ரமளான் மாதத்தில் நடைபெற்ற மிக முக்கியமான நிகழ்வுதான் பத்ர்ப் போர். இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இந்த யுத்தம் நமக்குப் பல பாடங்களையும் படிப்பினைகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. சத்தியத்தையே ஆயுதமாக ஏந்தி இறைநம்பிக்கை கொண்டு போராடினால் சின்னஞ்சிறு கூட்டம் பெரும் படையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கைப் பாடத்தை பத்ர் களம் உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முஸ்லிம்களுக்கும் மக்கத்து குறைஷிகளுக்கும் இடையே பத்ர் என்னும் இடத்தில் மிகப் பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. அதுவே வரலாற்றில் பத்ர்ப் போர் என்று அழைக்கப்படுகிறது. நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு மக்காவிலிருந்து தொலைவிலுள்ள அபிசீனியா நாட்டிற்கு முஸ்லிம்கள் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டார்கள். நீதிமிகு நஜ்ஜாஷி மன்னரின் அவையில் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நபி(ஸல்) அவர்கள் தோழர்களை அனுப்பி வைத்தார்கள். இதைப் பொறுக்க முடியாத மக்கத்து குறைஷிகள் நஜ்ஜாஷி மன்னரிடம் புகாராகத் தெரிவித்தார்கள். அதன் மூலம் முஸ்லிம்களைத் திரும்பவும் மக்காவுக்கு அழைத்து வர திட்டம் தீட்டினார்கள்.
ஆனால் அவர்களது கனவு பலிக்கவில்லை. வெறுங்கையோடு குறைஷிகள் திரும்பினார்கள். வேறொரு நாட்டிலுள்ள மன்னர் இடத்தில் தங்களது திட்டத்தை நிறைவேற்றுவதற்காகப் பயணப்பட்டவர்கள், தாங்கள் வணிகத் திற்காகப் பயணிக்கும் மதீனாவில் தஞ்சம் அடைந்த முஸ்லிம்களைச் சும்மாவா விடுவார்கள்? மதீனத்து நயவஞ்சகர்களோடு கள்ளக் கூட்டணி வைத்து முஸ்லிம்களுக்குப் பெரும் துயரத்தைத் தந்தார்கள். மதீனாவில் இருந்து யாராவது ஒருவர் உம்ரா புனித பயணம் மேற்கொள்ள மக்காவுக்கு வந்தால் தடுத்தார்கள். இப்படி ஏராளமான துயரங்களை மதீனத்து முஸ்லிம்கள் மீது தொடர்ந்த வண்ணம் இருந்தார்கள்.
கிப்லா மாற்றமும், குறைஷிகளின் கோபமும்
மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து 18 மாதங்கள் கழித்து கிப்லாவின் திசை ஜெருசலத்தில் இருந்து மக்காவின் கஅபத்துல்லாஹ்வுக்கு மாற்றப்படுகிறது. இதனால்முஸ்லிம்களுக்கு மகிழ்வும், மதீனத்து யூதர்களுக்கு ஏமாற்றமும், நயவஞ்சகர்களுக்குக் குழப்பமும் ஏற்பட்டது. அதே வேளையில் மக்கத்து குறைஷிகள் தங்களைக் குறி வைப்பதாகவே இந்த கிப்லா மாற்றத்தைப் பார்த்தார்கள். கிப்லா மாற்றத்தை வெறும் ஆன்மிக நிகழ்வாகச் சுருக்கிப் பார்க்காமல் அது ஒரு புவிசார் அரசியல் என்பதைக் கவனிக்க வேண்டும்.
கிப்லா திசை மாற்றம், ஜிகாத் அனுமதி, நோன்பு கடமை இவை மூன்றும் ஒரே ஆண்டில் ஏறக்குறைய அடுத்தடுத்த மாதங்களில் கடமையாக்கப்பட்டதன் காரணம். தூய்மையான எண்ணத்தோடு நீங்கள் போராடினால் உங்களுக்கான இலக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதே! மக்காவில் இருந்து கொண்டு மதீனாவில் குழப்பம் ஏற்படுத்துவது ஒரு வகை என்றால் ஹிஜ்ரத் செய்ய இயலாமல் மக்காவிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களின் உறவுகளைத் துன்புறுத்தும் குறைஷிகள் ஒருவகை. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்தான் யுத்தம் செய்ய அனுமதிக்கும் வகையில் இறைவசனம் அருளப்பட்டது.
‘எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கின்றான். நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடிய, நன்றி கொல்லக் கூடிய எவரையும் நிச்சயம் அல்லாஹ் நேசிப்பதில்லை! எவர்களுக்கு எதிராகப் போர் புரியபடுகின்றதோ அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. ஏனெனில்,அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். மேலும், திண்ணமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றல் பெற்றவனாக இருக்கின்றான். தங்களின் வீடுகளை விட்டு அவர்கள் நியாயமின்றி வெளியேற்றப்பட்டார்கள். ‘அல்லாஹ்தான் எங்கள் இறைவன்’ என்று அவர்கள் கூறியது தான் அவர்கள் செய்த குற்றம்’ (திருக்குர்ஆன் 22:3840)
அகபாவின் வாக்குறுதி
நபித்துவத்தின் 11ஆம் ஆண்டு மக்காவிலே ஹஜ் தினத்தின் நள்ளிரவில் நிகழ்ந்த அகபா உடன்படிக்கையில் கொடுத்த வாக்குறுதியை மதீனத்து அன்சாரித் தோழர்கள் பத்ர் களத்தில் நிலைநாட்டினார்கள். வரலாற்றில் இருந்து பாடம் கற்காதவர்கள் வரலாறு படைக்க முடியாது என்பது பிரபஞ்ச நியதி. இறைத்தூதர் மூஸா நபியின் சமூகத்தார் செய்த வரலாற்றுப் பிழையை நாமும் செய்து விடக்கூடாது என்பதை நன்கு அறிந்திருந்த நபித்தோழர்கள் பத்ரில் வீர தீரமாகக் களமாடி வரலாற்றின் போக்கினை திசை மாற்றினார்கள்.
போர் வியூகமும் போராட்டக் குணமும் மட்டும் ஒரு சமூகத்தின் வெற்றிக்கு வழிவகுக்காது. இறைவனின் திருமுன் சரணாகதி அடைந்து அவனைச் சார்ந்து உதவி தேட வேண்டும். அப்படித்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், தோழர்களும் மனம் உருகி இறைவனிடம் உதவி வேண்டினார்கள்.
‘உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடி முறையிட்டுக் கொண்டிருந்ததையும் நினைத்துப் பாருங்கள்; அப்போது அவன் பதிலளித்தான்; ஓராயிரம் வானவர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, திண்ணமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்.’ (திருக்குர்ஆன் 8:9)
வெற்றி தரும் பணிவு
எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டின் மீது அதிகாரம் பெற்று விட்டால் அங்கே அட்டூழியம் அழிச்சாட்டியம் நிகழ்த்தியே தீரும் என்பது வரலாறு கண்ட உண்மை. இதற்கு நேர் மாற்றமாக நபிகள் நாயகமும் முஸ்லிம்களும் பத்ர் களத்தில் குறைஷிகளை வெற்றி கொண்ட பின் மனித நேயத்தோடு நடந்து கொண்டார்கள். கைதி ஒருவர் முஸ்லிம்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தால் அவர் விடுதலை அடைந்து கொள்ளலாம் எனும் சிறப்புச் சட்டத்தை வழங்கினார்கள். இதன் மூலம் கல்விக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து கைதியை அடிமையாக்காமல் அவரைத் திருப்பி அனுப்பினார்கள். யுத்தத்தில் வெற்றி பெற்றால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் திருமறைக் குர்ஆன் இவ்வாறு விவரிக்கிறது.
‘அவர்கள் எத்தகையவர்களெனில், நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் வழங்குவார்கள். மேலும், நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள். மேலும், எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்வின் கையில் உள்ளது.’. (திருக்குர்ஆன் 22:41)
முஸ்லிம்களின் பண்புகளைத் திருமறை விவரிக்கும் போது வெற்றி பெற்ற பிறகு பூமியில் ஆட்சி அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் நன்மையை ஏவுவார்கள் தீமையைத் தடுப்பார்கள் அனைத்துக் காரியங்களிலும் இறைச் சட்டங்களை முன்னிலைப்படுத்துவார்கள் என்கிறது திருமறைக் குர்ஆன். பத்ர் களம் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் உறுதியான நம்பிக்கை, உண்மையான வாக்குறுதி, தியாக மனப்பான்மை, செம்மையான திட்டமிடல், இறைவனைச் சார்ந்து இருப்பது, பொறுமை காப்பது, வெற்றிக்குப் பின்னர் நீதியை நிலைநாட்டுவது ஆகியவைதாம். நாம் வரலாற்றுக்குத் திரும்புவோம். பாடம் பெறுவோம். வரலாறு படைப்போம்.