மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

பெருநாள் பரிசு
சசிகலா விஸ்வநாதன், ஏப்ரல் 1-16, 2025



சுபைதா அன்று மிக உற்சாகமாக இருந்தாள். மகள் ஆயிஷாவும் மகன் முஹம்மதுவும் கிழக்கு வெளுக்கும் முன் எழுந்து விட்டார்கள். இந்த ஆண்டு நோன்புப் பெருநாளைக்கு வருவதாக அவர்களது வாப்பா ஃபோனில் தகவல் சொல்லியிருந்த அன்றிலிருந்தே வீட்டில் கொண்டாட்டம் தான்.

அப்துர் ரஹ்மான் பஹ்ரைனிலிருந்து நேற்றே சென்னை வந்து மதுரைக்கும் வந்து சேர்ந்து விட்டதாக தகவல் வந்து விட்டது. காலையிலேயே கார் பிடித்து பக்கத்து வீட்டு பெரியப்பா அக்ரம் அஜீஸுடன் வந்து கொண்டிருக்கிறார். சென்ற பெருநாளுக்கு அவர் வீட்டிற்கு வரவில்லை.  பார்த்து இரண்டு  ஆண்டுகள் ஆகிறதே! வீடியோவில் பார்த்து பேசிக் கொண்டிருந்தாலும், நேரே பார்த்துப் பேசிப் பழகுவது போல் ஆகுமா? விரல் பிடித்து கடைத்  தெருவுக்குப் போய் கை காட்டும் பொரு ளெல்லாம் வாங்குவது போலாகுமா? காணாமல் போயிருந்த சிரிப்பும், துள்ளலும் மலர்வும் சுபைதாவின் முகத்தில், இந்த இரண்டு மாதமும் மீண்டும் குடியேறும். அதுவும் இந்த முறை வாப்பா வந்து, புது வீடு வாங்க ஒரு ஏற்பாடு செய்யப் போகிறார் என்பதில் கூடவே மகிழ்வும் பெருமையும்!

மதியம்  பதினோரு மணிக்கெல்லாம்  வாப்பா வந்து விட்டார். வந்து குளித்து பேசிக்  கொண்டிருக்கையி லேயே, தொழுகைக்கு நேரம் ஆக, பாங்கு ஒலித்ததும், முஹம்மதுவும், வாப்பாவும் மஸ்ஜிதுக்கு விரைந்தனர். சுபைதாவும் ஆயிஷாவும் தொழுது துஆ கேட்க ஆரம்பித்தனர்.

வாப்பா அப்துர் ரஹ்மான் மஸ்ஜிதிலிருந்து வந்ததும் இரு பிள்ளைகளும் அவர் பக்கத்தில் வந்து அமர்ந்து, அவர் களுக்காக வாங்கிவந்த உடுப்புகளையும் இனிப்புகளையும்  பார்த்து  மகிழ,சுபைதா தனக்காக அவர் வாங்கி வந்த சேலைகளையும் நகைகளையும் பார்த்து பெருமிதம் கொண்டாள்.

‘வாப்பா!  அந்தப் பையை பிரிக்காமலே இருக்கிறீர்களே’ என்று முஹம்மது கேட்க,
‘அது என் நண்பன் முத்துராமன் வீட்டிற்குப் போக வேண்டியது. எழில னுக்கும், வாணிக்கும் உண்டான பரிசு. நாளை நாம் போய் கொடுத்து வருவோம்’ என்றார்.

‘வாப்பா!  அவர்கள் கோயிலில் கும்பிடுபவர்கள். ரமளான் அவர்களுக்கில்லை’ என்றான் முஹம்மது.

‘ஆம்! நமக்கு நோன்புப் பெருநாள் உண்டல்லவா? நம்மோடு அவர்கள் கொண்டாடுவார்கள்’

‘வாப்பா! இந்த ஆண்டு அவர்கள் பண்டிகை  கொண்டாட மாட்டார்கள். அவருடைய அப்பா நாலு மாதத்திற்கு முன் மௌத்தாகி விட்டார்கள் அல்லவா’ என்றான் முஹம்மது.

சுபைதாவும் ‘ஆமாம்! அவர்கள் வீட்டுக் கடனில் இரண்டு தவணை கட்ட முடியாமல், வீட்டை விலை பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர் வீட்டுக்காரி சுந்தரம்மா சொல்லி அழுதிட்டு இருந்தாங்க. அடிமாட்டு விலைக்குக் கேட்கிறாங்களாம்’ என்றாள்.

அப்துர் ரஹ்மான், யோசனையில் ஆழ்ந் தார். அன்று பிள்ளைகள் உறங்கிய பின் சுபைதாவுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாள் இருவரும் அவர் நண்பர் முத்துராமன் வீட்டிற்குச் சென்றுப் பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டு, இரண்டு தவணைக்கான பணத்தை வங்கியில் கட்டிய ரசீதையும் கொடுத்தனர். நண்பரின் மனைவி மனம் நெகிழ்ந்து ‘இவ்வளவு பெரிய தொகையை என்றைக்கு.. என்னால்... எப்படி.. உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கமுடியும்?’ என்று கண்ணீர் சிந்தினாள்.

‘சுந்தரம்மா! வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடும்படித்தானே கட்டியுள் ளீர்கள். அந்த வாடகைப் பணத்தை எங்களுக்குக் கொடுக்கும்படி  ஏற்பாடு செய்யுங்கள். நாங்கள் பொறுமையாக வாங்கிக் கொள்கிறோம்’ என்று சுபைதா ஆறுதல்படுத்தினாள்.

‘நீங்க புது வீடு வாங்க அட்வான்ஸ் கொடுக்க இருப்பதாகப் பேச்சு இருந்ததே! எங்களுக்கு உதவி செய்யப் போக; அந்த ஏற்பாடு தள்ளிப் போகுமே’ என்றாள் சுந்தரம்மா.

‘ஆமாம், தங்கச்சி! அதனால் என்ன? கையில் இன்னும் கொஞ்சம் பணம் இருக்கு. மீதிப் பணத்தை மாதத் தவணையில் தருகிறேன்’ என்று சொல்லிப் பார்க்கிறேன்.

‘அந்த ரியல் எஸ்டேட் ஓனர் மகாதேவன், என் நெடுநாள் நண்பர். எழிலன் அப்பா போல், அவரும் என் கூடப் படித்தவர். என்னை நம்புவார். நம் சமூகப் பிணைப்பு அத்தனை உறுதி. இறைவனும் கைவிட மாட்டான்’ என்றார். சுந்தரம்மாவும், முத்துராமனும் வியப்பு விலகாமல் அப்துர் ரஹ்மான் சொல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்