மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

வக்ஃப் திருத்தச் சட்டம்: இனி நாம் செய்ய வேண்டியது என்ன?
வி.எஸ்.முஹம்மத் அமீன், மே 16-31, 2025


1. சட்டப் போராட்டம் தொடர வேண்டும்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உள்ளிட்ட அமைப்புகள், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், APCRஉள்ளிட்ட 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு ஏப்ரல் 16ஆம் நாள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன் ஒன்றிய அரசுக்குப் பல வினாக்களை எழுப்பி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

பயன்பாட்டின் அடிப்படையிலான வக்ஃப் (waqf by user) சொத்துகள், இனி வக்ஃபாக அங்கீகரிக்கப்படாதா? பல நூற்றாண்டாகப் பயன்பாட்டின் படி வக்ஃபாக (waqf by user) உள்ளவற்றைப் பதிவு செய்ய வேண்டுமா? சச்சரவு உள்ள பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற அதிகாரி விசாரணையை முடிக்கும் வரை அவை வக்ஃப் சொத்து அல்ல எனக் கூறுவது நியாயமா? வக்ஃப் என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டதை பிரிவு 2அ எப்படி மீற முடியும்? புதிய திருத்தங்களுக்குப் பிறகும் மத்திய வக்ஃப் கவுன்சில் மாநில வக்ஃப் வாரியங்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருப்பார்களா? வக்ஃப் வாரியங்களில் இந்துக்கள் இடம் பெறுவது போல், இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்கள் இடம்பெற முடியுமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

‘நீண்ட காலத்துக்கு முன்பே வக்ஃப் சொத்துகளாக இருப்பவை ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இத்திருத்தச் சட்டத்தில் இருக்கின்றது. திருத்தங்கள் வாயிலாக வரலாற்றை மாற்றி எழுத முடியாது. நீண்ட காலத்துக்கு முன்பே வக்ஃப் சொத்துகளாக உள்ளதை அரசு எப்படிப் பதிவு செய்யும், அவர்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும்? (வக்ஃப் சட்டம்) தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்,  ஆனால் நியாயமானவையும் உள்ளன’ என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறினார்.

நீதிபதி சஞ்சய் குமார், ‘திருப்பதி கோயில் நிர்வாகக் குழுவில் இந்துக்கள் இல்லை எனக் கூற முடியுமா?’ என சொலிசிட்டர் ஜெனரலுக்குக் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து மூன்று முக்கிய நிபந்தனைகளை விதித்து இடைக்காலத் தடையை நீதிமன்றம் முன்வைத்து நாளை மதியம் மீண்டும் விசாரணை நடைபெறும் என்று கூறியது.

    1. நீதிமன்றத்தால் வக்ஃப் என உத்தரவிடப்பட்ட சொத்துகளை ரத்து செய்யக் கூடாது, அது பயன்பாட்டின் அடிப்படையிலான வக்ஃப் (waqf by user)ஆக இருந்தாலும் சரி, ஒப்பந்தத்தின் அடிப்படையிலான வக்ஃப் (waqf by Deed) ஆக இருந்தாலும் சரி.

    2. மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தும் காலகட்டத்தில் குறிப்பிட்ட பகுதி வக்ஃப் சொத்தாகக் கருதப்படாது என்ற திருத்தச் சட்டத்தின் பிரிவு நடைமுறைக்கு வராது.

    3. மத்திய வக்ஃப் கவுன்சில், மாநில வக்ஃப் வாரியங்களின் அனைத்து உறுப்பினர்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும், (அலுவல் ரீதியான உறுப்பினர்களைத் தவிர) மீண்டும் ஏப்ரல் 17ஆம் நாள் நடந்த விவாதத்தில் அரசின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் ‘சட்டத்தில் சில நேர்மறையான விஷயங்கள் இருப்பதை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். அதேபோல் சட்டத்தை நிறுத்தி வைக்கக் கூடாது என்று சொல்வதும் சரிதான், எல்லா நேரத்திலும் சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்தி வைப்பதில்லை’ என்று கூறினர். அதேசமயம் எதிர்த் தரப்பு மனுதாரர்கள் 73 பேரில் 5 மனுதாரர்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். மற்றவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டவையாகக் கருதப்படும் என்றும் கூறியுள்ளனர். மீண்டும் இவ்வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து அதில் வெற்றி பெற வேண்டும். அது நம் முன் இருக் கும் மிக முக்கியமான முதன்மைப் பணியாகும்.

2. மக்கள் போராட்டம் வீரியமடைய வேண்டும்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெறும் வரையில் மக்கள் போராட்டம் தொடர வேண்டும். தொடக்கத்தில் சூடுபிடிக்கும் போராட்டம் நாளடைவில் தளர்ந்து விடக்கூடாது. நீதிமன்றத்தின் இடைக் கால உத்தரவு நமக்கு நம்பிக்கையைத் தந்தாலும் அது உளவியல் ரீதியில் போராட்ட வீரியத்தைக் குறைத்து விடும். அதையும் தாண்டி நாம் போராட வேண்டும். வெறுமனே ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்றில்லாமல் கருத்தரங்கங்கள், ஊடக விவாதங்கள் போன்ற பல்வேறு வழிமுறைகளையும் கையாள வேண்டும். முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் ஏப்ரல் 30 ஆம் நாள் இரவு 9 மணிக்கு 15 நிமிடம் விளக்கை அணைக்கும் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது. இது போன்ற கவனத்தை ஈர்க்கும் அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

3. சகோதரச் சமுதாயச் சொந்தங்களும் போராட வேண்டும்

சகோதரச் சமுதாயச் சொந்தங்களை ஒருங்கிணைத்துப் போராட வேண்டும். முஸ்லிம்கள்  பாதிக்கப்படும்போது முஸ்லிம்கள்தான் போராட வேண்டும் என்ற நிலை மாற வேண்டும். நம் பக்கம் இருக்கும் நீதியைப் புரிந்து கொண்டு போராடத் தயாராக இருக்கும் சகோதரச் சமுதாயச் சொந்தங்களைக் களத்திற்கு அழைத்து வர வேண்டும். பேச்சாளர்களாக சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக உரை நிகழ்த்துகிறார்கள். அதுபோல அவர்கள் அதிகம் கலந்து கொள்ளும் நிகழ்வுகளும், அவர்களே ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளும் நடைபெற வேண்டும். தமிழக ஒற்றுமை மேடை ஏற்பாடு செய்த கருத்தரங்கம் சிறந்த முன்னுதாரணம். இது போன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும்.

4. அறிவுத் தளத்தில் தயாராக வேண்டும்

போராட்டம்  ஆர்ப்பாட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி விடுகின்றனர். உணர்வுப் பூர்வமான உரைகளும் நிகழ்த்தப்படுகின்றன. உணர்வு மேலெழும்பும் முழக்கங்களும் எழுப்பப்படுகின்றன. ஆனால் வக்ஃப் என்றால் என்ன? வாரியத்தின் பணிகள் என்ன? இத் திருத்தச் சட்டத்தின் அபாயங்கள் என்ன? வக்ஃப் சட்டத்தைத் திருத்தவே கூடாதா? நாடாளுமன்றம் கூடி எடுத்த முடிவை நீதிமன்றம் நீக்கிவிட முயல்வது நியாயமா? என்பதைக் குறித்தும் விளக்க வேண்டும்.

வக்ஃப் சட்டத்தில் 44 திருத்தங்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால் எல்லாத் தளங்களிலும் ஐந்தாறு திருத்தங்களைக் குறித்துத்தான் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த 44 திருத்தங்கள் என்ன? அதிலுள்ள அபாயங்கள் என்னென்ன? என்பதைக் குறித்து அவசியம் அறிய வேண்டும். பொது வெளியில் அது குறித்த விவாதம் எழ வேண்டும். 1995 ஆம் கொண்டுவரப்பட்ட திருத்தத்திலிருந்து இது எவ்வகையில் மாறுபடுகிறது என்பதை ஒப்பாய்வு செய்து விளக்க வேண்டும்.

தனிப்பட்ட சந்திப்புகளின் மூலம் வக்ஃப் குறித்த புரிதலையும், தெளிவையும் அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும். இது முஸ்லிம்களின் பிரச்னை மட்டுமல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் படுபாதகச் செயல் இது. அமைப்புச் சட்டம் 14,25,26,29 ஆகிய பிரிவுகளை அப்பட்டமாக மீறுகிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நிலையிலிருந்து மாறுவதற்கான அபாயகரமான முன்னெடுப்பு இது, பாரபட்சம் மிக்கது. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடியது என்பதை எடுத்துரைக்க வேண்டும். துண்டறிக்கைகள், வக்ஃப் குறித்த நூல் களைப் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சுருங்கச் சொன்னால் எதற்காகப் போராடுகிறோம் என்பதை போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதற்கேற்ப பரப்புரைகளின் உரைகள், ஜூம்ஆ உரைகள் அமைய வேண்டும். உணர்வுப் பூர்வமாக உரத்து முழங்குவதால் மட்டுமே பிரச்னைகளைத் தீர்த்துவிட முடியாது.

5. அவதூறுகளை முறியடிக்க வேண்டும்

இந்திய பாதுகாப்பு, ரயில்வேக்குப் பிறகு அதிக சொத்துகள் வக்ஃபில் இருக்கின்றன. வாரியத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. வக்ஃப் சொத்துகளை அபகரிப்பதை மீட்பதற்காகத்தான் இந்தத் திருத்தச் சட்டம். பெண்களுக்கான உரிமையை இதன் மூலம் வழங்குகின்றோம். தீர்ப்பாயங்களின் முடிவை எதிர்த்து நீதி மன்றம் சென்று உரிமையைப் பெற முடியும். வக்ஃப் சொத்துகள் கணக்கீடு செய்வதற்கு இது வழிவகுக்கும். தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராமத்தை அபகரித்து விட்டார்கள். அதனால் தான் இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பன போன்ற பல பொய்களையும், அவதூறு களையும் அள்ளி வீசுகின்றனர். இந்த அவதூறுகளுக்கும், பொய்களுக்கும் சான்றுகளுடன் பதிலளிக்க வேண்டும். நியாய மான கேள்விகளின் மூலம் பொதுமக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டும்.

6. ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும்

நம்மிடம் முழு நேரச் சேனல்கள், தொலைக்காட்சிச் சேனல்கள் இல்லை. ஊடகங்கள் பல விலைபோய் விட்டன. பொய்ச் செய்திகள்தான் முண்டியடித்துக் கொண்டு வருகின்றன. நம்மிடம் இருக்கும் பத்திரிகைகள், சமூக வலைதளங்களைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். கலை, நாடகங்கள் வாயிலாக வக்ஃப் திருத்தச் சட்டத்தின் ஆபத்தை உணர்த்த வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகச் சிறப்பான வாதங்களை முன்வைத்தார்கள். சகோதர சமுதாயச் சொந்தங்கள் பலரும் ஊடக விவாதங்களில் ஆழமான கேள்விகளை எழுப்பினார்கள். பல ஆளுமைகள் கட்டுரைகளை எழுதினார்கள். அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். பரவலாக்க வேண்டும். ஊடகவியலாளர்களைச் சந்தித்து அவர்களுக்குப் போதிய செய்திகளைக் கொடுக்க வேண்டும். பிழையான செய்திகளுக்கு உரிய மறுப்பை வழங்க வேண்டும்.

7. தொடர் சந்திப்புகள் அவசியம்

இளைஞர்கள்,  கல்வியாளர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள்,  பெண்கள், அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், வியா பாரிகள் எனப் பல தளங்களிலும் தொடர்ந்து மக்களைச் சந்தித்துப் பேச வேண்டும். முஸ்லிம்களிடம் மட்டுமின்றி சகோதர சமுதாயச் சொந்தங்களிடமும் தனிப்பட்ட சந்திப்புகளை மேற்கொண்டு வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கேடுகள், ஒன்றிய அரசின் வெறுப்பு, நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, பிரச்னைகள் எனப் பேச வேண்டும். விரிவான உரையாடல் களங்களை ஏற்படுத்த வேண்டும்.

8. நம்பிக்கை இழந்து விடக்கூடாது

தொடர்ந்து முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற உளவியல் தாக்குதல்களால் நாம் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. நிராசை அடைந்து விடக்கூடாது. இந்தச் சட்டம் நிரந்தரம் அல்ல. இதுவும் திருத்தத்திற்கு உள்ளாகக் கூடியது. என்னதான் வெறுப்பை விதைத்தாலும் உண்மையின் பக்கம் நிற்கக் கூடிய மக்கள் இருக்கின்றார்கள். 232 வாக்குகள் வக்ஃப் சட்டத்தை எதிர்த்து பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. வீரியமான விவாதத்தை முன்னெடுப்பவர்கள்  இருக்கின்றார்கள். தமிழ்நாடு அரசு முதலமைச்சர் சட்டசபையில் முழக்கமிடுகிறார். கருப்புப் பட்டை அணிந்து வருகிறார். வழக்குத் தொடுக்கிறார். மேற்கு வங்க சட்டமன்றமோ ஒருபடி மேலே போய் இந்த திருத்தச் சட்டத்தை மேற்குவங்கத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்கிறது.

கேரளாவில் உள்ள ஸ்ரீ நாராயண தர்மம் மானவ அறக்கட்டளை வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. முழுமையான தடை வரும் என்று எதிர்பார்ப்போம். எல்லாவற்றுக்கும் மேல் சத்தியம் நிச்சயம் வெல்லும், அசத்தியம் நிச்சயம் தோற்றுப்போகும். சூழ்ச்சியாளர்களின் சூழ்ச்சியை இறைவன் முறியடிப்பான். சோதனையான கால கட்டங்களில் நாம் பயிற்சியும், முயற்சியும் மேற்கொள்ளும்போது நம்மிடமுள்ள ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்கிறோம். இது ஜனநாயக நாடு. ஜனநாயகத்தின் மூலம் நிச்சயம் நாம் ஒருநாள் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் களமாட வேண்டும்.

9. ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட வேண்டும்

வக்ஃப் சொத்துகளை அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி தனிநபர் பலரும் ஆக்கிரமித்துள்ளனர். இந்தியாவில் சுமார் 58929 வக்ஃப் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கிரண் ரிஜிஜு நாடாளு மன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டார். வக்ஃப் நிலங்களை மீட்க வேண்டும். சில முஸ்லிம்களே வக்ஃப் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். தவறாகப் பயன்படுத்துகின்றனர். வெறும் 100 ரூபாய் வாடகைக்கு மிகப் பெரிய சொத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். வக்ஃப் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் இறைவனுக்கு அஞ்ச வேண்டும். மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்க வேண்டும். நாம் மாறாத வரை இங்கு மாற்றங்கள் சாத்தியமில்லை.

‘..எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. மேலும், அல்லாஹ் ஒரு சமூகத்திற்குத் தீமையை நாடிவிட்டால் அதனை யாராலும் தடுத்து நிறுத்திட இயலாது. அல்லாஹ்வுக்கு எதிராக அத்தகைய சமூகத்தாருக்கு உதவி செய்வோரும் எவருமிலர்’ (திருக்குர்ஆன் 13:11)

10. பாதுகாப்போம், பயன்படுத்துவோம்

தமிழ்நாடு முழுவதும் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான காலியாக, பயன்படுத்தாமல் உள்ள இடங்களில் சமுதாய மக்கள் பயன்பெறும் வண்ணம் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மதரஸாக்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழ் நாடு வக்ஃப் வாரியம் அனைத்து அனுமதிகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வழங்கத் தயாராக உள்ளது என்று வக்ஃப் நிறுவனங்களின் கீழ் இயங்கும் முத்தவல்லிகளுக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார்.

இது மிகத் தாமதமான, அதே நேரத்தில் வரவேற்கத்தக்க முடிவு. வக்ஃப் நிலத்தை முறையாகப் பயன்படுத்தினாலே முஸ்லிம் சமுதாயத்தின் பெரும்பாலான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். வக்ஃப் செய்தவர்கள் எந்த நோக்கத்திற்காக வக்ஃப் செய்தார்களோ அந்த நோக்கமும் அதன் மூலம் நிறைவேறும். அதுபோல இருக்கின்ற வக்ஃப் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நீண்ட நாள்களாகப் பயன்பாட்டில் உள்ள வக்ஃப் நிலங்கள் முன்பு வாய்மொழி மூலம் வக்ஃப் செய்யப்பட்டவை. அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. நன்கு அறியப்பட்ட செயல்பாட்டில் உள்ள வக்ஃப் நிலங்களுக்கு பட்டா உள்ளிட்ட உரிய ஆவணங்களைப் பெறும் வகையில் முழு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

11. அழைப்பியலுக்கான அழகிய வாய்ப்பு

இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்களைக் குறித்தும் மிகப் பிழையாகச் சித்திரிக்கப்பட்டு வரும் சூழலில் அந்தப் பிழையான கருத்துருவாக்கத்தை உடைத்து நொறுக்குவதற்கான அழகிய வாய்ப்பாக இச்சூழலைப் பயன்படுத்தவேண்டும். இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டம். வெறும் சடங்குகள், வழிபாடுகளுடன் நின்றுவிடுகின்ற மதம் அல்ல. இஸ்லாம் வாழ்வியலைச் சொல்லும் மார்க்கம். வறுமையை ஒழிப்பதற்கான ஜகாத்தை வழிபாடாகக் கொண்ட மார்க்கம் இஸ்லாம். வறுமையை ஒழித்து பொருளாதார நீதியை வேண்டி நிற்கும் பல திட்டங்களை இஸ்லாம் முன்வைக்கின்றது. தான தர்மங்கள் செய்தல், ஜகாத் எனும் கட்டாயக் கொடை, வட்டியில்லா நிதி உதவி, பைத்துல் மால்கள், உழைத்துப் பிழைப்பதை ஊக்குவித்தல் ஆகியவற்றில் மிக முக்கியமானது ஸதக்கத்துல் ஜாரிய்யா எனும் நிலையான நல்லறம்.

முஸ்லிம்கள் தங்களின் சொந்தப் பணத்தை இறைபாதையில் அர்ப்பணிக்கும் அழகிய திட்டத்தை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. இந்த நிலை யான நல்லறப் பணிகளில் ஒன்றுதான் வக்ஃப் செய்தல். இறைவனின் திருப்தியை நாடி இறைவனுக்காகத் தம் சொத்தைத் தானமாக வழங்கும் உயரிய பண்பின் காரணமாகத்தான் இஸ்லாமிய செல்வந்தர்கள் தங்களின் பெரும் பெரும் சொத்துகளைத் தானமாக வழங்கினார்கள். இந்த வக்ஃபிலிருந்து முஸ்லிம்கள் மட்டுமல்ல, அனைத்து சமுதாய மக்களும் பயன்பெற்று வருகின்றனர். இந்த அடிப்படையில் வக்ஃபின் நோக்கம், இஸ்லாம் உருவாக்க விரும்பும் சமுதாயம் போன்ற செய்திகளையும் நாம் இந்த நேரத்தில் மிக அழகிய முறையில் உரையாட வேண்டும்.

12. இறைவனையே சார்ந்திருப்போம்

மகிழ்வான சூழலானாலும், துன்பமான சூழலானாலும், சோதனையான காலகட்டங்களில் மட்டுமின்றி எல்லாச் சூழலிலும் நாம் இறைவனையே சார்ந்திருக்க வேண்டும். இந்தச் சோதனைகளை நாம் இறை உதவி கொண்டுதான் வெல்ல முடியும். எனவே நாம் நம் தவறுகளைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும். நமது பிழைகளுக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும். இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் முயற்சி எதுவும் செய்யாமல் பிரார்த்தனைகளின் மூலம் வென்றிட முடியாது. முழுமையான முயற்சி செய்ய வேண்டும். இறைவனையே சார்ந்திருக்க வேண்டும். இந்தச் சோதனையும் நமக்கு நன்மையை ஈட்டித்தரும் வாய்ப்பும், சூழலும் உள்ளது.

நேற்று பாபர் மஸ்ஜித், குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற தாக்குதல்கள். இன்று வக்ஃப் பிரச்னை. நாளை பொது சிவில் சட்டம் போன்று வேறு எதுவும் வரலாம். எல்லாச் சூழலிலும் நாம் நிராசையோ, சோர்வோ அடையாமல் தொடர்ந்து போராட வேண்டும். சத்தியம் சோதனைக்கு உள்ளாக்கப்படும். ஆனால் ஒருகாலமும் தோற்றுப் போவதில்லை. சத்தியம் வெல்லும். அசத்தியம் அழியும். அசத்தியம் அழிந்தே தீரும் என்பது இறை நியதி. கடந்த கால வரலாறும் அதையே நமக்கு உரத்துச் சொல்கிறது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்