ஒரு நாடு காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த வரலாற்றை எடுத்துப் பார்த்தால் நாட்டைக் கட்டமைக்க எடுத்த முயற்சியும், தீவிரக் கவனமும் மிக முக்கியமானது. அப்படியான வரலாறு இந்தியா வுக்கும் உண்டு. விடுதலையடைந்த இந்தியாவின் மிகப் பெரும் சவால் இந்தியாவை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செலுத்துவது மட்டும் இல்லை. மாறாக மாகாணங்களாகப் பிரிந்து கிடந்த நிலங்களையும், மக்களையும் ஒன்றுபடுத்தி அவர்களுக்குள் இந்தியர் என்ற ஒற்றுமையையும் வளர்ந்தோங்கச் செய்ய வேண்டி இருந்தது. அதற்காக அன்றைய முஸ்லிம் லீக், காங்கிரஸ் போன்ற அமைப்புகள் நாடு தழுவிய பரப்புரைகளைப் போல் பணி செய்து ஒற்றுமையை வளர்ந்தோங்கச் செய்தனர். அதேசமயம் மக்களுக்குக் கல்வி தலையாயக் கடமை என்பதைப் புரிய வைக்கப் பாடுப்பட்டனர்.
இச்சமயத்தில் தான் இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய முஸ்லிம் அறிஞரும், இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய முஸ்லிம் தலைவர்களில் முதன்மையானவருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் விடுதலை இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்திய மக்களின் ஒற்றுமைக்காகவும், அறிவு வளர்ச்சிக்காகவும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முறையை உருவாக்க ஆசாத் பாடுபட்டார். நாட்டில் உள்ள மக்களின் ஏற்றத் தாழ்வுகளை உணர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மக்கள் அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி கிடைக்கவும் வழி செய்தார். அன்றே நவீன கல்வி முறைக்கும் வித்திட்டவர் ஆசாத் தான். இன்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் இந்திய IITமாணவர்கள் சாதனை புரிவதற்கு முதற் காரணமே ஆசாத் நிறுவிய இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் தான். மட்டுமின்றி இந்தியாவில் பல்கலைக்கழக மானியக் குழு அமைவதற்கும் அவர் பாடுபட்டார்.
இப்படி ஒவ்வொரு துறைகளிலும் இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்து வந்தது வரலாற்றுச் சாதனை. ஆனால் இன்றைய இந்தியாவை 2014க்கு முன், 2014க்கு பின் என்று ஆய்வு செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இந்தியாவில் பிரிவினைவாதப் பேச்சு, கல்வியில் பின்தங்கிய நிலை, நவீன கல்வியில் கவனம் செலுத்தாமை என அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒரு நாட்டின் கல்வி முறை அதன் தரத்தில் பின்தங்குவது அல்லது வளர்ச்சி இல்லாமல் இருப்பது போன்ற நிலை அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. நலிவுற்றுக் காணப்படும் நாட்டின் கல்வி நிலை பல காரணங்களால் நிகழலாம், உதாரணமாக, போதிய நிதி இல்லாமை, நல்ல ஆசிரி யர்கள் இல்லாதது, நவீன கல்வி முறைகள் இன்மை, மாணவர்களின் ஆர்வமின்மை போன்றவை. இதில் மாணவர்களுக்குக் கல்வி ஆர்வம் இல்லாமல் போவதற்கும் அரசே முக்கிய காரணம். ஏனெனில், எப்படி ஒரு நாடு வகுக்கும் வருமான வரிகள் வணிகத்தில், தனிநபர் வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதைவிடப் பெரும் பாதிப்பு கல்வி யிலே அசட்டையாக இருப்பது ஆகும்.
ஒரு நாட்டின் கல்வி முறையின் தரம், மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்கும், அவர்கள் வாழ்க்கையில் முன்னேறத் தேவையான திறன்களைப் பெறுவதற்கும் முக்கியமானது. நலிவுற்று வரும் கல்வி முறை மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதில் தோல்வியடையும், மேலும் அவர்களது எதிர்காலத்தைப் பாதிக்கும். நவீன கல்வி முறைகள் இல்லாதது, மாணவர்கள் உலகின் தேவைகளுக்கு ஏற்ப தயாராகாமல் போகலாம். தொழில்நுட்பம், மற்ற நவீன கல்வி முறைகளைப் பயன்படுத் தாத கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கான சரியான கல்வியை வழங்க முடியாது.
இன்று பாஜக ஆட்சியில் கல்வி முறையில் மறுசீரமைப்பு என்ற பெயரில் வேத காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல முயல்கிறார்கள். இது இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக நற்சான்றிதழ்களை அழிக்க வல்லது. காவிமயமாக்கல், தனியார்மயமாக்கல், எதேச்சதிகாரம் ஆகிய மூன்று கொள்கைகள் பாஜகவின் கல்விக் கொள்கையாய் உள்ளன. காவிமயமாக்கல் அல்லது பாடத்திட்ட மாற்றம், நிறுவன மறுசீரமைப்பு மூலம் இந்து தேசியவாத வடிவத்தில் கல்வியை மறுசீரமைத்தல், வரலாற்று ரீதியாக பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் (RSS) முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகிறது.
2020ஆம் ஆண்டு பாஜக அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் வெளியிடப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, கல்வியை காவிமய மõக்குவதற்கான ஒரு விரிவான செய்முறையாகும். காவிமயமாக்கல் பிராமண ஸ்டீரியோடைப்களை வலுப்படுத்தவும், எதேச் சதிகாரத்தை வலிமையாக்கவும், இந்தியாவின் முஸ்லிம் ஆட்சியாளர்களை அரக்கர்களாக சித்திரிக்கவும், வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட ஆரிய குடியேற்றக் கோட்பாட்டை மறுக்கவும், வகுப்புவாத துருவமுனைப்பை ஊக்குவிக்கவும் முனைகிறது.
ராஜஸ்தானில் உள்ள பாஜக அரசு 2016ஆம் ஆண்டு புதிய பள்ளி பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்தியது. அதில் அறிவியல் பாடப் புத்தகங்கள் புராண நூல்களை அடிப்படையாகக் கொண்டவை. இலக்கியம், சமூக அறிவியல் பாடப்புத்தகங்கள் சாதி அமைப்பின் தீமைகளை மூடி மறைக்கின்றன. இந்தப் பாடப் புத்தகங்கள் பெரும்பாலும் சாதி, பாலின ஸ்டீரியோடைப்களை வலுப்படுத்துகின்றன, தேச பக்தியை ஆயுதப்படைகளுக்கான மரியாதையுடன் இணைக்கின்றன. முக்கிய வரலாற்று நிகழ்வுகளைத் திரிக்கின்றன.இவர்கள் போதிக்கும் பிரிவினைவாத அரசியல் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும், மதச்சார்பின்மையை அடியோடு அழிக்கும். கல்வி ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணி என்பதால், கல்வி முறையை மேம்படுத்துவது அவசியம். அதில் அரசின் கவனக்குறைவு நாட்டின் கல்வி நிலையை நலிவுறச் செய்யும்.