மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அகதிகள் மீதான மனிதநேயம் தொடரட்டும்
இரா.சாந்தகுமார், செப்டம்பர் 16-30, 2025


ஒரு நாட்டில் வாழும் மக்களில் ஒரு பகுதியினர் தம் நாட்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள், உள்நாட்டுப் போர், தீவிரவாதத் தாக்குதல்கள் ஆகியவற்றால் அகதிகளாக வேறு நாட்டிற்கோ அல்லது தங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கோ இடம் பெயர்கின்றனர். தங்கள் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றிற்கு மட்டுமின்றி உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் போதும் பாதிக்கப்படுவோர் அகதிகளாகப் புலம் பெயர்ந்து செல்கின்றனர்.

பல தலைமுறைகளாக தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பை, உறவுகளை, உடமைகளைத் துறந்து உயிர் வாழ்தல் எனும் ஒற்றை நிர்பந்தத்தின் அடிப்படையில் முற்றிலும் தங்களுக்கு அறிமுகம் இல்லா மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் உள்ள ஒரு நாட் டிற்கு அகதிகளாகச் செல்லும்போது உண்டாகும் மனதின் வலி கொடிதினும் கொடிது.

நமது நாடு விடுதலை அடைந்த பின்னர் திபெத், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் பல்வேறு காரணங்களால் இலட்சக்கணக்கில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்து நம் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். 1950ஆம் ஆண்டு தனது எல்லைகளை விரிவுபடுத்த எண்ணிய சீனா அண்டை நாடான திபெத்தைத் தாக்கி அதனை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதனை எதிர்த்துப் போராட திறன், விருப்பம் இல்லா திபெத்தியர்களின் மதத் தலைவரான தலாய்லாமா உள்ளிட்ட சுமார் 1,50,000 திபெத்தியர்கள் அகதிகளாக நம் நாட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர்.

இவர்களுக்காகக் கல்விக் கூடங்கள், மடங்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை இந்தியா அளித்தது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தலாய்லாமா நாடு கடந்த அரசை  நடத்தவும்  அனுமதித்துள்ளது. சீனாவுடனான  உறவில்  சுமூகத்தன்மை நிலவாமைக்கு, தலாய்லாமா உள்ளிட்டதிபெத் அகதிகளுக்கு நம் நாடு தஞ்சம் அளித்து வருவதும் ஒரு காரணம்.

1971ஆம் ஆண்டு கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் மீதான மேற்குப் பாகிஸ்தான் அரசின் அடக்கு முறையால் பல இலட்சம் கிழக்குப் பாகிஸ்தானியர்கள் நம் நாட்டில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் அளித்ததோடு, கிழக்குப் பாகிஸ்தானை மேற்குப் பாகிஸ்தானின் பிடியிலிருந்து விடுவித்து பங்களாதேஷ் என்ற பெயரில் தனி நாடு உருவாகக் காரணமாக இருந்தது இந்தியா.

1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரம் நடைபெற்றதன் விளைவாக ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் அகதிகள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றிய, மாநில அரசுகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அகதிகளாக வருவோரின் நலனில் இந்தியா காட்டும் அக்கறை அளப்பரியது.

அகதிகள் கடல் வழியாகப் பிற நாடுகளுக்குச் செல்லும் போது நடுக் கடலில் படகு கவிழ்ந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ் வப்போது நடைபெறுகின்றன. மியான்மர் நாட்டிலிருந்து வெளியேறிய ரோஹிங்கிய அகதிகள் சென்ற படகுகள் கடலில் கவிழ்ந்ததில் அந்தப் படகுகளில் இருந்த 400 அகதிகள் பரிதாபமாக இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் இலட்சக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே அகதிகளாக உணவு, மருத்துவ வசதிகள் இன்றி துன்பப்பட்டு வருகின்றனர்.

பொதுவாக அகதிகளாகச் செல்வோர் எந்த நாட்டில் தமது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இருக்கும் என்று நம்புகின்றனரோ அந்த நாட்டிற்கு அகதிகளாகச் செல்கின்றனர். வாய்ப்புக்கேடாக அவர்கள் அகதிகளாகச் செல்லும் நாட்டின் அரசு, அகதிகளை ஏற்க முன்வராததோடு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அவமானப்படுத்தி திருப்பி அனுப்புவது எத்தனை வேதனைக்குரியது.

அகதியாக நம் நாட்டிற்கு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், தமது உயிருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் இருப்பதால் தம்மை இந்தியா விலேயே தங்க அனுமதிக்கும் வகையில் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்துத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ‘அகதிகளை வரவேற்று உபசரிக்க இந்தியா ஒன்றும் தர்மச்சத்திரமல்ல’ என்று விமர்சித்தது. இதுகாறும் மனிதநேய உணர்வுடன் அண்டை நாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் தந்து நம் நாடு ஆதரித்து வரும் சூழலில் உச்ச நீதிமன்றத்தின் இந்த விமர்சனம் மனிதநேய உள்ளம் கொண்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அகதிகள்  மட்டுமின்றி  பாதுகாப்பு, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக பிற நாட்டிற்குச் சட்ட விரோதமாகச் செல் வோர் உரிய ஆவணங்கள் இன்றிச் செல் வதால் அது அந்நாட்டில் சட்ட விரோதமாகக் குடியேறியதாகவே கருதப்படும். இவ்வாறு அமெரிக்காவில்   சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை மனிதாபிமான மற்ற முறையில் கை, கால்களை சங்கிலிகளால் பிணைத்து அவரவர் நாடுகளுக்கு அண்மையில் அமெரிக்க அரசு திருப்பி அனுப்பியது.

சட்ட விரோதக் குடியேற்றம் ஏற்கத்தக்கதல்ல என்றாலும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை விலங்குகள் போல நடத்துவது கண்டிக்த் தக்கதாகும். 1951ஆம் ஆண்டு ஐநா சபையின் கன்வென்ஷன், இது தொடர்பான 1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அகதிகளின் உரிமைப் பாதுகாப்பு, அவர்களுக்கான தேவைகளை உறுதி செய்யக் கோருகிறது. ஐநாவின் அகதிகளுக்கான வழிகாட்டுதல்கள் செயல் வடிவம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டியது அனைத்து நாடுகளின் கடமையாகும். அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் பிற நாட்டிற்குள் நுழைந்து நாச வேலைகளில் ஈடுபடும் சாத்தியக் கூறுகளும் உண்டு. எனவே அகதிகளுக்கு அடைக்கலம்  தருவதில்  சம்பந்தப்பட்ட நாடுகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டியுள்ளது.

மேலும், அகதிகள் ஆயிரக்கணக்கில் வரும் போது அவர்களைப் பராமரிப்பது தொடர்பாகக் கூடுதல் நிதிச் சுமையும் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் தற்போது அகதிகள் வருகையைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நம் நாடும் உள்ளது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான மியான் மர் நாட்டின் ரோஹிங்கிய அகதிகளுக்கு இந்தியா புகலிடம் தந்துள்ள நிலையில், அண்மையில் ரோஹிங்கிய அகதிகளுடன் நம் நாட்டை நோக்கி வந்த படகை இந்தியக் கடற்படைக் கப்பல் திருப்பி அனுப்பியது.

இச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐநா சபை அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது. நம் நாட்டின் பாரம்பரியப் பண்பான வந்தாரை வாழ வைக்கும் மனிதநேயப் பண்பு, பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டின் மீது நம்பிக்கை வைத்து அடைக்கலம் தேடி வரும் அகதிகளைப் பாதுகாத்து, பராமரிப்பதிலும் இப்பண்பு தொய்வின்றித் தொடர வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்