மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

M. ஃபாத்திமா சாதிக்
தூக்கம் ஓர் அருட்கொடை, June 16-30, 2025


தூக்கம் இறைவன் மனிதர்களுக்குக் கொடுத்த மிகப்பெரும் அருட்கொடை. இன்று நாம் பெரும்பாலும் தூக்கத்தைத் தொலைத்து இருக்கிறோம். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை தூக்கம் வரவில்லை என்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்டுக் கொண்டு இருக்கிறோம். தூக்க மாத்திரை போட்டால் தான் தூங்க முடியும் என்ற நிலை இன்று அதிகரித்திருக்கிறது.

இறைவன் திருக்குர்ஆனில் தூக்கம் பற்றி கூறுகிறான்: ‘அல்லாஹ்தான் உங்களுக்காக இரவைப் படைத்தான். அதில் நீங்கள் அமைதி பெறுவதற்காக!’ (திருக்குர்ஆன் 40:61)

‘அவனே இரவைச் சுருட்டி பகலை விரிக்கின்றான்; பகலைச் சுருட்டி இரவை விரிக்கின்றான்’. (திருக்குர்ஆன் 39:5)

‘மேலும், அவனே உங்களுக்கு இரவை ஆடையாகவும், உறக்கத்தை அமைதியாகவும் பகலை உயிர்த்தெழும் வேளையாகவும் ஆக்கினான்.’ (திருக்குர்ஆன் 25:47)

துன்பம் தீர்க்கும் தூக்கம்

நமது உடலும் மூளையும் வளர்வதற்கும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதற்கும் தூக்கம் அவசியம். நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கிக் கொள்ள தினமும் மூன்றில் ஒரு பாகம் (8 மணி நேரம்) உறங்க வேண்டும்.

உடல் வலிமை தரும் தூக்கம்

நாள் முழுவதும் உழைத்துக் களைத்து உடல் வருந்தும் போது தூக்கம் மூலமாக மறுநாள் உடல் உழைப்புக்கு ஏற்ப உடல் வலிமை பெற முடிகிறது.

புத்துணர்வு தரும் தூக்கம்

பகல் நேரத்தில் ஓய்வு இல்லாமல் உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுப்பதால் உள்ளம் களைப்படைந்து விடுகிறது. நாம் சிறிது நேரம் ஓய்வு எடுத்து (சிறு தூக்கம்) மூலமாக புத்துணர்வுடன் செயல்பட முடியும்.

தூக்கமின்மையால் உருவாகும் நோய்கள்

மனநோய் (எதிர்மறைச் சிந்தனை), நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, அஜீரணக் குறைபாடு, மாதவிலக்குக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, உடல் வலிகள் குறிப்பாக (தலைவலி)

தூக்கத்தினால் ஏற்படும் ஆரோக்கியம்

தூக்கத்தின் மூலமாக நம்முடைய ஒவ்வொரு உள் உறுப்புக்களும் உயிர் கடிகாரம் (Bio clock) மூலம் எனர்ஜியை உள்வாங்கி சேமித்துக் கொள்ளும். அன்றாடம் நடக்கக்கூடிய இந்நிகழ்வில் (9to11 வெப்ப மண்டலமும்), (11to1 கல்லீரலும்), (1to3 பித்தப்பையும்) உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதும் எனர்ஜியைச் சேமிக்கக் கூடிய வேலைகளைத் தூக்கத்தின் மூலம் செய்கிறது.

நமது கண்ணில் கண் இமை இருப்பதே (அதிக ஒளியை) தடுப்பதற்காகத்தான் இருளில் தான் மனிதர்களுக்குத் தூக்கத்தைக் கொடுக்கக்கூடிய ஹார்மோன் மையங்கள் இயங்கும். இவை நமது உச்சந்தலை அருகில் உள்ள பீனியல் சுரபி மூலமாக பிட்யூட்டரியின் இயக்கத்திற்கு மிகவும் உதவுகிறது. இதனால் நாம் ஆழ்ந்த தூக்கம் அடைவோம்.

தூக்கம் ஏன் வருவதில்லை?

அதிகமான உணவு இரவில் உட்கொள்ளுதல் குறிப்பாக துரித உணவு (Fast food) உட்கொள்ளுதல், அதிகமான நேரம் அலைப்பேசி, தொலைக்காட்சி பார்த்தல், அதிக வெளிச்சம் கண்களில் படுதல், மனக் குழப்பங்கள் என்பன போன்ற பல காரணங்கள் தூக்கம் வராமல் தடுக்கின்றன.

தூக்கம் வர சில யோசனைகள்

இரவில் சரியாக ( 9:00 to 10:00) மணிக்குள் தூங்கச் செல்ல வேண்டும். பகலில் நீண்ட நேரம் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். உளூச் செய்து விட்டுத் தூங்க வேண்டும்.

மிதமான உணவு எளிதில் செரிக்கக் கூடிய உணவு உட்கொள்ள வேண்டும். அலைப்பேசி, தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். படுக்கை அறையில் வெளிக்காற்று வருமாறு அவசியம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிக்காற்று இல்லாமல் உறங்கினால் ஒரு நாளில் 6 மணி நேரம் உறங்குவதால் ஒருவர் விடும் கெட்ட காற்றை (கார்பன் டை ஆக்சைடு) மற்றவர்கள் சுவாசிக்கக் கூடிய நிலை உருவாகும். இது மிக ஆபத்தான நிலையை உருவாக்கும்.

ஆழ்ந்த தூக்கம் வருவதற்கு நமது உச்சந்தலையில் உள்ள வர்மப்புள்ளியை தினமும் நமது விரல்களால் அழுத்தம் கொடுத்து வலது இடது புறமாக அழுத்தி தேய்த்து விடுவதால் ஆழ்ந்த தூக்கத்தை அடையலாம்.

தூக்கம் என்பதை அல்லாஹ் அருளாகவும், உடல் ஆரோக்கியமாகவும் கொடுத்துள்ளான். மனிதர்கள் அனைவரும் அதை உணர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இறைவனின் அருளையும், ஆரோக்கியத்தையும் பெற்று நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வழிவகுக்கும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்