மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

கத்தார் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்: என்ன செய்யப் போகின்றன அரபு நாடுகள்?
ரியாஸ் மொய்தீன்.கெ , 1-15 அக்டோபர் 2025


இரண்டு ஆண்டுகளாக ஃபலஸ்தீனில் நடந்து வரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்காக எகிப்தும், கத்தாரும் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 2025 செப்டம்பர் 9 அன்று முக்கிய ஹமாஸ் நிர்வாகிகள் கத்தாரின் தலைநகரம் தோஹா வந்தனர். அப்போது இஸ்ரேலிய ராணுவம் அவர்கள் இருக்கும் இடத்தைக் குறிவைத்து வான்வெளித் தாக்குதலை நடத்தியது.

இது மட்டுமின்றி அடுத்த நாளே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் ‘கத்தார் மட்டுமின்றி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் அனைத்து நாடுகளுக்கும் நான் சொல்கிறேன், நீங்கள் அவர்களை வெளியேற்றுங்கள் அல்லது அவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நாங்கள் அதைச் செய்வோம்’ என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

அரபு தேசங்களின் கையாலாகத தன்மை

கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலை பல நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ள சூழலில், கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் அரபு, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) தலைவர்களின் அவசரக் கூட்டம் 2025 செப்டம்பர் 15 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட 60 நாடுகளின் தலைவர்கள் கத்தாருக்கு தங்கள் முழு ஆதரவையும் இஸ்ரேலுக்குக் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்தனர். மேலும் ஃபலஸ்தீன இனப்படுகொலையைத் தடுக்க நடவடிக்கை, ஒருங்கிணைந்த இராணுவ அமைப்பு, பொருளாதாரத் தடை என்று விவாதித்தனர். ஆனால் இவற்றை எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பது குறித்தோ அதற்கு முறையான வடிவமோ அல்லது செயல்முறையோ, இராணுவ நடவடிக்கை, கடுமையான பொருளாதாரத் தடை என எதையும் முடிவெடுக்காமல் வெறும் பேச்சுடனே முடித்துக் கொண்டனர்.

அனுமதியின்றி ஒரு நாட்டின் வான்வெளிப் பரப்பைப் பயன்படுத்துவதே ஒரு குற்றச்செயல் ஆகும். ஆனால் இஸ்ரேல் அதைக் கடந்து கத்தார் நாட்டின் மீதே தாக்குதல் நடத்தியுள்ளது கடுமையான சர்வதேச விதிமீறலாகும். இருப்பினும் கத்தாரால் எந்த ஓர் உடனடி நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இந்த நிகழ்வு நடந்த சில நாள்களிலேயே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஃபலஸ்தீனின் காஸாவில் தீவிர தரைவழி, வான்வழித் தாக்குதலைத் தொடங்கி காஸாவை இல்லாமல் அழித்தொழிக்கப் போவதாகத் தெரிவித்தார். இதை எந்த வகையிலும் அரபு இஸ்லாமிய நாடுகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

சர்வதேச விதியை மீறி பிற நாட்டைத் தாக்குவது இஸ்ரேலுக்குப் புதிதல்ல. 1948இல் இருந்து இன்றுவரை இஸ்ரேல் தொடர்ச்சியாகவே பல சர்வதேச விதிமீறல்களைச் செய்து வருகின்றது. இப்பொழுது நடந்து வரும் ஃபலஸ்தீன இனப்படுகொலையின் தொடக்கம் முதல் இன்றுவரை ஏறத்தாழ 6 நாடுகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது. மேலும் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயீல் ஹனியாவையும், லெபனானின் தலைநகரம் பைரூட்டீல் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ருல்லாவையும் கொலை செய்தது இஸ்ரேல்.

சிரியா, லெபனானில் இருந்த ஈரானிய ராணுவத் தலைவர்களைக் கொன்றது மட்டுமன்றி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இவை அனைத்திற்கும் வெறும் கண்டனங்களுடன்  அமைதி   காத்தது அரபுலகம். முஸ்லிம்களின் தலைவர்கள் என தங்களைக் கூறிக்கொள்ளும் அரபு நாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை அல்லாத நாடுகள் எடுத்த நடவடிக்கையைக் கூட எடுக்கவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(ஐஇஒ)வில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றி பெற்று பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க் குற்றவாளி என நிரூபித்தது முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத நாடான தென்னாப்பிரிக்கா தான்.

அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேலை விட அரபு நாடுகள் தான் நிறைய ஆயுதங்கள், இராணுவத்  தளவாடங்கள்,  பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியுள்ளன. அதனால் அவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவையே சார்ந்து இருக்கின்றனர். ஆதலால் இவர்களால் அமெரிக்காவின் அனுமதியின்றி ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளைப் போல தம் விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்க முடியாது.

இருநாடுகள் தீர்வா? அகண்ட இஸ்ரேலா?

இஸ்ரேலை எதிர்க்கின்ற, ஃபலஸ்தீனை ஆதரிக்கின்ற நாடுகளே இஸ்ரேல் ஃபலஸ்தீன் எனும் இருநாடுகள் என்பதே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகும் எனக் கூறுகின்றனர். ஆனால் இஸ்ரேல் நிகழ்த்திவரும் இனப்படுகொலையை இரண்டு ஆண்டுகளாக இந்தத் தீர்வுக்கான ஃபலஸ்தீனை அங்கீகரிக்கும் நடவடிக்கையைக் கூட சில நாடுகள் செய்ய வில்லை. UK, கனடா, ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் இப்போது ஃபலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

ஆனால் இனப்படுகொலையை அரங்கேற்றி வரும் இஸ்ரேல் தொடக்கம் முதலே அமைதிப் பேச்சுவார்த்தை, சமாதானம் போன்ற பேச்சுக்கே இடமளிக்கவில்லை. போரை தொடர்ந்து நடத்துவது, எல்லையை விரிவுபடுத்துவது என தங்களின் அகண்ட இஸ்ரேல் எனும் கனவை நோக்கியே செயல்படுகின்றன. அதற்காக ஒட்டு மொத்த ஃபலஸ்தீனை தங்களுடன் இணைப்பது, அண்டை நாடுகளைத் தாக்கி அவர்களை வலுவிழக்கச் செய்வது எனத் திட்டமிடுகின்றது இஸ்ரேல். இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஒரு தொலைக்காட்சி  நேர்காணலில்  அகண்ட இஸ்ரேல்  குறித்துப்  பேசி  உள்ளார். அதன் தொடர்ச்சியாகவே இஸ்ரேலுக்கும் ஹமாசிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி  வந்த  கத்தாரின்  தலைநகரில் சமாதானப் பேச்சுவார்த்தைக்காக வந்திருந்த தலைவர்களைக் கொலை செய்ய முயற்சித்துள்ளது இஸ்ரேல்.

ஃபலஸ்தீன மக்களை வெளியேற்றி ஃபலஸ்தீனை அமெரிக்கா மறுகட்டமைப்பு செய்யப் போவதாகவும் ஃபலஸ்தீன நிலத்தை சிறந்த ரியல் எஸ்டேட் எனவும் பேசி உள்ளார் ட்ரம்ப். அதேபோல் இன்றளவும் ஐநா சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா  தனது  தனி  அதிகாரத்தை(வீட்டோ) பயன்படுத்தி தடுத்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபை(UN) இஸ்ரேல் இனப்படுகொலை தான் செய்கிறது எனக் கூறியுள்ளது. இருந்தும் கூட இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்து பாதுகாத்து வருகிறது. அமெரிக்காவின் இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாட்டை எதிர்க்காமல் அரபு நாடுகளாலும் அல்லது வேறு எந்த நாடுகளாலும் இஸ்ரேலைத் தடுத்து நிறுத்த இயலாது. இஸ்ரேலின் நோக்கம் வேறாகவும் இவர்கள் தரக்கூடிய தீர்வு வேறாகவும் இருக்கிறது. எனவே இரு நாடுகள் தீர்வு (கூதீணி குtச்tஞு குணிடூதtடிணிண) என்பது ஒரு கண் துடைப்பு நாடகம்தானே தவிர தீர்வு அல்ல.

அமெரிக்காவின் துரோகத்தை உணருமா அரபு நாடுகள்?

1940களில் மத்திய கிழக்கில் உள்ள ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கு எதிராக அரபு நாடுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது ராணுவத் தளவாடங்களைத் தொடங்கியது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் இல்லாத பகுதியே இல்லை எனலாம். அதுபோல ஈரானைத் தவிர அரபுலகில் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டாத நாடே இல்லை. அதற்குச்  சிறந்த  எடுத்துக்காட்டாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற உடன் தனது வெளிநாட்டு  சுற்றுப்பயணத்தில்  முதலில் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு தரப்பட்டது.

ஃபலஸ்தீனில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் போதே சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அமெரிக்காவில் ட்ரில்லியன் டாலர்களை முதலீடு செய்தனர். இதற்கு ஒரு படி மேலாக கத்தார் ட்ரம்பிற்கு விலை உயர்ந்த சொகுசு விமானத்தைப் பரிசளித்தது. இது இரு நாடுகளின் உறவை மேலும் பலப்படுத்தியது எனப் பலர் தெரிவித்தனர்.

அமெரிக்காவுடன் இவ்வாறாக நெருக்கம் பாராட்டுவதன் மூலம் தங்களின் நலனுக்காக அமெரிக்கா நிற்கும் என மத்திய கிழக்கு நாடுகள் நம்பின. அதனால் அகண்ட இஸ்ரேல் பாதிப்பில் இருந்தும் தப்பிவிடலாம் என நம்பியிருந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு இஸ்ரேலின் கத்தார் மீதான தாக்குதல் பெரும் அதிர்ச்சி அளித்தது.

மத்திய  கிழக்கில்  அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத் தளமான அல் உதைத் விமானத் தளம் கத்தாரிலேயே அமைந்துள்ளது. மேலும் கத்தார் மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாக இருக்கும் செல்லப்பிள்ளை எனலாம். அமெரிக்கா 2022இல் கத்தாரை தனது NATO (அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டமைப்பு) அல்லாத ஒரு முக்கிய நாடாக அறிவித்தது. அதேபோல் கத்தாரின் வான்வெளியை அமெரிக்காவே பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா ஆப்கானிஸ்தான், இஸ்ரேல் ஹமாஸ் எனப் பல மத்திய கிழக்கு பிரச்னைகளில் அமைதி ஏற்பட கத்தாரே முக்கிய காரணம். கத்தார் அமெரிக்காவுடன் இவ்வளவு நெருக்கமாக இருந்தும் இஸ்ரேல் கத்தார் மீது நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா எந்த ஒரு வலுவான கண்டனத்தையும் எதிர்வினையும் நடத்தவில்லை.  ஆனால்  இதைப்போல் இஸ்ரேலை ஹவுதி, ஹிஸ்புல்லா, ஈரான் தாக்கிய தருணங்களில் அமெரிக்கா நேரடியாகக் களத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

இதன்  காரணமாகவே  இஸ்ரேலுக்கு எதிராகத் தங்களின் நலனைப் பாதுகாக்க பாகிஸ்தானும் சவுதியும் இராணுவ ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் இரட்டை நிலை அம்பலமானதை அடுத்தாவது மத்திய கிழக்கு நாடுகள் விழிப்படையுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்