மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

ரமளானுக்குப் பின்..
அன்வர்தீன், (மாணவர், அஸ் ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி)v, ஏப்ரல் 1-16, 2025


 


ரமளான் மாதம் நம்மிடமிருந்து விடை பெற்றுச் செல்லும் போது நமக்குக் கவலை ஏற்பட வேண்டும். அல்லாஹ்வின் அருள் கடந்து செல்லும்போது, அல்லது எடுக்கப்படும்போது கவலை வரவேண்டும். ரமளான் சாதாரணமான மாதம் அல்ல. தொழுகையில் கவனமில்லாமல் இருந்த நம்மை ஜமாஅத்துடன் ஆர்வத்தோடு தொழ வைத்தது ரமளான். குர்ஆனுடனான நம் தொடர்பை அதிகப்படுத்தியது ரமளான். நம்மிடம் ஏராளமான மாற்றங்களைத் தந்தது, இன்னும் தந்துகொண்டிருக்கும் மாதம் ரமளான்.

ரமளானில் ஒரு மாதம் பயிற்சி மேற்கொண்டுள்ளோம். எனவே ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். ‘ரமளான் மாதத்தை ஒருவன் அடைந்து, அவனுடைய பாவம் எதுவும் மன்னிக்கப்படாவிட்டால், அவனுக்கு நாசம் உண்டாகட்டும்’ என்ற ஜிப்ரீல்(அலை) அவர்களின் துஆவிற்கு நபி(ஸல்) அவர்கள் ஆமீன் கூறினார்கள். பாவத்திலிருந்து மீண்டவர்களாக, பாவமன்னிப்புப் பெற்றவர்களாக நாம் மாறவேண்டும்.

ரமளானுக்காகவா? இறைவனுக்காகவா?

ரமளானீன் என்றால் ரமளான் மாதத்தில் மட்டும் அமல் செய்பவன் என்று பொருள். ரப்பானீன் என்றால் அல்லாஹ்வுக்காக ரமளான் மாதத்திலும், பிற மாதங் களிலும் அமல் செய்பவன் என்று பொருள். நம்மில் பலர் ரமளான் மாதத்தில் மட்டுமே நல்லறங்கள் செய்யும் சீசன் வணக்கசாலிகளாக இருக்கின்றார்கள். ரமளானில் நாம் செய்த அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானா என்று தெரிந்து கொள்வதற்கான ஒரு வழி, ரமளானுக்குப் பிறகும் அதே போன்ற ஆர்வத்தோடு அமல் செய்கிறோம் என்றால், நிச்சயமாக நம்முடைய அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுவிட்டான் என்று அர்த்தம். குறைந்தபட்சம் முயற்சியாவது செய்ய வேண்டும். முயற்சி செய்யாமல், நம்முடைய அமல்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவில்லை என்று விட்டு விடக்கூடாது.

அல்லாஹ் ஒரு மனிதனுக்குச் சிறப்பானதை நாடுகின்றான் என்றால், ஒரு நற்செயலை அந்த மனிதன் செய்யும்போது, அல்லாஹ் அதைத் தொடர்ச்சியாகச் செய்ய வைக்கிறான். ஏனென்றால், நாம் செய்யும் நற்செயலை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அல்லாஹ் அதைக் காட்டுகின்றான். ரமளானுக்குப் பின்னும் இதே ஆர்வம் நம்மிடம் இருக்க வேண்டும். அதனால்தான், ரமளானுடைய தொடர்ச்சி விட்டுப் போகாமல் இருப்பதற்கு ஆறு நோன்புகளை வைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இரண்டு நபர்கள் தண்ணீருக்கு அடியில் தஸ்பீஹ் செய்து இறைவனைத் துதிக்கின்றார்கள். வானவர்கள் ‘ஒரு குரல் ஏற்கனவே கேட்டதாகவும் மற்றொரு குரல் புதிதாக இருக்கிறது, அது முன்பு கேட்டதே இல்லை’ என்று கூறுகிறார்கள். யூனுஸ்(அலை) அவர்கள் மீன் வயிற்றில் இருக்கும் போது தொடர்ச்சியாகத் துஆ செய்து கொண்டிருந்தார்கள். ‘இந்தக்குரல் தொடர்ச்சியாகக் கேட்ட குரலாக இருக்கிறது, எனவே இவரை வெளியேற்றி விடு’ என்று இறைவன் கூறினான். மற்றொரு குரலை இதுவரை கேட்டதே இல்லை, மேலும் அவன் தஸ்பீஹ் செய்வது இல்லை. இறைவனை நிராகரித்து அவனுக்கு மாறு செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்படும்போது இறைவனை அழைத்தான். ஆனால் இறுதி நேர இறைநம்பிக்கை பயனளிக்கவில்லை.

‘ஃபிர்அவ்ன் நீரில் மூழ்கத் தொடங்கியபோது அலறினான்: இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த இறைவன் மீது நம்பிக்கை கொண்டார் களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்று நானும் நம்பிக்கை கொண்டேன். மேலும் (அந்த இறைவனுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும் ஒருவனாவேன்! (பதில் கூறப்பட்டது:) இப்போதா நம்பிக்கை கொள்கிறாய்? இதற்குச் சற்று முன்வரை நீ மாறுசெய்து கொண்டிருந்தாய். குழப்பம் விளைவிப்பவர்களில் ஒருவனாயும் இருந்தாய்’(திருக்குர்ஆன் 10:90,91)

நம்முடைய அமல்கள், திக்ருகள், துஆக்கள் நமக்குப் பலனளிக்க வேண்டும் என்றால், அவை அனைத்தையும் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். ரமளானில் நற்செயல்கள் செய்கிறோம், ஆர்வமாக ஓதுகிறோம், துஆச் செய்கிறோம், அப்படியே மூட்டை கட்டி வைத்துவிடு கிறோம். அடுத்து ஆண்டு ரமளானுக்குத்தான் தூசி தட்டி புதுப்பிக்கிறோம். இவ்வாறு இருந்தால் ரமளானின் மூலம் நாம் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் மாற்றங்களைப் பெற முடியாது. மாற்றங்களைப் பெற்று ரமளானின் நோக்கத்தை அடைய வேண்டும் என்று சொன்னால் ரமளானுடன் நமது நற்செயல்களை முடித்துக் கொள்ளாமல் தொடர்ந்து நல்லறங்கள் புரிய வேண்டும். பயிற்சி பழக்கமாக வேண்டும். அதுவே மாற்றத்திற்கான வழி.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்