அலிகரில் நான்கு முஸ்லிம்கள் கொடூர மாகத் தாக்கப்பட்டதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடுமையாகக் கண்டிக்கிறது. இறைச்சி வியாபாரிகளை வழிமறித்து, ஆடைகளைக் கழற்றச் செய்து காட்டுத்தனமாகத் தாக்கியது கண்டிக்கத்தக்கது. உடலெங்கும் காயங்களுடன் துடிக்கும் அவர்களை Cow Slaughter Act சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது வியப்பளிக்கின்றது. இது நீதிக்கு எதிரானது மட்டுமல்ல.
சட்ட விரோதக் குழுக்களை ஊக்குவிக்கும் செயலாகும். பெரும்பான்மை நம்பிக்கையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். தண்டனை கிடைக்காது என்ற தைரியத்துடன் முஸ்லிம்கள், தலித்கள் மீதான தாக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.
பசு பாதுகாப்பு, லவ் ஜிஹாத் போன்ற பெயர்களில் வெறுப்பு உணர்வு வளர்க்கப்படுகின்றது. கர்நாடக மாநிலம் பண்ட்வாலில் அப்துல் ரஹ்மான் கொலை, மங்களூரில் அஷ்ரஃபின் கொடூரமான படுகொலை, நாக்பூரில் நடந்த சமுதாய மோதல்கள், காஷ்மீரி முஸ்லிம்கள் மீது நாடு முழுவதும் நடக்கும் குறிவைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் ஆகியவை நாட்டின் மனச்சாட்சிக்கு நீங்காத கறையை ஏற்படுத்தி உள்ளன.
2018இல் உச்ச நீதிமன்றம் காட்டிய வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் நீதி மெதுவாகவும், பாரபட்சமுடையதாகவும் இருக்கிறது. 2023ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா(BNS) சட்டத்தின் கீழ் கும்பல் தாக்குதல்களுக்கு எதிரான விதிகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.
நியாயமற்ற புல்டோசர் நடவடிக்கை
உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்களின் சொத்துகள், வீடுகள், கல்வி நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சட்டவிரோதமான, மனிதாபிமானமற்ற இடிப்புகளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடுமையாகக் கண்டிக்கிறது. குறிப்பாக மதரஸாக்கள், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள் காரணமில்லாமல் குறிவைக்கப்படுகின்றன.
பஹ்ராய்ச் (Bahraich), ஷ்ராவஸ்தி (Shravasti) ஆகிய பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட பல மதரஸாக்கள் சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ளன அல்லது இடிக்கப்பட்டுள்ளன என்பதை ஜமாஅத்தே இஸ்லாமி குழுவினர் கள ஆய்வு செய்தபோது அறிய முடிந்தது. இது நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். சட்டவிரோதக் கட்டடம் என்ற பெயரில் நடத்தப்படும் இவ்விதமான நடவடிக்கைகள், பெரும்பாலும் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினரையே குறி வைக்கின்றன. வழக்கு இல்லாமல், விசாரணை இல்லாமல், நீதிமன்றம் இல்லாமல், காவல்துறை, நிர்வாகம் நேரடியாக தண்டனை வழங்கும் அதிகாரங்களை எடுத்துக் கொள்வதும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீறலாகும்.
‘ஒருவர் குற்றம் சாட்டப்படுவதால் மட்டுமே அவருடைய சொத்துகளை இடிக்க முடியாது’ என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் மீறப்படுகிறது. இத்தகைய இடிப்புகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஃபலஸ்தீனுக்கான நீதி
இஸ்ரேல் நடத்திய Operation Gideon's Chariots கிடியனின் ரதங்கள் என்ற பெயரிலான புதிய படையெடுப்பையும், ஃபலஸ்தீனர்களுக்கு எதிரான தொடர்ச்சியான இனஅழிப்பையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடுமையாகக் கண்டிக்கிறது. இந்தப் படையெடுப்பு விமானத் தாக்குதல், தரை வழிப் போர், மருத்துவமனைகள், பள்ளிகள் உட்பட பொதுமக்கள் குடியிருப்புகள் அழிக்கப்படுவதன் மூலம், 53,000க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 18,000 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதம் ஒரு பள்ளியைக் குண்டு வீசி 27 நபர்கள் கொல்லப்பட்ட சம்பவம், ஐரோப்பிய மருத்துவமனை மீது நடந்த தாக்குதல், மருத்துவ ஊழியர்கள் குறிவைக்கப்பட்ட சம்பவங்கள் போர்க் குற்றங்களாகும். மே 30ஆம் தேதி, உதவி விநியோக நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது. ஐ.நா இன அழிப்பு என எச்சரித்தும், உலகம் மௌனமாக இருக்கிறது.
அமெரிக்காவின் இஸ்ரேலிய ஆதரவையும், சர்வதேச சமுதாயத்தின் செயலற்ற நிலைப்பாட்டையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டிக்கிறது. மேற்குக்கரையிலுள்ள அரபு நாட்டுத் தூதுக்குழுவை அனுமதிக்காத இஸ்ரேலின் நடவடிக்கை பிராந்திய அமைதிக்கு ஆபத்தாக உள்ளது.
ஃபலஸ்தீன மக்களுக்கு உறுதியான ஆதரவை ஜமாஅத் தெரிவிக்கின்றது. உடனடி யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும். தடைகள் நீக்கப்பட்டு ஃபலஸ்தீனர்களின் முழுமையான உரிமைகளை, உதவிகளை வழங்க வேண்டும். தாய்நாட்டுக்குத் திரும்பும் உரிமை அவர்களுக்கு வழங்கப்படுவதுடன் ஒரு சுயாட்சி நாடாக ஃபலஸ்தீன் அறிவிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
இந்திய அரசு இது குறித்து உறுதியான, நேர்மையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். வெறும் பதற்றத்தைக் காட்டுவதற்குப் பதிலாக, இஸ்ரேலின் இன அழிப்பை நிறுத்தும் வகையில் சர்வதேச நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டும். ஃபலஸ்தீனுக்கான நீதி என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நீதியாகும். அதற்காக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.