மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

கல்வியில் மொழியைத் திணிக்காதீர்!
ச.அய்யம்பிள்ளை மேனாள் பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, மே 16-31, 2025


இன்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகள் முதல் இந்தியாவின் நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்படக்கூடிய தலைப்பில், சமரசம் 1631 மார்ச், 2025, பக்கம் 12இல் வெளியான மும்மொழிக் கொள்கை கட்டுரை முழுமையானதாகவும் சிறப்பான தாகவும் இருந்தது. பள்ளிப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவன் என்பதாலும், அரசு உதவியினால்  கல்வியையும் வாழ்வையும்  பெற்றவர்களில் ஒருவன் என்பதாலும், அந்தக் கட்டுரையைப் படித்ததும் எனக் குத் தோன்றிய சில கருத்துகளை சமரசம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இன்று நம் தலையாயப் பிரச்னைகளில் மிக முக்கியமானதாக இருப்பவை  குறைவான வருமானமும் ஏழ்மையும் தான். உலகிலேயே அதிக ஏழைகள், யாசகர்கள், வீடில்லாதோர், பொது வெளிகளில் மலம் கழிப்போர் வாழும் இடமாக நம் நாடு உள்ளது. மறுபுறம் இளைஞர்கள் சந்திக்கும் சவால்களோ ஏராளம். பல்கலைக்கழகப்  பட்டங்கள் பெற்றுவிட்டு, சரியான வேலை


கிடைக்காமல் அலைபவர்களின் எண்ணிக்கை உலகிலேயே நம் நாட்டில்தான் அதிகம். இளைஞர்களிடம் வன்முறைகள், தற்கொலைகள், நம்பிக்கை இன்மை போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன Ú (The New Indian Express, India's Youth Need Invictus Moment, 3.4.2025, p.06). இதுபோன்று நாடு சந்திக்கின்ற முதன்மைப் பிரச்னைகள் இருக்கின்ற இந்தப் பின்னணியில், முதலில் மொழி தொடர்பான சில செய்திகளைத் தெரிய வேண்டி உள்ளது.

மொழியின் அவசியத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. நிறைய மொழிகள் தெரிந்தால் நல்லதுதான். முடிந்தவர்கள், தேவை என நினைப்பவர்கள், வசதியும் ஆர்வமும் கொண்டவர்கள், அவர்கள் விருப்பப்படி எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். அதற்கான வசதிகள் இன்றும் போதுமான அளவில் இருக்கிறது. கூகுள் உதவியுடனே பல மொழிகள் கற்றுக்கொண்ட மாணவர்களை நான் அறிவேன். அன்று முதல் இன்று வரை, பணியின் நிமித்தம் தமிழ்நாட்டை விட்டு வெளி மாநிலங்கள் சென்றவர்களும், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களும் தாங்களே தமக்கு வேண்டிய மொழிகளைக் கற்றனர்; கற்கின்றனர்; வெற்றிகரமாகச் செயல்படவும் செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் பன்மொழி வித்தகர்கள் எத்தனையோ பேர் அன்றும் (வேலு நாச்சியார், இராணி மங்கம்மாள், பாரதியார்) இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர்.  அதற்குக் காரணம் திணிப்பு அல்ல; தேவையும், ஆர்வமும், வசதி யும்தான். தமிழுக்குத் தொண்டு செய்த ஜி.யு.போப், வீரமாமுனிவர், உமறுப்புலவர் போன்றவர்களை யார் கட்டாயப்படுத்தியது?

இரண்டாவதாக, மொழிப் பயிற்சி பெற்று எழுதவும், பேசவும், காவியங்கள் படைக்கவும் விரும்புபவர்கள் மிகச் சிலராகவே இருப்பார்கள்; அவர்கள் பிரத்தியேக பயற்சி எடுத்தாக வேண்டும்; அவர்களுக்காக, தமிழகத்தில் உள்ள சுமார் 37,260 (இந்தியாவில் சுமார் 10,22,000) அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் பல மொழிகளையும் பயிற்றுவிக்கத் தேவையில்லை. அதற்குப் போதுமான நிதி ஆதாரம் அரசிடம் இருக்கிறதா? ஒரு பள்ளிக்கு ஒரு மொழிக்கு ஒரு ஆசிரியர் என மூன்று மொழிகளுக்கு இந்தியாவில் 30,66,000 ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்; மாதச் சம்பளம் ஒருவருக்குக் குறைந்தது ரூ.20,000 என்று வைத்தால்கூட, மாதம் ஒன்றுக்கு ரூ.6,132 கோடியும், ஆண்டு ஒன்றுக்கு ரூ.73,284 கோடியும் தேவைப்படும். (இது ஏறத்தாழ மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகைக்குச் சமம் ஆகும்)அவரவர் தேவைக்கு அவரவரே கற்றுக்கொள்வதற்கு, அரசு இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமா? இப்போது உள்ளதற்கே போதுமான ஆசிரியர்கள் இல்லை, வகுப்பறைகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை, தண்ணீர் இல்லை.

நீண்ட காலமாக (1964இல் இருந்து) சொல்லப்பட்டு வரும் கோத்தாரி குழுவின் பரிந்துரையான ‘தேசிய உற்பத்தியில் ஆறு விழுக்காட்டு நிதியைக் கல்விக்கு வழங்க’ இயலவில்லை; இன்னும் அதில் பாதிகூட வழங்கப்படவில்லை. ஏகப்பட்ட கடன்கள் வேறு; வட்டி கட்டுவதற்கே ஆண்டுக்கு சுமார் பத்து இலட்சம் கோடி ரூபாய் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பல துறைகளுக்குப் போதுமான நிதி ஒதுக்க இயலவில்லை. நாடு விடுதலை பெறும்போது, நம்மை விடப் பின்தங்கி இருந்த நாடுகள் கூட இன்று தலைவீத வருவாயிலும், கல்வியிலும், ஆராய்ச்சியிலும், அறிவுசார் சொத்துரிமைகளிலும் எவ்வளவோ உயர்ந்துவிட்டன; இந்த நிலையில், தேவையான திறன் வளர்க்கும் வழிகளைப் பற்றி ஆராயாமல், மொழிகளைப் பற்றியே பேசுவது சரியா?

பல மொழிகளைக் கட்டாயமாக்கி, மாணவர்கள் மீது திணித்தால், மாணவர்களுக்கு அதிகச் சுமையாகிவிடும் அல்லவா? தேர்வுகளில் தோல்வியுற்று கல்வி இடைநிற்றல் அதிகமாகிவிடும் அல்லவா? (வட மாநிலங்களில் இந்த நிலை காணப்படுகிறது) ஏற்கனவே சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய விளிம்பு நிலை மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வியை இலவசமாக வழங்கியும், கல்லூரிக் கல்விக்குக் கணிசமான கல்வி உதவித்தொகை வழங்கியும், இயலாமையால் படிப்பை விட்டுவிட்டு, ஏதோ ஒரு வேலையைத் தேடிப் போய்விடுகிறார்கள். அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கை தரும் புள்ளிவிவரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

மொழிப் புலமையைக் கொண்டு கவிதைகள், கட்டுரைகள் படைக்கலாம்; சீரிய உரைகள் ஆற்றலாம். அவை யாவும் முக்கியமே. ஆனாலும், பிற திறன்கள் இல்லாமல் மொழிப்புலமையை மட்டும் கொண்டே அனைவரும்  வாழ்ந்துவிட முடியாது. நம் அன்றாட வாழ்வுக்கு எத்தனையோ பண்டங்கள், பணிகள், திறன்கள் தேவைப்படுவதை நாம் அறிவோம். இன்று இந்தி பேசுபவர்களை விட அதிகம் சம்பாதிப்பவர்கள் ஆங்கிலம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். இது இப்படி இருக்கும்போது, இன்னும் பல வட மாநிலங்களில் இந்தி, சமஸ்கிருதத்தைத் தவிர, பிற மொழிகளை முழுமையாகக் கற்றுக்கொடுப்பது இல்லை; பலருக்கு அவர்களின் தாய்மொழிகூட என்னவென்றே தெரியாத அளவிற்கு, இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆங்கிலமும் சரிவர கற்றுக் கொடுக்கப்படுவது இல்லை.

அண்மைக்கால புள்ளிவிவரங்களின்படி, உதாரணத்திற்கு பீகாரில் இந்தியும் சமஸ்கிருதமும் முறையே 99, 56 விழுக்காடு பள்ளிகளில்  பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனால், மற்ற மொழிகள் வெறும் 07 விழுக்காடு பள்ளிகளில் மட்டும்தான் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஹிமாச்சலப் பிரதேசத்தில், அனுமதி அளிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை பஞ்சாபி மொழிக்கு 100; சமஸ்கிருதத்துக்கு 5,078 (Maitri Porecha, Third language choice: Hindi in non Hindi States, Sanskrit in Hindi belt, The Hindu, 3.4.2005, p.07). மற்ற மொழிகளுக்கு மிகச் சொற்பமே. பிற வட மாநிலங்களிலும் இதே நிலைதான். வட கிழக்கு, தென் மாநிலங்களில் மட்டும்தான் சமஸ்கிருதம், இந்தி அல்லாத பிற மொழிகளும், ஆங்கிலமும், படிக்க அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அடுத்ததாக உயர் கல்வியில் அறிவியல், வணிக, தொழில் நுட்ப, மருத்துவப் பாடங்கள் படிக்கும் அளவிற்கு, எந்த இந்திய மொழியிலும் இன்னும் புத்தகங்கள் வரவில்லை; ஐரோப்பிய நாடுகளிலும் ஜப்பானிலும் நிலைமை வேறு. அவர்களோடு ஒப்பிடுவது சரியல்ல. அங்கே, ஆங்கிலத்திற்கு நிகராக அவர்களின் தாய் மொழிகளிலும் புத்தகங்கள் போதுமான அளவிற்கு இருக்கின்றன, கிடைக்கின்றன.இந்தியாவிலும் அதுபோலச் செய்ய வேண்டியுள்ளது. அதனைச் செய்ய மொழி அறிவோடு, பாட அறிவும் வேண்டி உள்ளது. உதாரணத்திற்கு, மொழி அறிவோடு  மருத்துவம், அறிவியல், வணிகம், தொழில் நுட்பம் பற்றிய அறிவு இருந்தால்தான், உயர்கல்விக் குப் பொருத்தமான நூற்களை இந்திய மொழிகளில் எழுதவோ, மொழி பெயர்ப்பு செய்யவோ முடியும். அதற்கான ஏற்பாடுகள் இன்னும் போதுமான அளவிற்குச் செய்யப்பட வேண்டி உள்ளது.

இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்ற மாநிலங்கள் நீண்ட காலமாகப் பொருளாதாரத்தில், தலைவீத வருவாயில், வசதி வாய்ப்புக்களில் பின் தங்கியே உள்ளன. இந்தியை மட்டும் அறிந்தவர்கள் போதுமான வேலை கிடைக்காமல் தென் மாநிலங்களை நோக்கிக் குடும்பத்தோடு படையெடுக்கும் நிலையை நாம் பார்க்கிறோம். அங்கே Annual Status of Education Report (ASER) Survey தரும் புள்ளிவிவரங்களின்படிப் பார்த்தால், தேவையான அளவுக்குப் பள்ளிகள் இல்லை; வகுப்பறைகள் இல்லை; பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை; (பார்க்க: Suman Bhattacharjea, NEP 2020 in the classroom, from policy to practice, The Hindu, 1.4.2025, p.6.).

இருக்கின்ற ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க இயலவில்லை; கழிவறைகள் இல்லை; இருக்கும் சில கழிவறைகளில் தண்ணீர் இல்லை; சாலைப் போக்குவரத்து, மருத்துவ வசதிகள் இல்லை; தமிழ்நாட்டில் உள்ள அளவுக்குப் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் அங்கே இல்லை; திட்டங்கள் சரியாகச் செயல்படுத்தப்படுவது இல்லை. அந்தப் பின்தங்கிய மாநிலங்கள் முன்னேற, வளர்ந்து வரும் மாநிலங்களைப் பார்த்துச் செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு, ஒன்றிய அரசு எவ்வளவோ உதவியும், விழலுக்கு இறைத்த நீராக, நீண்ட காலமாக வளராத மாநிலங்களில் உள்ள நிலையை அனைத்து மாநிலங்களிலும் திணிக்க நினைப்பது எவ்விதத்தில் மக்களுக்கு உகந்ததாக, நியாயமானதாக இருக்க முடியும்?

உலகின் பெரிய செல்வந்தர்களில் பலரை இந்தியாவில் காண முடிகிறது. ஆனால், உலகின் தலைசிறந்த கல்வி நிலையங்களில், பல்கலைக்கழகங்களில் எத்தனை இந்தியாவில் உள்ளன? சிறந்த கல்வி நிலையங்களைப் பார்த்து, நாமும் மாணவர்களுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகளை வழங்க வேண்டும்; பலநூறு வகையான பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்; அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்க, மாண வர்களுக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டும்; அவற்றைப் பயிற்றுவிக்க ஏராளமான, சரி யான, ஆசிரியர்களைப் போதுமான அளவு நியமிக்க வேண்டும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, மொழி பற்றிய குறுகிய கண் ணோட்டத்தையே கொண்டு கொள்கைகள் வகுக்கப்பட்டால், எப்படி இந்தியக் கல்வி முறை சிறந்ததாக இருக்கும்? எத்தனை ஆண்டுகளுக்குத்தான்  தக்சசீலாவையும் நாளந்தாவையும் சொல்லி புகழ் பாடிக் கொண்டு இருக்க முடியும்?

விரும்புகிற மாணவர்களுக்கு, விரும்புகிற பாடங்களைப் பயிற்றுவிக்க வழி செய்யாமல், தத்தித்தத்தி முன்னேறத் துடிக்கும் ஏழை மாணவர்கள் தலையில் ஏராளமான சுமையை ஏற்றுவது, குருவியின் தலையில் பனம்பழத்தைத் தூக்கி வைப்பது போல் ஆகும். ஏகப்பட்ட விடுமுறைகளாலும், இடம், ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும், கல்வியல்லாத பணிச்சுமையாலும், உள்ள பாடங்களையே நடத்த முடியாமல் ஒரு பக்கம் ஆசிரியர்கள் திணறல்; மறுபக்கம், படிக்க முடியாமல் மாணவர்கள் திணறல்; இடைநிற்றல்; வேலைக்குச் சென்றால் குறைவான கூலி. இந்த நிலையில் இதைப்படி, அதைப்படி என்று கட்டாயப்படுத்தினால், வசதியில்லாத, முடியாத மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கே வரமாட்டார்கள்; வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சலாமா? தாழ்ந்த, பின்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்டவர்களைப் பயமுறுத்தி, பள்ளியை விட்டே ஓடிவிட வைக்கலாமா?

அவர்களுக்கு எப்போது எது தேவை என நினைக்கிறார்களோ அப்போது அவர்கள் அதை நிச்சயம் கற்றுக்கொள்வார்கள். அதைப் பற்றிய கவலை அரசுக்கு வேண்டியதில்லை. அரசு கவனிக்க வேண்டிய மிக அவசரமான, அவசியமான வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன. முன்பு இருந்த மன்னர்கள், மக்களைக் கட்டாயப்படுத்தி ஏதேதோ செய்ததாக இன்று நம்மை ஆள்பவர்கள் கூறி வருகின்றனர். அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கட்டுக்கதை என்று அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். அப்படியே இருந்தாலும், அந்த வழியை இன்று அறிவில்
சிறந்து விளங்குவதாகக் கூறிக்கொள்பவர்கள், பின்பற்றுவது நியாயமாகுமா?

இன்று, பெரும்பாலான மக்களுக்கு எது சரி, எது தவறு, எது தேவை, எது தேவையில்லை என்று தெரியும். எனவே, அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைப்பதை, மக்கள் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். எதையும் மக்கள் விரும்பும் வண்ணம் செய்தால், அதனை மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்; திறம்படவும் செய்வார்கள். எனவே, மக்களுக்கு எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று கட்டளை இடுவதைத் தவிர்த்து, அதற்குத் தேவையான வசதிகளை முதலில் செய்து கொடுக்க வேண்டும். இரண்டாவதாக, அதனைச் செய்வதால் மக்களுக்கு நல்ல பலன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தேவையும், வசதியும், பலனும் இருந்தால், மக்கள் எதையும் ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்வார்கள். மொழி, மதம், சாதி, மாநிலம் ஆகியவற்றை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மக்களைக் கூறு போட்டு வெற்றி காண நினைப்பது, நீண்ட கால வளர்ச்சிக்குச் சரியாக இருக்காது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்