காலமும், சூழலும் மாறிக் கொண்டே தான் இருக்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. நாமும் காலத்திற்குத் தகுந்தாற்போல் நம்மையும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவில் மிகவும் ஆபத்தான காலமாக தற்போது ஏற்பட்டுள்ள கால மாற்றங்கள் நம்மை மிகவும் பயம் கொள்ளச் செய்கிறது. என் அரை நூற்றாண்டு கால அனுபவத்தில் அன்றைய காலங்களில் நம் வீட்டுப் பிள்ளைகள் பள்ளி சென்று திரும்பியதும் வெளியே அக்கம் பக்கம் உள்ள தன் வயதுப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவார்கள். அதன் பிறகு தங்கள் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு அம்மா தரும் மாலை நேர தின்பண்டங்களைத் தின்று விட்டு அன்றைய தின வீட்டுப் பாடங்களைப் படிப்பதில் மும்முரமாகிவிடுவார்கள். இரவு ஒன்பதுக்கெல்லாம் படுக்கைக்குச் சென்று அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விடும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். சில வீடுகளில் மட்டும் வானொலிப் பெட்டிகள் இருக்கும். அது அன்றைய செய்திகளைக் கேட்கவும் ஓய்வாக இருப்பவர்கள் பாடல்கள் கேட்கவும் பயன்பட்டது.
வார விடுமுறையிலும், மற்ற விடுமுறைக் காலங்களிலும் கூட அதிகமதிகம் வெளியில் சென்று மற்ற தன் சக நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழ்வதும், தன்னுடைய வீடுகளுக்குச் சென்று அவர்களோடு இணைந்து மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்து வருவதும் வழக்கமாக இருந்தது. வீட்டில் உள்ள பெற்றோரில் இருவரோ அல்லது ஒருவரோ சொல்வதைக் கேட்டு நடந்தார்கள். பெரியவர்களை மதித்தார்கள். பெற்றவர்களின் சொல்லுக்கு ஒரு மரியாதையும், மதிப்பும் இருந்தது. அதனால் பிள்ளைகள் ஒழுக்க முடையவர்களாக வளர்ந்தார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் நேரத்தைக் கழிப்பார்கள்.
ஆனால், இன்றைய சூழல் மிகவும் ஆபத்தானதாகவும், அபாயகரமானதாகவும் உள்ளது. பொதுவாக பிள்ளைகள் அதிக நேரத்தை ‘செல்’லுடன் தான் கழிக்கிறார்கள். அவர்கள் ‘செல்’லுடன் இருக்கும் பொழுது பெற்றோரின் அல்லது மற்றோரின் சொல் லுக்கு எந்த மரியாதையும் இல்லை. இதனால் பெற்றவர்களுக்கு மிகப்பெரும் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஓர் அவசரத்திற்குக் கூட அவர்களிடம் ஒரு வேலையும் வாங்க முடிவதில்லை. ‘செல்’ இல்லையென்றால் தொலைக்காட்சிப் பெட்டிகளில் தங்கள் நேரத்தைத் தொலைத்துக் கொள்கிறார்கள். வீட்டில் இருப்போர் சேர்ந்து அளவளாவி மகிழ்வுடன் உணவு உண்ண முடிவதில்லை. விடுமுறை நாள்களில் கூட வெளியே சென்று வரும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் ஒன்றாகச் சேர்ந்து சிரித்துப் பேசி மகிழ்வதில்லை. பிள்ளைகளுக்கு உடல் உழைப்பும் இல்லை. நட்பு வட்டங்களும் அவர்களுக்குக் குறைவே. காரணம் பொழுதுபோக்கு சாதானங்கள் கையளவில் இருப்பதால் அது போன்ற நட்பும் அவசியம் இல்லாமல் போகிறது.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்கும் ஓர் அலைப்பேசி என்ற கணக்கில் நால்வர் இருந்தால் ஒவ்வொருவருக்கும் 2எஆ டேட்டாவுடன் ரீ சார்ஜ் செய்தும் கொடுக்க வேண்டும். அதோடு கூஙக்கும் ரீ சார்ஜ் செய்ய வேண்டும். கல்லூரி செல்லும் பிள்ளைகளாக இருந்தால் அவர்கள் விரும்புவதையெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் ஆர்டர் செய்து விடுவார்கள். அதற்கும் நாம் தான் பணம் கொடுக்க வேண்டும். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் மிடில் கிளாஸ், ஏழை பெற்றோர்களின் பாடு பெரும்பாடு. ஆக மொத்தத்தில், உடல் உழைப்பு கொஞ்சமும் இல்லாமல் போன 2ஓ கிட்ஸ் என்று தங்களைப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் இந்தக் கால கிட்ஸ்களுக்கு வரும் காலம் பெரும் நோய்களையும், ஆபத்துக்களையும் கொண்டு சேர்க்கும் காலமாகத்தான் இருக்கும் என்கிற பயம் தான் அவர்களைப் பெற்றவர்களுக்கு மிகுந்திருக்கிறது.