மக்கா மாநகரிலுள்ள புனிதமிகு கஅபா ஆலயம், உலகிலுள்ள பிற வழிபாட்டுத் தலங்களைக் காட்டிலும் உயர் அந்தஸ்து பெற்றுத் திகழ்கிறது. முஸ்லிம்கள் இவ்வுலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் மக்காவிலுள்ள கஅபா ஆலயத்தை முன்னோக்கி நின்று தான் தங்களது தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். இத்தகைய உன்னதச் சிறப்பை உயர் அந்தஸ்தை அல்லாஹ் அந்த ஆலயத்திற்கு அளித்துள்ளான்.
இதோ! உள்ளங்கள் எல்லாம் அந்தப் புனிதமிகு பள்ளிவாசலைப் பெரிதும் நாடுகின்றன, அதனைத் தரிசிக்க வேண்டும் எனும் ஆசை, அங்கு சென்று ஹஜ், உம்ராவையும், தொழுகையையும் நிறைவேற்ற வேண்டும் எனும் ஆவல் இதயத்தின் ஆழத்திலிருந்து பொங்கி எழுகிறது. எப்படி ஆவல் பிறக்காதிருக்கும்? கஅபா ஆலயம் தானே உலகத்தில் எழுப்பப்பட்ட முதல் வழிபாட்டுத்தலம்.
இப்ராஹீம் நபியும் அவரின் மகனார் இஸ்மாயீல் நபியும் இறை ஆணைப்படி அதனைக் கட்டி எழுப்பினார்கள். பிறகு அந்தப் பணியை இறைவன் திருமுன் சமர்ப்பணம் செய்தார்கள். அத்தகைய சிறப்புமிக்க இறை இல்லமல்லவா அது. மக்காவின் கஅபா பள்ளிவாசல் புனிதத்துவம் பெற்றதாகும். அதாவது அங்கு யார் பிரவேசித்தாரோ யார் அதில் தஞ்சம் புகுந்தாரோ அவருக்கு அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கிறது. இந்தச் சிறப்பு குர்ஆனிலே இடம்பெற்று இம்மண்ணும் விண்ணும் உள்ளளவும் நீடித்து நிற்கக் கூடியதாக அமைந்துள்ளது.
‘மேலும் நினைவுகூருங்கள்: நாம் (கஅபத்துல்லாஹ் எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒரு மையமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், ‘இப்ராஹீம் (வணக்கத்திற்காக நின்ற) இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்றும் மக்களுக்கு நாம் கட்டளையிட்டோம். மேலும், ‘தவாஃப், இஃதிகாஃப், ருகூவு, ஸுஜூது’ ஆகியவற்றைச் செய்பவர்களுக்காக எனது இவ்வீட்டை நீங்கள் இருவரும் தூய்மையாக்கி வையுங்கள்’ என்று இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளை பிறப்பித்தோம்’ (திருக்குர்ஆன் 2:125)
‘அங்கு தெளிவான சான்றுகளும் இப்ராஹீம் நின்று தொழுத இடமும் உள்ளன. மேலும் (அது எத்தகைய ஆலயமெனில்) அங்கு எவர் நுழைந்தாலும் அவர் அச்சமற்றவராகி விடுகின்றார். மேலும், அந்த ஆலயத்திற்குச் சென்று வர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்ற வேண்டிய கடமை யாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 3:97)
இத்தகைய நிம்மதியான பாதுகாப்பான சூழ்நிலைக்கு அல்லாஹ் பொறுப்பேற்றிருப்பது அவனது கருணையும் கிருபையுமே ஆகும். அதனால்தான் அது காலாகாலத்திற்கு நீடித்து வருகிறது. மனிதர்களுக்கு இவ்வுலகத்தில் எத்தனையோ வகையான அருட்கொடைகளை அல்லாஹ் வழங்கியிருக்கிறான். அவற்றுள் உயிர், உடைமை, மானம், மரியாதை, இறைவழிபாடு ஆகியவற்றிற்கான பாதுகாப்பு தான் மிகச்சிறந்த அருள் கொடையாகும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் இத்தகைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லையெனில், அவன் அமைதியான சூழ்நிலையை இழந்துவிட்டான் எனில், பிறகு அவனால் நிம்மதியாக உண்ணவும் முடியாது, நிம்மதியாக உறங்கவும் முடியாது. இந்த ரீதியில் அமைதி சூழ்நிலையின் முக்கியத்துவத்தைப் பின்வரும் இந்த நபிமொழி மிகத் தெளிவாக உணர்த்துவதைக் காணலாம்.
‘உங்களில் ஒருவர் மன அமைதியையும் உடல் ஆரோக்கியத்தையும் அன்றைய தினத்தின் உணவையும் பெற்றுள்ளார் எனில் அவர் இவ்வுலகம் முழுவதையும் சேகரித்துக் கொண்டவர் போன்றவராவார்’ (நூல்: திர்மிதி)
நபிமார்கள் செய்த பிரார்த்தனையில் அமைதியும் மிக முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. ‘இறைவா இவ் ஊரை அமைதி அளிக்கும் இடமாக ஆக்குவாயாக’ (திருக்குர்ஆன் 2:126) என்று மக்கமா நகரின் பாதுகாப்பு வேண்டி இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனை குர்ஆனில் பதிவாகி உள்ளது. எந்த மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலை நிம்மதியும் அமைதியும் அளிப்பதாக உள்ளதோ, அந்த மக்கள் வாழ்கின்ற சமுதாயம்தான் பாக்கியம் நிறைந்த சமுதாயம் ஆகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘எந்த மனிதனிடமிருந்து நன்மை எதிர்பார்க்கப்படுகிறது, எவனிடமிருந்து தீமை ஏற்படா தென உணரப்படுகிறது, அந்த மனிதன்தான் உங்களில் சிறந்தவன்’ இறைநம்பிக்கை இருப்பதாக வாதிடும் மனிதன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று விளக்கம் அளிக்கும்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறைநம்பிக்கை உள்ளவன் யாரெனில், தங்களுடைய உயிர் உடைமைகளுக்கு தீங்கிழைக்க மாட்டான் என எந்த மனிதனை மக்கள் நம்புகின்றார்களோ அவன் தான் இறைநம்பிக்கையாளன்.’ (நூல்: நஸயீ, இப்னுமாஜா)
நீ இறைவனை நம்புவதாக நாங்கள் நம்ப வேண்டுமெனில், பிறரின் உயிர் உடைமைகளுக்கு நீ தீங்கிழைக்க மாட்டாய் என மக்கள் உன்னை நம்ப வேண்டும். உண்மை என்னவெனில் சமூகத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் மனிதன், அவன் ஏற்றுள்ள இறைநம்பிக்கையை களங்கப்படுத்தியவன் ஆவான். இறைவனின் கோபத்திற்கு அவன் இலக்காவது உறுதி என்பதுதான் இந்த நபிமொழியின் உயிரோட்டமான அறிவுரையாகும். உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஹஜ் காலத்தில் மக்காவிலுள்ள கஅபா எனும் மையக் கேந்திரத்தை நோக்கிப் பயணப்படும் ஹாஜிகள் மட்டுமின்றி அனைவரும் கஅபா வின் பாதுகாப்பையும், அமைதியையும் அறிவது அவசியம்.