விடுமுறையை வீணாக்காதீர்கள்!
முர்ஷிதா அமீரா, மே 01 - 15, 2025
அன்புச் செல்லங்களே..!
தேர்வு முடிந்து விடுமுறையைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருப்பீர்கள்..! இந்த விடுமுறையைப் பயனுள்ள வழிகளில் செலவிட வேண்டும். அதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக் கூடாது என்பதும் மிக முக்கியம்.
செய்யக்கூடாதவை
ஸ்கூல் லீவுதானே மெதுவா எழுந்திருக்கலாம் என்று காலை 10, 11 மணிக்கு எழுந்தால் அந்த நாள் முழுவதுமே சோம்பலாய்க் கழிந்து விடும். அதிகாலைத் தொழுகையான ஃபஜ்ர் முக்கியம். வழக்கத்தை விடசற்று கூடுதலாக ஓய்வு எடுக்கலாம். ஆனால் நேரம் தாண்டிவிடக்கூடாது.
இரவு உறங்கச் செல்லும் நேரமும் முக்கியம். முடிந்தளவு நேரமே உறங்கச் செல்லுங்கள். விடுமுறைதானே... காலையில் தாமதமாய் எழுந்தால் போதும் என எண்ணி இரவின் அமைதியைத் தவற விடாதீர்கள்.
அலைப்பேசி உங்களை விழுங்கி விடும். விடுமுறைப் பொழுதுகள் வீணாகக் கரைந்துவிடும் அபாயம் இருக்கிறது. அளவோடு அலைப்பேசியைப் பயன்படுத்துங்கள். அதிலும் பயனுள்ளதையே பாருங்கள்.
வீண் அரட்டைகளிலும், தேவையற்ற வேலைகளிலும் ஈடுபடாதீர்கள். அது எவ்வித பயனும் தராது.
படிப்பு, படிப்பு என்று விடுமுறையிலும் சீரியஸாகப் படித்துக் கொண்டிருக்காதீர்கள். குறிப்பிட்ட நேரங்களில் படிக்கலாம். ஆனால் பள்ளிக்கூட நாள்களைப்போல படிப்பில் மூழ்கி விடாதீர்கள்.
செய்ய வேண்டியவை
உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று உறவைப் பேணுங்கள். நண்பர்களைச் சந்தியுங்கள்.
கதை, கவிதை போன்றவற்றை வாசிக்கலாம். உங்கள் வாசிப்பு அனுபவத்தை அதிகப்படுத்த இது உதவும். அவசியம் நூலகத்திற்குச் சென்று வாருங்கள்.
வீட்டில் பெற்றோருக்கும், மற்றவருக்கும் உங்களால் முடிந்த குட்டிக் குட்டி உதவிகளைச் செய்யுங்கள்.
கோடைக்கால வகுப்புகள் இருந்தால் மிஸ் பண்ணிவிடாதீர்கள். அங்குள்ள நிகழ்வுகளில் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளுங்கள்.
நீச்சல், தட்டச்சு போன்ற ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
சுற்றுலா செல்வீர்கள்தானே..! அந்த இடம் குறித்து அறிந்து கொள்ளுங்கள். அதிலும் கூட படிப்பினை பெறுங்கள்.
வீதியில் இறங்கி விளையாடுங்கள். உட்கார்ந்து விளையாடுவதையும், அலைப்பேசி, கணினியில் விளையாடுவதையும் தவிர்த்து ஓடியாடி விளையாடுங்கள்.
தொழுகையை நேரத்தில் தொழுங்கள். திருமறைக் குர்ஆனுடன் தொடர்பை வலுப்படுத்துங்கள்.
வீதி, பள்ளிவாசல் சுத்தம் செய்தல், மரம் நடுதல் போன்ற உபயோகமான செயல் ஒன்றை திட்டமிட்டுச் செய்யுங்கள்.
இதுமட்டுமில்ல செல்லங்களே..! இன்னும் இதுபோல நிறைய திட்டமிடுங்கள். விடுமுறைகளைப் பயன்படுத்துங்கள். வீணாக்கிவிடாதீர்கள்.