மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

தலைமை நீதிபதியை அவமதிக்கும் சனாதனவாதிகள்
சேயன் இப்ராகிம், நவம்பர் 1-15, 2025



தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

 


05.10.2025  அன்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் என்பவரோடு அமர்ந்து ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த போது, ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் திடீரென்று தலைமை நீதிபதியை நோக்கிச் செருப்பை வீசினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீசப்பட்டது இதுவே முதன்முறை எனலாம். ஆனால் இதனைச் சற்றும் பொருட்படுத்தாத தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ‘இதுபோன்ற சம்பவங்களால் எங்களது கவனம் சிதற வேண்டாம் இது எங்களைப் பாதிக்கவில்லை’ என்று கூறி விட்டுத் தனது பணிகளைத் தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பை விசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், சனாதன தர்மத்தை அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாது என முழக்கமிட்டதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசத்திலுள்ள பாரம்பர்யச் சின்னங்களில்  ஒன்றான  கஜுராஹோ வளாகத்தில் அமைந்துள்ள ஜவாரி கோயிலில் விஷ்ணுவின் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என ஒருவர் 16.05.2025 அன்று தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி கவாய் உத்தரவிட்டார். இந்த வழக்கு விளம்பர நோக்கத்தில் தொட ரப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி அப்போது தெரிவித்தார். எனினும் மனு தாரரின் வழக்கறிஞர் இந்த விஷயத்தை விடாப் பிடியாக வாதாடிய போது தலைமை நீதிபதி ‘இந்த விவகாரத்திற்கு உங்கள் கடவுளிடமே பதில் கேளுங்கள்’ என்று தெரிவித்தார்.

தலைமை நீதிபதியின் இந்தக் கூற்றுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புத் தெரிவித்துப் பலர் பதிவிட்டனர். இந்துக்களின் சமய உணர்வுகளை தலைமை நீதிபதி புண்படுத்தி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனைக் கண்ணுற்ற தலைமை நீதிபதி ‘வழக்கு ஒன்றில் நான் தெரிவித்த கருத்துகள் வலைதளங்களில் திரித்துப் பரப்பப்படுகின்றன. அனைத்து மதங் களையும் நான் எப்போதும் மதிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த நிகழ்ச்சி சம்பந்தமாகவே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தலைமை நீதிபதி மீது செருப்பு விசி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனினும் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. எனினும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவையற்றது. அதனை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை எனத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதியரசர்கள் சூர்ய காந்த், ஜாய்மாலா பக்ஷி ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்படவிருக்கிறது.

இந்தச் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவிப்பதற்குப் பதில் நீதிபதியின்  பொறுமையைப்  பாராட்டினார்.  எதிர்க்கட்சித்  தலைவர்  மல்லிகார் ஜுன் கார்கே உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது அவரது இருக்கைக்கு அருகேயே சென்று செருப்புவீசிய அந்த வழக்கறிஞரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவருக்கு இந்த தைரியம் எப்படி வந்தது? தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கிறார். எனவே நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அந்த வழக்கறிஞர் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும். இது போன்ற ஒரு சம்பவம் தமிழக நீதிமன்றத்தில் நடந்திருந்தால், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என அதிமுக, பாஜக கட்சியினர் கண்டனக் குரல் எழுப்புவார்கள். ஆனால் டெல்லியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று யாரும் கூக்குரல் எழுப்பவில்லை. ஏன்?

கடந்த 15 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்திலும், மாநில உயர் நீதிமன்றங்களிலும் பணியாற்றுகின்ற சில நீதிபதிகளின் தீர்ப்புகளும், அவர்கள் விசாரணையின் போது தெரிவிக்கின்ற  கருத்துகளும்  முஸ்லிம்களுக்குப் பாதகமாகவே அமைந்திருந்தன. ஆனால் எந்த முஸ்லிமும் அதற்கு இப்படி ஓர் எதிர்வினையாற்றத் துணியவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு அலகாபாத் நீதிமன்ற நீதிபதி யாதவ் கீகுகு வழக்கறிஞர்கள் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய போது, ‘இந்தியா இந்துக்களின் நாடு. பெரும்பான்மையினரான அவர்களின் விருப்பப்படியே  சட்டங்கள்  இருக்கும் என்று கூறியதோடு, மாமிசம் உண்ணுகின்ற முஸ்லிம்கள் இரக்கமற்றவர்கள்’ என்றும் பேசினார்.

அவரின் அரசியல் சட்டத்திற்கு விரோதமான இந்தக் கருத்துகள் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அலகாபாத் நீதிமன்ற நீதிபதியின் இந்தக் கருத்துகளுக்கு எந்த ஒரு முஸ்லிமும் எதிர்வினையாற்றவில்லை. நீதிபதியை அவமதிக்கின்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை.

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு தொடங்கி பல்வேறு வழக்குகளில் முஸ்லிம்களுக்குப் பாதகமான தீர்ப்புகள் வந்துள்ள சூழ்நிலைகளிலும் முஸ்லிம்கள் யாரும் நிதானம் இழக்கவில்லை. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு அதாவது விடுதலை தினத்தன்று மத ஆலயங்கள் யார் யார் கட்டுப்பாட்டில் இருந்த னவோ அவை அப்படியே இருக்கும், எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என ஒன்றிய அரசு சட்டம் இயற்றிய பின்னரும், காசி, மதுரா என பல வடஇந்திய நகரங்களிலுள்ள பள்ளிவாசல்கள் கோயில்களை இடித்துக் கட்டப்பட்டன என்று வழக்குகள் இந்துத்துவவாதிகளால் தொடுக்கப்பட்டு அவை கீழமை நீதிமன்றங்களாலும், மாநில உயர் நீதிமன்றங்களாலும் விசாரிக்கப்படுகின்ற  சூழ்நிலைகளிலும் இந்திய முஸ்லிம்கள் நிதானம் இழக்கவில்லை. சட்டப்படியே செயல்படுகிறார்கள்.

சென்னை நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் உள்ள நீதிபதி சுவாமி நாதன் என்பவர், குடுமி வைத்திருப்பவன் தவறு செய்ய மாட்டான் என பொது நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகவே பேசுகின்றார். அவரின் இந்தக் கூற்றுக்கு யாரும் எதிர்வினை ஆற்றவில்லை.

திருப்பரங்குன்றத்திலுள்ள சிக்கந்தர் தர்கா வில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் ஆடு, கோழிகளை அறுத்து சமைத்து பிறருக்கும் வழங்கி தாங்களும் உண்டு வருகிறார்கள். இந்த உண்மை அந்தப் பகுதி மக்களுக்குக் குறிப்பாக சகோதர, இந்து சமய மக்களுக்கு நன்கு தெரியும். இருந்த போதிலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகள் அறுக்கத் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்தத் தீர்ப்பு குறித்து முஸ்லிம்கள் பதற்றமடையவில்லை. உரிமை யியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில்  குடியுரிமைத்  திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாகப் போராடிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ சக்திகள் மீது டெல்லி காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் 63க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அழிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அன்றைய ஒன்றிய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அவசர அவசரமாக சண்டிகர் உயர்  நீதிமன்றத்திற்கு  மாற்றப்பட்டார்.இதுவரை கலவரத்தைத் தூண்டிய பாஜக தலைவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய உமர் காலித் உள்ளிட்ட 10 முஸ்லிம் இளைஞர்களை இந்தக் கலவரத்தைத் தூண்டினர் எனக் கைது செய்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்துள்னர். அவர்களின் பிணை மனுவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். அவர்கள் இன்னும் சிறைகளிலேயே வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் பிணை மனு உச்ச நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருக்கிறது. இந்த ஒரு துயரமான சூழ்நிலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் நிதானம் இழக்கவில்லை. நீதிமன்றம் நியாயம் வழங்கும் என்றே நம்பியிருக்கின்றனர்.

இப்படி ஏராளமான சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலித் சமுதாயத்தைச்  சார்ந்தவர்.  அவர்  தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா (பம்பாய்) சென்ற போது அவரை வரவேற்க அந்த மாநில அரசின் அமைச்சரோ, உயர் அதிகாரிகளோ யாரும் வரவில்லை. இதனை அவர் சுட்டிக் காட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். தலைமை நீதிபதி தலித் என்பதால் புறக்கணிக்கப்படுகிறாரா? நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. அதன் திறப்பு விழாவிற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை. ராம்நாத் கோவிந்த் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். திரௌபதி முர்மு பழங்குடி இனத்தைச் சார்ந்தவர். இவர்கள் நாட்டின் உயரிய பதவியில் இருந்தõலும் அவர்களது சாதியப் பின்னணி காரணமானவே புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இந்த மனநிலை நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது. அதே மனநிலையை வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரும் பெற்றிருக்கிறார். அது அவருக்கு தலித் சமூகத்தைச் சார்ந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யையே அவமதிக்கின்ற துணிச்சலைக் கொடுக்கிறது. சனாதன தர்மப்படி, அவரவர்கள், அவரவர்களின் சாதிக்குரிய தொழில்களையே செய்ய வேண்டும். மீறிச் செய்வது தர்மமாகாது. ஆனால் பட்டியலினத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதி தனது சாதிக்குரிய தொழிலைச் செய்யாமல், நீதிபதியாகப் பணியாற்றுவதை ராகேஷ் கிஷோர் போன்ற மனநிலை கொண்டவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவமானப்படுத்துகிறார்கள்.

வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் போன்ற சனாதன மனப்பான்மை கொண்டோர் நாடெங்கும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் அப்படி ஒருவர் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். மதிமுக, காங்கிரஸ், திமுக எனப் பல கட்சிகளில் பயணித்து விட்டு தற்போது பாஜகவில் சேர்ந்துள்ள வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் என்பவர் தலைமை நீதிபதி கவாயின் செருப்பு குறித்து விமர்சித்து ‘தலைமை நீதிபதி அணிந்திருக்கும் ஷûவின் விலை’ என்று தலைப்பிட்டு தனது டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் வறுமையிலிருந்து எழுந்த மை லார்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அணிந்திருக்கும் லூயிஸ் உய்ட்டன் காலணிகளின் மதிப்பு ரூ. 78,000 மட்டுமே.

சில நாள்களுக்கு முன்னர் அவர் வறுமையிலிருந்து எழுந்ததாகக் கூறினார். அதே நேரத்தில் அவரது காங்கிரஸ் தந்தை 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ ஆகவும் 7 ஆண்டுகள் எம்பியாகவும் 3 முறை ஆளுநராகவும் இருந்தார். மை லார்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் ஏதோ ஒரு காலணியை தலைமை நீதிபதி மீது வீசினார். ஆனால் நமதூர் வழக்கறிஞர் தலைமை நீதிபதியின் காலணிகள் பற்றி பேசுகின்றார். இருவரும் சனாதன வெறியர்களே. உயர் சாதி வெறியர்களே. இத்தகைய மனப்பான்மை  கொண்டோர்  இந்தியாவில் அதிகரித்து வருவது ஆபத்தானது. சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியது. ‘வேதியராயினும் ஒன்றே; அன்றி வேறு குலத்தவராயினும் ஒன்றே’ என்ற பாரதியாரின் வரிகள் இந்த இருள் மனம் படைத்தவர்களைத் திருத்துமா?


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்