இந்திய நாட்டில் கடந்த நூற்றி ஐம்பது ஆண்டுகளாக மஸ்ஜித்கள் தோறும் காலை மாலை குர்ஆன் மதரஸாக்கள் நடைபெற்று வருகின்றன. அவை மக்தப் மதரஸா என்று அழைக்கப்படுகின்றன. மக்தப் மதரஸா என்றால் ஆரம்பப் பாடசாலை என்று பொருள். நமது இளவல்களுக்கு மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகள், கட்டாயக் கடமைகள், பெரும் பாவங்கள், உபரியான நற்செயல்கள் ஆகியவற்றைக் குறித்த முதன்மை அறிமுகத்தை வழங்குவது தான் மக்தப் மதரஸாவின் பிரதான நோக்கமாகும்.
பொதுக் கல்வியும் சமயக் கல்வியும்
ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் குருகுலக்கல்வி, ஓராசிரியர் முறை நடைமுறையில் இருந்தது. பொருளாதாரத் தேவைகளுக்கு ஏதேனும் தொழில் ஒன்றைத் தெரிந்து கொள்வதும் குடும்ப வணிகத்தைத் தொடர்வதும் அன்றைய வழமையாக இருந்தது. இன்றும் தொடரும் பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய கல்விமுறை அப்போது மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கல்வி நிறுவனமயமாக்கப்பட்டது. ஓர் ஆசிரியர் முறை அகற்றப்பட்டு பல ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. ஒரு ஆசிரியர் பல மாணவர்களை உருவாக்கிய நடைமுறை மாறி பல ஆசிரியர்கள் சேர்ந்து மாணவர்களை உருவாக்கின்ற நிறுவன முறை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரபலமான ஆசிரியர்களைத் தேடிச் சென்று கல்வி பயிலும் முறை அகன்று பள்ளிக்கூடங்கள் அல்லது நிறுவனங்களின் பெயர் பிரபலமானது.
ஆங்கிலேயர் உருவாக்கிய கல்விமுறை தொழிற்கல்வியை வழங்கியது. ஆங்கிலம் பிரதான மொழியாக இருந்தது. ஆகவே வேலைவாய்ப்பைப் பெறும் பொருட்டு மக்கள் பொதுக் கல்வியை நோக்கிச் சென்றார்கள். பொதுக் கல்வி, சமயக் கல்வி என்ற பாகுபாடு அப்போது உருவானது. இந்தத் தருணத்தில் தான் அகில இந்திய அளவில் அறிஞர்கள் இஸ்லாமிய அடிப்படைக் கல்வியை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் காலை மாலை மதரஸாக்களை மஸ்ஜிதுகளில் உருவாக்கினார்கள். இன்று வரை இஸ்லாமிய மறுமலர்ச்சியை உருவாக்குவதில் மக்தப் மதரஸாக்களின் பங்களிப்பு மிகப் பெரியது.
மக்தப் மதரஸாக்கள் ஏன் வேண்டும்?
ஒருவர் ஐந்து ஆண்டுகள் மருத்துவம் கற்றறிந்த பின்னர் அதில் நிபுணத்துவம் பெறுகின்றார். மருத்துவர் என்று அழைக்கப்படுகின்றார். ஏதேனும் ஒன்றைக் கற்றறிந்த பின்னர் தான் அதில் நிபுணத்துவம் அடைய முடியும். அப்படியென்றால் வாழ்நாள் முழுவதும் ஒருவர் முஸ்லிமாக வாழ்வதற்கு இஸ்லாம் குறித்த கற்றல் அவசியமாகிறது. ஆனால் இஸ்லாத்தை கல்வியாக அறிகின்ற பருவத்தைக் கட்டாயமாகக் கடக்கின்ற ஒரு சூழல் சமூகத்தில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது. அதற்கான ஓர் ஏற்பாடு அவசியம் வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்கின்ற பொழுது அதற்கான பதிலாக வந்து நிற்பது தான் மக்தப் மதரஸாக்கள். ஒருவர் பத்து வயதிலிருந்து பதினான்கு வயது வரை ஐந்து ஆண்டுகள் தினசரி ஒரு மணி நேரம் அல்லது அதைவிடக் குறைவாக மார்க்கத்தைக் கற்றுக்கொண்டால் தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகின்ற அளவிலான இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற சிறப்பான ஏற்பாடு உண்மையில் உன்னதமானதாகும்.
10 வயது முதல் 14 வரை உள்ள ஐந்து ஆண்டுகள் மிக முக்கியமானவை. குழந்தைப் பருவத்தில் இருந்து பெரியவர்களாக மாறுகின்ற தருணம். இந்தக் காலகட்டத்தில் பெரியவர்களான பின் எப்படி வாழ வேண்டும், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, இறையச்சம், மறுமைச் சிந்தனை, இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பின்பற்றுதல் உள்ளிட்ட அடிப்படையான, வாழ்க்கைக் கலை சார்ந்த விஷயங்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். எதையும் கற்றுத் தராமல் எதுவும் கற்றறியாமல் வளர்கின்ற இளைய தலைமுறை குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் சுமையாக மாறிவிடுவார்கள். ஆகவே நாளைய இளைய தலைமுறை அதாவது நமது குழந்தைகள் சிறப்பாக வார்த்தெடுக்கப்பட, நல்லவர்களாக உருவாகிட, மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களை அறிந்து கொள்ள, மக்தப் மதரஸாவிற்கு சிறுவர்கள் வருவதை உறுதி செய்வது பெற்றோர்களின் கடமையாகும்.
பல் சமய மக்களோடு கலந்து வாழ்கின்ற இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாத்தைக் குறித்த அடிப்படைப் புரிதல் உள்ளவர்களால் மட்டும் தான் இஸ்லாம் தொடர்பான உரையாடலை மற்ற மக்களிடம் முன் வைக்க முடியும். அழைப்புப் பணி என்பது ஏதோ மேடைப் பேச்சோடு நின்று போகின்ற ஒன்று அல்ல. சக மனிதர்களோடு உரையாடுதல், வெவ்வேறு விஷயங்களைக் குறித்துப் பேசுகின்ற பொழுது இஸ்லாமியப் பார்வையை முன் வைத்தல். இஸ்லாம் தொடர்பான புரிதலைச் சிறு வயதில் ஏற்படுத்துவது மக்தப் மதரஸாக்கள் தான். உரிய வயதில் மார்க்கச் செய்திகளை உள் வாங்கிய சிறுவர்கள் பின்னாளில் சிறந்த அழைப் பாளர்களாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.
ஜும்ஆ உரைகள், மார்க்கம் தொடர்பான வேறு பிற சொற்பொழிவுகள், இஸ்லாமிய நூல்கள் அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு இஸ்லாமிய கலைச் சொற்கள், அடிப்படைச் செய்திகளைச் சிறு வயதில் அறிந்திருப்பது அவசியம். மக்தப் மதரஸா அதற்கான சிறந்த வாய்ப்பு என்றால் அது மிகையல்ல. சிறுவயதில் மக்தப் மதரஸாவில் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை அறிந்த ஒருவரால் இஸ்லாம் குறித்த எந்த சொற்பொழிவுகளையும், நூல்களையும் உள்வாங்கிக் கொள்ள முடியும். வாசிப்பதும் கேட்பதும் அருகிப்போன இந்தக் காலகட்டத்தில் மக்தப் மதரஸாக்களும் இல்லாமல் போய்விட்டால் இளைய தலைமுறையின் இஸ்லாமிய எழுச்சி எப்படிச் சாத்தியமாகும்?
மக்தப் மதரஸாக்களின் வீழ்ச்சி ஏன்?
இஸ்லாமிய அடிப்படைக் கல்வியை முஸ்லிம் சமுதாயம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒரு குழந்தையின் எதிர்காலம் என்பது மரணத்திற்கு முந்தைய காலம் மட்டுமல்ல! மரணத்திற்குப் பிந்தைய மறுமை வாழ்க்கையும் எதிர்காலம் தான் என்பதைப் புரிந்து கொள்ளாத அறியாமை இன்றும் முஸ்லிம்களிடம் தொடர்கிறது. ஆகவே தான் தன்னுடைய குழந்தையின் முப்பதாவது வயதில் 40ஆவது வயதில் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் மரணத்திற்குப் பிறகு சுவனம் சென்று சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை. இவர்களைக் குறித்துத் தான் திருக்குர்ஆன் மறுமையை விற்று உலகத்தை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் என்று சாடுகிறது.
உலகக் கல்வியின் முக்கியத்துவத்தை மிகத் தாமதமாகப் புரிந்து கொண்ட முஸ்லிம் சமுதாயம் அதற்குப் பலியாக இஸ்லாமிய அடிப்படைக் கல்வியை ஆக்கி இருப்பது வேதனையின் உச்சகட்டமாகும். மக்தப் மதரஸாவின் அனைத்து வகையான வீழ்ச்சிக்கும் முழுக் காரணமாக இருப்பது பள்ளிக்கூட கல்விக்கு அதீத முக்கியத்துவத்தையும் தேவைக்கும் அதிகமான நேரத்தை வழங்குவதும் தான். 10 மணி நேரம் பள்ளிக்கூடம், அதற்குப் பிறகு நான்கு மணி நேரம் டியூஷன் என்ற அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குக் கூடுதல் மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தை அடைய முயல் வதைப் போல் மதரஸா கல்விக்கும் நாம் முக்கியத்துவம் வழங்குவதில்லை.
அதுமட்டுமில்லாமல் ஆங்காங்கே தெருவுக்குத் தெரு குர்ஆன் வகுப்புகள் நடைபெறுவதும் மிக முக்கியமான காரணமாகும். ஒவ்வொரு மஹல்லாவிலும் நம்முடைய குழந்தைகள் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கே நடைபெறும் மக்தப் மதரஸாவில் பயில்வதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிவாசல்களில் வகுப்புகள் நடைபெறுவதற்குத் தடையாக இருக்கின்ற எந்தக் காரணத்தையும் மஹல்லா நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விட்டு விடக்கூடாது. அது மட்டுமில்லாமல் குர்ஆனை அரபியில் ஓதக் கற்றுக் கொள்வதைப் பெருமையாகப் பார்க்கப்படும் அதே நேரத்தில் இஸ்லõத்தை அறிவது பின்னுக்குத் தள்ளப்படுகின்றது. ஒருவர் தனக்குத் தேவையான இஸ்லாமிய அறிவைக் கற்றுக் கொள்வதும் குர்ஆனை அரபியில் மட்டும் ஓதக் கற்றுக் கொள்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.
ஆகவே தான் இன்றைக்கு இணையத்தில் தஜ்வீது வகுப்புகள் மிகப்பெரிய செல்வாக்குப் பெற்று வருகின்றன. முஸ்லிம்கள் நடத்தும் பல பள்ளிக்கூடங்கள் இந்த ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு முஸ்லிம் குழந்தைகளை இஸ்லாத்தில் வார்த்தெடுப்பதாகக் கூறிக்கொண்டு இலட்சக்கணக்கில் கட்டணங்கள் பெறும் கல்வி நிறுவனங்களாக மாறி வருகின்றன. அத்தகைய பள்ளிக்கூடங்களில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் தொடக்கம் என்னவோ திருக்குர்ஆன் வசனங்களாக இருந்தாலும் ஆடலும் பாடலும் கொண்ட சாதாரண திருவிழா நிகழ்ச்சிகளாக நடைபெறுவதைப் பார்க்க முடிகின்றது. மக்தப் மதரஸாக்களின் தடைகளை உரிய முறையில் களைந்து சீர் செய்யாவிட்டால், பொருளாதாரத்திலும் நவீன தொழில்நுட்பத்திலும் மிளிர்கின்ற அடுத்த தலைமுறை உருவாகும். ஆனால் மறுமையில் வெற்றி பெற்று சுவனம் செல்லும் முஸ்லிம்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள்.