தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. இப்போதே, அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் வியூகங்களை வகுத்துத் தருவதற்கான நிபுணர்களைத் தேடுவதில் போட்டி போடுகின்றன.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெறக் காரணம் ‘ஐபேக்’ நிறுவன பிரசாந்த் கிஷோரின் வியூகமே என அரசியல் வட்டாரங்களில் கருத்து இருக்கிறது. அதனால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், வியூக வகுப்பாளர்களை அமர்த்திக் கொள்வதில் ஆர்வமாக இருக் கின்றனர். கடந்த சட்டசபைத் தேர்தலுக்காக தி.மு.கவுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோருக்கு 360 கோடி ரூபாய் சன்மானமாக வழங்கப்பட்டது. அதேபோல் அ.தி.மு.கவுக்கு வியூக வகுப்பாளராகச் செயல்பட்ட சுனில் கனுக்கோலுவுக்கும் பல கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டது. அந்த வரிசையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஜான் ஆரோக்கியசாமி வியூக வகுப்பாளராக நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்குத் தி.மு.கவுக்கு வியூக வகுப்பாளராகச் செயல்பட்ட பிரஷாந்த் கிஷோர் இப்போது நடிகர் விஜய்க்கு ஆலோசகராகச் சென்று விட்டார். அதனால் ரிஷிராஜ் சிங், ராபின் சர்மா, நரேஷ் அரோரா உள்ளிட்டோரைத் தங்கள் கட்சிக்கென பிரத்யேக வியூக வகுப்பாளர்களாக தி.மு.க நியமித்திருப்பதாக தகவல்கள் வெளியõகி உள்ளன. கூடவே, ‘பாப்புலஸ் நெட்வொர்க் பென்’ என்ற அமைப்பும், தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட் டுள்ளது.
தேர்தல் வெற்றிக்கு வியூக வகுப்பாளர்கள் தான் முக்கியம் என்றும், அவர்கள் வழிகாட்டுதல் இல்லாமல், இனி வருங்காலங்களில் அரசியல் கட்சிகள் செயல்பட வாய்ப்பில்லை என்பது போன்ற தோற்றமும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. வியூக வகுப்பாளர்கள் அப்படி என்ன மந்திரக்கோல் வைத்திருக்கின்றனர்; அவர்களுக்கு ஏன் பிரபல அரசியல் கட்சிகள் கோடி கோடியாக அள்ளிக் கொட்டுகின்றன? கட்சியிலும், மக்களிடத்திலும் எங்கெல்லாம் குறைகள் இருக்கின்றனவோ, அதையெல்லாம் முதல் கட்டமாகக் கண்டறியும் வியூக வகுப்பாளர்கள், அதை நிறைவேற்றத் திட்டம் போட்டுக் கொடுத்து, செயல்பட வைக்கின்றனர். அதுதான், அவர்களுடைய பிரதான பணி.
இப்படிச் செய்வதன் வாயிலாக, எதிர் தரப்புக்குச் செல்ல வேண்டிய ஓட்டுக்கள், அங்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது என்பது நம்பிக்கை. மற்றபடி, வேறு என்னவெல்லாம் அவர்கள் செய்வர் என்பது குறித்து, வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு, தற்போது அப்பணியில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஒருவர் கூறியதாவது: ‘ஒரு தலைவரின் மீதான பொது பிம்பம் எப்படி இருந்தாலும், அதை மாற்றி அமைத்து, அவர் மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பு உண்டாக்கப்படும். கடந்த கால ஓட்டுப்பதிவு தொடர்பான புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படும். அதில் இருந்து மக்கள்தொகை, ஜாதி, மத ஆதிக்கம் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு ஆய்வு செய்யப்படும்.
எந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் என்ன மன நிலையில் ஓட்டளிக்கின்றனர்; அந்த மக்களின் உணர்வுகள் எப்படி உள்ளன என்பது குறித்தெல்லாம் கண்டறியப்படும். அதையெல்லாம் குறிப்பிட்ட கட்சிக்கான ஓட்டுக்களாக எப்படி மாற்றுவது என திட்டமிடப்படும். அது மட்டுமல்ல, மக்கள் கவனத்தை ஈர்க்கும் முக்கிய பிரச்னைகள் அடையாளம் காணப்பட்டு, அதை எப்படிச் சரி செய்து ஓட்டுக்களாக மாற்றுவது என்றும் ஆராயப்படும். இப்படியெல்லாம் செய்து எதிர் தரப்பை வீழ்த்துவது, ஒரு பக்கம் நடக்கும். தேர்தல் பரப்புரைக்கு ஏற்ப கவர்ச்சிகரமான திட்டங்களை உருவாக்குவது, ஊடகங்கள் பிரதானமாக பிரசுரிக்கத்தக்க வகையில், பரபரப்பான செய்திகளை உருவாக்குவது, அதை மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைப்பது, செய்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஆதிக்கம் செலுத்தி, குறிப்பிட்ட கட்சிக் கென நல்லெண்ணத்துடன் கூடிய பொது பிம்பத்தைக் கட்டமைப்பது உள்ளிட்ட பணிகள் மறுபக்கத்தில் முன்னெடுக்கப்படும்.
பின், தங்களுடைய செயல் திட்டங்களெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடுகிறதா என்பதையும், பல்வேறு செய்திகள், தரவுகள் வாயிலாகத் தொடர்ந்து கண்காணிப்பர். இதற்காக வீடு வீடாகச் சென்று, அதை அறிந்து வரும் பணிக்கென மிகப் பெரிய ஆட்படை பயன்படுத்தப்படும். இவை தவிர, கூட்டணிகளை உருவாக்குவது, எதிரணியை உடைப்பது என்பதும், வியூக வகுப்பாளர்களின் முக்கியமான பணிதான். அரசியல் என்பது எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்திருக்கும் ஒரு விசித்திரமான விளையாட்டுதான். அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு, கட்சிக்கு பெரிய பாதிப்பின்றி, நெருக்கடி மேலாண்மையை திறமையாகக் கையாளக் கூடியவர்களாகவும் வியூக வகுப்பாளர்கள் இருக்க வேண்டும். ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு வியூக வகுப்பாளராகச் செயல்படுவோருக்கு, இந்தத் தகுதி கூடுதலாக இருக்க வேண்டும். அப்போதுதான், தவிர்க்க முடியாத மக்கள் பிரச்னையில், ஆட்சிக்கு இறுதி நேர கெட்ட பெயர் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
இதற்கு ஒரு கதையை உதாரணமாகக் கூறலாம். கிராமத்துக்காரர் ஒருவரிடம் உதவாக்கரை கழுதை இருந்தது. அதை யாரிடமாவது விற்று விட வேண்டும் என்று, அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. கழுதையை விற்பதற்காக, முல்லா நஸ்ருதீனை அணுகினார். கழுதையை இரு நூறு வெள்ளிக்கு விற்றுத் தருமாறு கூறினார். முல்லா நஸ்ருதீனும் சரி என்றார். கூடவே, 200 வெள்ளிக்கு மேல் கூடுதலாக எவ்வளவுக்கு விற்றாலும், அதை தானே எடுத்துக் கொள்வேன் என்று பேசி முடித்தார். அந்த கிராமத்துக்காரரும் அதற்கு ஒப்புக் கொண்டார். முல்லா நஸ்ருதீன், அந்த கிராமத்துக்காரரையும், கழுதையையும் சந்தைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு திரண்டிருந்த மக்களிடம், ‘இந்த குதிரை மிகவும் அதிசய சக்திகள் நிறைந்தது. பார்வைக்குக் கழுதை போல் காணப்பட்டாலும், இது அபூர்வமான குதிரை. ஆண்டுக்கு ஒருநாள் இது அழகிய குதிரையாக மாறும், அந்த நாளில் இந்தக் குதிரையின் மீது அமர்ந்து பயணிப்பவர்கள் அரசர்களாக மாறுவர். இது பழைய ஓலைச் சுவடியில் குறிப்பாக எழுதப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக, இப்படியொரு குதிரையைத் தேடி அலைந்தேன். அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. இருந்தும், எனக்குப் பணத் தேவை அதிகம் இருப்பதாலேயே விற்க முடிவெடுத்தேன். குதிரையை வாங்க விரும்புவோர் ஏலம் கேட்கலாம்’ என்றார் மேலும், ‘இக்குதிரைக்கு என்னுடைய விலை ஆயிரம் வெள்ளி’ என்றார். கூட்டத்தில் இருந்த வியாபாரி ஒருவர், இரண்டாயிரம் என்றார். மற்றொருவர், மூவாயிரம் வெள்ளி என்றார். அடுத்தவர் ஐயாயிரம் வெள்ளி என்றார்.
கழுதையின் உரிமையாளருக்கு ஒன்றும் புரியவில்லை. தலை கிறுகிறுக்க, இவ்வளவு சிறப்புமிக்க குதிரையை, கழுதை என எண்ணி, விற்க நினைத்தோமே என்று வருந்தினார். ஒரு கட்டத்தில் முல்லா நஸ்ருதீனிடம், ‘ஏலத்தை நிறுத்துங்கள்; அதிர்ஷ்டக்கார இந்தக் குதிரையை விற்க விரும்பவில்லை’ என்றார். நஸ்ருதீனுக்குக் கொடுக்க வேண்டிய கமிஷன் தொகை, 4,400 வெள்ளியைக் கொடுத்து விட்டு, குதிரையை... ஸாரி கழுதையை அந்த கிராமவாசி மகிழ்ச்சியோடு மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வியூக வகுப்பாளர்களின் வேலையை நீங்கள் இப்போது புரிந்து கொள்ள முடியும்.
மொத்தத்தில் மக்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்ய வேண்டியதுதான் அவர்கள் வேலை. ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது விலை போகாததையும் விற்று விடும் தந்திரம் கற்றவர்கள். ஒரு ஓட்டுக்காக ஆயிரம் பொய்களையும் தயங்காமல் சொல்லக் கூடியவர்கள். கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில், தி.மு.க எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கவர்ச்சிகரமாகப் போட்டுக் கொடுத்த திட்டங்களில் பல இன்று வரை வாக்குறுதிகளாகவே நிற்கின்றன. காரணம், திட்டங்களுக்குச் செலவு செய்வதற்கான பணம் அரசிடம் இல்லை. அதை உண்டாக்குவது குறித்து, வியூக வகுப்பாளர்கள் எந்த ஆலோசனையும் சொல்லவில்லை. காரணம், அது குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. தேர்தலில் யாருக்காக வியூக வகுப்பாளராக செயல்படுகின்றனரோ, அவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதோடு, அவர்கள் பணி முடிந்து விடுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றியோ, வருங்காலத் தலைமுறை பற்றியோ கவலை இல்லை. அவர்கள் முல்லா நஸ்ருதீன் போன்று கழுதையை குதிரை என்பர்; மக்களும் ஏற்பர். அரசியல்வாதிகளும், வியூக வகுப்பாளர் சொல்வது தான் உண்மை என்று நம்பி, கழுதையையும் குதிரையாக நம்புகின்றனர்.