும். அந்த ஏழைகள் சம்பாதித்து உயர்ந்து மற்ற ஏழை, எளியவர்களுக்கு ஜகாத் கொடுக்கத் தகுதியுள்ளவராக மாறிவிடுவார்கள். இதுதான் ஜகாத் தின் உண்மையான தேட்டமாகும்.
பாகுபாட்டை அகற்றும் ஜகாத்
ஜகாத்தை வழங்கும் போது ஏழைகளின் மனம் நோகும்படி நடந்து கொள்ளக் கூடாது. சொல்லிக்காட்டி இழிவுபடுத்தவும் கூடாது.ஜகாத் கொடுத்த பிறகு பூரித்து விடவும் கூடாது. ‘இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் ஈமான் கொள்ளாமல் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே தனது பொருளை செலவு செய்பவனைப் போல நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், (மனம்) புண்படச் செய்தும் உங்களுடைய தான தர்மங்களைப் பாழாக்கிவிடாதீர்கள்’ (திருக்குர்ஆன் 2:264)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று வகை மனிதர்களிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேச மாட்டான். அவர்களில் முதல் பிரிவினர் தர்மம் கொடுத்ததைப் பற்றி பிறரிடம் எடுத்துச் சொல்லிப் பறை சாற்றுகிறவர்கள் ஆவர்’(முஸ்லிம்)
இந்த வசனங்களும், நபிமொழியும் ஏழைகளுடைய உரிமையைச் சுட்டுகிறது. எனவே தங்கள் உரிமையைக் கேட்டுப் பெறும் வறிய வர்களும், ஏழைகளும், அநாதைகளும், இயலாதவர்களும் இஸ்லாமியச் சமூகத்தில் மதிப்புக் குறைந்தவர்களல்லர். அவர்கள் மீது பரிவு காட்ட வேண்டும். இதனால் ஜகாத் வழங்கும் திட்டத்தில் ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாட்டையும் முற்றிலும் அகற்றக் கூடியதாக உள்ளது.
உறவுகளை மேம்படுத்தும் ஜகாத்
பெற்றோர்கள், பிள்ளைகள், நெருங்கிய உறவினர்கள் ஏழையாக இருந்தால் ஜகாத் கொடுப்பதற்கு அவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். அதுவே சிறந்த வழிமுøறயாகும். நபி(ஸல்) கூறினார்கள்: ‘ஓர் ஏழைக்குத் தர்மம் செய்தால் ஒரு கூலி கிடைக்கும். ஆனால், உறவினரான ஏழைக்குத் தர்மம் செய்தால் தர்மத்தின் கூலியும் உறவைப் பேணிய கூலியும் சேர்த்து இரண்டு கூலிகள் கிடைக்கும்’ (புகாரி)
செல்வங்களைத் தூய்மைப் படுத்தும் ஜகாத்
‘(நபியே!) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்துகொண்டு அதன் மூலம் அவர்களைத் தூய்மையõக்குவீராக; (நல்வழியில்) அவர்களை முன்னேறச் செய்வீராக! மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டிப்) பிரார்த்திப்பீராக! ஏனென்றால், உம்முடைய பிரார்த்தனை திண்ணமாக அவர்களுக்குச் சாந்தி அளிக்கக் கூடியதாகும். மேலும், அல்லாஹ் யாவற்றையும் கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்’ (திருக்குர்ஆன் 9:103)
ஜகாத் வழங்கும் செல்வந்தர்களின் மனதைத் தூய்மையாக்குவதுடன் அவர்களுடைய செல்வமும் தூய்மையடைகின்றன. அதே போன்று ஜகாத் வாங்குகிறவர் மனதையும், வழங்குகிறவரின் சமூக அமைப்பையும் தூய்மைப்படுத்துகிறது. ஏழை எளியவர்கள் செல்வந்தர்கள் மீது எவ்வித பொறாமையும் கொள்ள மாட்டார்கள். விரோதம், பகைமை, வர்க்கப் போராட்டம் எதுவும் இல்லாத தூய்மையான ஒரு சமுதாய அமைப்பை ஏற்படுத்த ஜகாத் வழிவகை செய்கிறது.
நீதியான பங்கீடு
சமுதாயத்தில் குறிப்பிட்ட ஒரு குழுவினரிடம் செல்வம் குவிந்திருப்பதை இறைவன் அனுமதிக்கவில்லை. சொத்து, செல்வம் ஒரு சாராரிடம் மட்டும் தேங்கி நிற்பது நியாயமாகாது.
‘ஊர்வாசிகளிடமிருந்து தன் தூதரின் பக்கம் அல்லாஹ் திருப்பியவை அனைத்தும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக் கும் உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் சேரக்கூடியவை ஆகும். ஏöனனில் அது உங்களிலுள்ள செல்வந்தர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக!’ (திருக்குர்ஆன் 59:7)
அனைவரும் நீதியான பங்கை அடைய வேண்டும் என்பதும் ஜகாதின் நோக்கங்களில் ஒன்றாகும். இஸ்லாமியப் பொருளாதாரம் நீதியாக நிலை நாட்டப்பட வேண்டும். ஜகாத் இறைவன் மனித குலத்திற்கு வழங்கிய மகத்தான பொருளாதாரத் திட்டம். விருப்பு வெறுப்பின்றி அனைவரும் ஜகாத் குறித்து அறிய வேண்டும். குறிப்பாக பொருளாதார வல்லுநர்கள் ஜகாத் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். உலகம் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வான இறைவன் காட்டிய ஜகாத்தை நடைமுறைப்படுத்த ரமளான் மாதத்தை முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கின்றனர். நன்மைகளை ஈட்டித் தருவதுடன் பொரு ளாதார மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் ஜகாத் வித்திடுகிறது.