மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

வெறுப்பின் நூறாண்டு
சேயன் இப்ராகிம், அக்டோபர் 16-31, 2025


ராஸ்ட்ரிய ஸ்யவம் சேவக் சங் எனப்படும் RSS அமைப்பு தனது நூற்றாண்டு விழாவைக் கடைப்பிடித்து வருகிறது. 1925ஆம் ஆண்டு ஆயுத பூஜை நாளன்று (27.09.1925) இந்த அமைப்பு இந்துத்துவவாதிகளால் உருவாக்கப்பட்டது. கேசவ் பலிராவ் ஹெட்கேவர் என்பவர் இதன் நிறுவனத் தலைவராவார். நாட்டிலுள்ள இந்து சமய மக்களை ஒன்றுபடுத்தவும், இந்து தர்மத்தையும், கலாச்சாரத்தையும் காக்கவும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதாக அதன் தலைவர்கள் அப்போது அறிவித்தனர். நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் முக்கியத் தலைவர்கள் சித் பவன் பிராமணர்களே (இந்த பிராமணர்களே மராட்டிய மன்னர் சிவாஜியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.)

1937ஆம் ஆண்டில் கோல்வால்கர் என்பவர் இந்த அமைப்பின் தலைவரானார். அவர் சிந்தனைக் கொத்து (Bunch of Thoughts) என்ற நூலை எழுதினார். இதுவே இந்த அமைப்பின் வேத நூலாகக் கருதப்படுகிறது. முஸ்லிம்களும், கிறித்தவர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல என்றும், இந்தியா, பர்மா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அகண்ட பாரதம் அமைப்பதே இறுதி இலக்கு என்றும் அவர் இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

‘இது இந்துக்களின் புராதன நாடு. இப்போது இங்கு வாழ்கின்ற பல்வேறு சமூகத்தவரும் யூதர்கள் அல்லது பார்சிகள் போன்ற நமது விருந்தினர்கள். அல்லது முஸ்லிம்கள், கிறித்தவர்கள் போன்ற ஆக்கிரமிப்பாளர்கள். ஒரு பொது ஆட்சியின் கீழ், ஒரு பொது மண்ணில் எதேச்சையாக வாழ நேர்ந்திருக்கிறது என்ற காரணத்தாலேயே இந்த வெவ்வேறு பட்ட குழுக்கள் எப்படி இந்த மண்ணின் மைந்தர்களாக ஆக முடியும் என்ற கேள்வியைச் சந்தித்தாக வேண்டியதுள்ளது’ என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும் ‘அவர்கள் திரும்பி வரட்டும். உடை, பழக்க வழக்கங்கள், திருமணச் சடங்குகள், இறுதிச் சடங்குகள் போன்ற விஷயங்களில் அவர்கள் தங்களது மூதாதையர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றட்டும். அவர்களுக்காக நமது வீடுகளை, புகலிடங்களை, கோயில்களை, புராதனக் கலாச்சாரத்தை, பாரம்பர்யத்தைத் திறந்து விடுகிறோம்’ என்றும் இந்த நூலில் எழுதியுள்ளார்.

சுருங்கக் கூறின் இந்திய நாட்டில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற ஆனால் தங்களது சமய நம்பிக்கையை மாற்றிக் கொண்ட முஸ்லிம்களும், கிறித்தவர்களும் அன்னியர்களே என்று அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார். அவர்கள் இந்து சமயத்தை நோக்கித் திரும்பட்டும் என்கிறார். இந்த சிந்தாத்தத்தின் அடிப்படையிலேயே RSS கட்டமைக்கப்பட்டது. வளர்க்கப்பட்டது. மிக நெடிய இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது RSS எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி அறிவித்த எந்தப் போராட்டங்களிலும் அந்த இயக்கத்தினர் கலந்துகொள்ளவில்லை. இந்திய விடுதலைப் போரின் உச்சகட்ட இயக்கமான ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் RSS தொண்டர்கள் கலந்துகொள்ளக் கூடாது என அதன் தலைவர்கள் வெளிப்படையாகவே அறிவித்தனர். இந்திய விடுதலை தினத்தை அந்த அமைப்பு கொண்டாடவில்லை. இந்திய அரசியல் சட்டத்தை ஏற்கவில்லை. இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை RSS அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதில்லை.

விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக எந்த ஒரு RSS தலைவரும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கவில்லை. அவர்கள் கொண்டாடுகின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் கூட காங்கிரஸ்காரர்தான். தங்களது இயக்கத்தில் விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்ட தலைவர்கள் யாரும் இல்லாத காரணத்தாலேயே அவர்கள் சர்தார் பட்டேலைக் காங்கிரஸிலிருந்து கடன் வாங்கிக் கொண்டாடுகிறார்கள். என்ன அவலம் இது?

கடந்த நூறாண்டு காலத்தில் அந்த அமைப்பு ஒன்றிய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்டது. முதலாவது தடை காந்தி சுட்டுக் கொல்ப்பட்ட போது, இரண்டாவது தடை பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி என்னவென்றால், இந்த இயக்கத்தின் மீது முதலாவது தடை உத்தரவைப் பிறப்பித்தவர் இவர்களால் இன்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடப்படுகின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் என்பதேயாகும். மகாத்மா காந்தி கொல்லப் பட்டபோது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களே இந்த தடை உத்தரவினைப் பிறப்பித்தார்.

தங்களது இயக்கத்தின் மீதான தடையை விலக்கக் கோரி, RSS தலைவர் கோல்வால்கர் எழுதிய கடிதத்திற்குப் பதிலளித்து 11.9.1948 அன்று உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

‘அவர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு, அது வும் ஆளுமைகள் கண்ணியம் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் வெளிப்படுத்தும் வன்மம் நிறைந்த எதிர்ப்பு மக்களிடையே ஒருவிதமான அதிருப்தியை உரு வாக்கியிருக்கிறது. அவர்களின் பேச்சுகள் அனைத்தும் விஷம் நிறைந்தவையாக உள்ளன. இந்துக்களை உற்சாகப்படுத்தி அவர்களைத் திரட்ட வேண்டுமென்பதற்காக விஷத்தைப் பரப்பினர். இந்த விஷத்தின் இறுதி விளைவாக காந்தியின் விலை மதிப்பற்ற உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய துயரத்தை நாடு தாங்க வேண்டியதிருந்தது. இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் RSS மீதிருந்த சிறு அனுதாபமும் இப்போது இல்லை. உண்மையில் அதன் மீதான எதிர்ப்புதான் வளர்ந்துள்ளது. RSS ஆட்கள் காந்தியின் மரணத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்து இனிப்புகள் விநியோகித்த செயல் அந்த எதிர்ப்பை வலுப்படுத்தியது. இந்தச்சூழலில் RSS மீது அரசு எடுத்த நடவடிக்கை இன்றியமையாதது.’

RSS காரர்கள் நிகழ்த்திய விஷம் கலந்த வன்மப் பரப்புரையே காந்தியின் கொலைக்குக் காரணம் என்பதையும், காந்தியின் கொலையை அவர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதையும் சர்தார் பட்டேல் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். RSS இயக்கத்தின் உண்மையான முகம் இதுவே யாகும். மகாத்மா காந்தி கொலைக்கு RSS காரணமில்லை என இன்றைக்கு மின் ஊடகங்களில் பிதற்றித் திரியும் வலதுசாரி பத்திரிகையõளர்களிடம் இதற்கு எந்தப் பதிலும் இல்லை.

காந்தியைக் கொன்ற கோட்சே RSS காரன்  இல்லையென்றால்,  எதற்காக இன்று வரை அவனது அஸ்தியை(உடலை எரித்த பின் கிடைத்த சாம்பலை) அதன் தலைமை அலுவலகத்தில் பாதுகாத்து வைத் திருக்கிறார்கள்?  பொய்யும்  புரட்டும், வெறுப்புமே RSS இயக்கத்தின் மூலதனமாகும். ஒரு முஸ்லிம் என்றாலே எந்தவிதமான காரணமுமின்றி அவனிடம் வெறுப்புக்  காட்டவேண்டுமென்றே RSS பயிற்சி முகாம்களில் அதன் ஊழியர்களுக்குச் சொல் லப்பட்டு வருகிறது. முன்னாள் RSS கார்யவாக் பன்வர் மெக்கன்ஷி என்பவர் எழுதியுள்ள ‘இந்துவாக நான் இருக்க முடியாது என்ற நூலைப் படிக்க வேண்டுகிறேன். (எதிர் வெளியீடு)

இந்தியாவில் விடுதலைக்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து இந்து முஸ்லிம் வகுப்புக் கலவரங்களிலும் RSS இயக்கத்திற்குப் பெரும் பங்கு இருந்தது. அதனின் தூண்டுதல்  இருந்தது.  இதனைப்  பல விசாரணைக் குழுக்கள் வெளியிட்டுள்ளன. மதவெறுப்புப் பரப்புரையை அந்த இயக்கம் நேரடியாகச் செய்யாது. அதன் துணை அமைப்புகளான (விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள், இந்து முன்னணி) ஆகியவற்றைக் கொண்டே செய்ய வைக்கும். ஆனால் தனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாதது போல் நடந்து கொள்ளும். சில சமயங்களில் தனது துணை அமைப்புகளுக்குப் புத்திமதியும் கூறும். எல்லாமே ஒரு நாடகம்தான். இப்படி ஏராளமான செய்திகளைக் கூறிக் கொண்டே போகலாம்.

இந்த இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவையொட்டி, ஒன்றிய அரசு அஞ்சல் தலையும், நாணயங்களையும் வெளியிடுகிறது. இதற்கு பல்வேறு மதச்சார்பற்ற அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். இப்படிச் சிறப்பித்துக் கொண்டாடக் கூடிய அளவுக்கு நாட்டிற்கு அந்த அமைப்பு என்ன செய்துள்ளது என்று கேட்டால் அதற்கு உரிய பதில் இல்லை. இன்றைக்கு, ஒன்றிய அரசின் பொறுப்பிலிருக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் அந்த இயக்கத்திற்கு ஆண்டுதோறும் சந்தா செலுத்தும் உறுப்பினர்களே! அதனால் கொண்டாடுகிறார்கள்!

விடுதலைப் போராட்டங்களின் போது எந்தவிதமான பங்களிப்பும் செய்யாத, நாட்டின் ஒற்றுமைக்கும் சமய நல்லிணக்கத்திற்கும் ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகின்ற, முஸ்லிம் வெறுப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்படுகின்ற RSS அமைப்புக்கு அஞ்சல் தலைகள், நாணயங்கள் ஏன் வெளியிட வேண்டும்? நாணயமற்ற செயல் இது! RSS மக்கள் பணிகளில் ஈடுபட்டதாக தினமணி தனது தலையங்கத்தில் எழுதிஉள்ளது. என்ன மக்கள் பணி என்று கேட்டால், பஞ்ச காலங்களின் போதும், பெரு மழைக் காலங்களின் போதும், பேரிடர் காலங்களின் போதும் அந்த அமைப்பின் ஊழியர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள்  என்று  பட்டியலிடுகிறார் தினமணி நாளிதழின் ஆசிரியர். ஒரு வாதத்திற்காக அதனை ஏற்றுக் கொண்டாலும், நாட்டின் பன்னூற்றுக்கணக்கான தொண்டு அமைப்புகள் உள்ளனவே. அவையும் இதுபோன்ற காலங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனவே. அவற்றுக்கு இல்லாத சிறப்பு இந்த அமைப்புக்கு என்ன இருக்கிறது?

கொரோனா பெருநோய் காலத்தின் போது RSSகாரர்கள் எங்கு சென்றிருந்தனர்? இந்துக்கள், கிறித்தவர்கள், முஸ்லிம்கள் என்று பாகுபாடு காட்டாது நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை முஸ்லிம் அமைப்புகளைச் சார்ந்த தொண்டர்கள்தானே அடக்கம் செய்தனர். இந்துக்களின் சடலங்களைக் கூட அடக்கம் செய்வதற்கு RSS இயக்கத்தினர் யாரும் முன்வர வில்லையே ஏன்?

RSS இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கல்வி நிலையங்களையும், தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருவதாக தினமணி நாளிதழ் புகழ்ந்துரைக்கிறது.  இதனால் நாட்டிற்கு என்ன பலன்? இவர்கள் நடத்துகின்ற பள்ளிக்கூடங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கு இந்துத்துவா சிந்தனையே ஊட்டப்படுகிறது. இக்கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் அரசின் நிர்வாகத் துறையிலும், நீதித்துறையிலும், காவல்துறையிலும் பணியிடம் பெற்று இந்துத்துவவாதிகளாக, சமய சார்பின்மையில் நம்பிக்கை இல்லாதவர்களாக, சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு செய்பவர்களாக, முஸ்லிம் வெறுப்பாளர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இதுதானே இன்றைய உண்மையான நிலவரம். எனவே எப்படிப் பார்த்தாலும் RSS கொண் டாடத்தக்க ஓர் இயக்கமில்லை.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்