மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

போர் நிறுத்தம் நிரந்தர அமைதியை ஏற்படுத்துமா?
ரியாஸ் மொய்தீன், நவம்பர் 1-15, 2025



இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஃபலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையால் எழுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் காயம் அடைந்த நிலையில் சற்று ஆசுவாசம் தரும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2025 செப்டம்பர் 29 அன்று ஃபலஸ்தீனில் போர் நிறுத்தத்திற்கான 20 அம்சத் திட்டத்தை வெளியிட்டார். இந்தத் திட்டம் அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.


அமைதி ஒப்பந்தம் உருவாவதற்கான முக்கிய காரணங்கள்

இந்த இனப்படுகொலை தொடங்கிய நாள் முதல் இதை நிறுத்துவதற்காக இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஐநாவும் உலக நாடுகளும் அழுத்தங்கள் கொடுத்து வந்தன. இருப்பினும் அது சாத்தியப்படவில்லை.

உலக அளவில் பல நாடுகளில் பொதுமக்கள்  பெருந்திரள்  போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என பல வடிவங்களில் அரசாங்கத்திற்குத் தொடர்ந்து கடும் அழுத்தங்களைக்  கொடுத்து  வந்தனர். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளிகளான அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஃபலஸ்தீனுக்கு ஆதரவான போராட்டங்கள் மிகத் தீவிரம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் UK, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் எனப் பல நாடுகள் ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரித்தன. மேலும் ICJ இஸ்ரே லிய பிரதமருக்குக் கைது வாரண்ட் பிறப்பித்தது. ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல் இனப்படுகொலைதான் செய்கின்றது என அறிவித்தது. உலக அளவில் இஸ்ரேலுக்கும் அதை ஆதரிக்கும் அமெரிக்காவுக்கும் கடும் அழுத்தங்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கத்தாரின் தலைநகர் தோகாவுக்கு வந்திருந்த ஹமாஸ் தலைவர் மீது இஸ்ரேல் சர்வதேச விதிகளை மீறி வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது சர்வதேச அளவில் இஸ்ரேலுக்குக் கடும் கண்டனத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தியது. இதன் பின்னணியிலேயே இந்த அமைதி ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்தது.

அமைதி ஒப்பந்தத்தின் கூறுகள்

அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லாத தீவிரவாதமற்ற மண்டலமாகக் காஸா மாற்றப்படும்.

அதிகம்  பாதிப்புகளுக்கு  உள்ளான காஸா மக்களின் நலனுக்காகக் காஸா மறுகட்டமைப்பு செய்யப்படும்.

இந்த முன்மொழிவுக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால் போர் உடனடியாக முடிவுக்கு வரும். பிணைக் கைதிகளை விடுவிப்பதற்குத் தயாராவதற்கு இஸ்ரேலியப் படைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டிலிருந்து பின்வாங்கும். இந்த நேரத்தில் வான்வழி, பீரங்கித் தாக்குதல் உட்பட அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும். மேலும் முழுமையாக நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்ட எல்லைக் கோட்டிலேயே நிறுத்தி வைக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்ட 72 மணி நேரத்திற்குள் உயிருடன் உள்ள, இறந்த அனைத்து பணயக் கைதிகளும் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டவுடன் இஸ்ரேல் 250 ஆயுள் தண்டனை கைதிகளையும் 2023 அக்டோபர் 7க்குப் பிறகு தடுத்து வைக்கப்பட்டிருந்த 1,700 காஸாவாசிகள் குறிப்பாக பெண்கள், குழந்தைகளை விடுவிக்கும். ஒவ்வொரு இறந்த பணயக் கைதியின் உடலுக்கும் 15 காஸாவாசிகளின் உடல்களை இஸ்ரேல் விடுவிக்கும்.

அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதும் அமைதியான சக வாழ்வுக்கும் ஆயுதங்களை அகற்றுவதற்கும் உறுதியளிக்கும். ஹமாஸ் உறுப்பினர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படும். காஸாவை விட்டு வெளியேற விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு அவர்கள் செல்லும் நாடுகளுக்குப் பாதுகாப்பான வழிவகை செய்து தரப்படும்.

இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், முழு உதவியும் உடனடியாக காஸா பகுதிக்கு அனுப்பப்படும். 2025 ஜனவரி 19 அன்று மனிதாபிமான உதவி தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ள குறைந்தபட்ச உதவி அளவுகள் என இதில் உள்கட்டமைப்பு (நீர், மின்சாரம், கழிவுநீர்) மறு சீரமைப்பு, மருத்துவமனைகள், பேக்கரிகளின் மறுசீரமைப்பு, இடிபாடுகளை அகற்றத் தேவையான உபகரணங்களை அறிமுகப்படுத்துதல், திறந்த சாலைகள் ஆகியவை அடங்கும்.

காஸா பகுதியில் உதவிப் பொருள்கள், உணவு  விநியோகம்  இரு  தரப்பினரின் தலையீடு இல்லாமல் ஐக்கிய நாடுகள் சபை, அதன் நிறுவனங்கள், ரெட் கிரசண்ட் மூலம் தொடரும். மேலும் இரு தரப்பினருடனும் எந்த வகையிலும் தொடர்புபடுத்தப்படாத பிற சர்வதேச நிறுவனங்களும் இதில் அடங்கும். 2025 ஜனவரி 19 ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட அதே வழிமுறைகள் மூலம் ரஃபா எல்லை இரு திசைகளிலும் திறக்கப்படும்.

காஸாவில் உள்ள மக்களுக்குப் பொது சேவைகள், நகராட்சிகளின் அன்றாட நட வடிக்கைகளை வழங்குவதற்குப் பொறுப்பான தொழில்நுட்பம் சார்ந்த அரசியல் சார்பற்ற தற்காலிக இடைக்கால ஃபலஸ்தீனக் குழுவின் நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும். இந்தக் குழு தகுதிவாய்ந்த ஃபலஸ்தீனர்கள், சர்வதேச நிபுணர்களைக் கொண்டிருக்கும். மேலும் புதிய சர்வதேச இடைக்கால அமைப்பான ‘அமைதி வாரியம்’ மேற்பார்வையுடன் இருக்கும்.

இது  டொனால்ட்  ஜே  ட்ரம்ப் தலைமையிலும், முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உட்பட பிற உறுப்பினர்கள், அரச தலைவர்கள் (அறிவிக்கப்பட உள்ளனர்). இந்த ஃபலஸ்தீன ஆணையம் 2020ஆம் ஆண்டு ட்ரம்பின் அமைதித் திட்டம், சவுதி பிரெஞ்சு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி அதன் சீர்திருத்தத் திட்டத்தை நிறைவு செய்து காஸா பாதுகாப்பாகவும் திறம்படவும் திரும்பும் வரை இந்த அமைப்பு காஸாவின் மறுசீரமைப்புக்கான கட்டமைப்பை அமைத்து அதன் நிதியைக் கையாளும். இந்த அமைப்பு காஸா மக்களுக்குச் சேவை செய்யும். மேலும் சிறந்த சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதற்கு உகந்த நவீன திறமையான நிர்வாகத்தை உருவாக்கும்.

ட்ரம்ப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் படி காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப மத்திய கிழக்கில் செழிப்பான நவீன நகரங்களை உருவாக்க உதவிய நிபுணர்கள் குழுவின் மூலம் திட்டம் உருவாக்கப்படும். பல சிந்தனைமிக்க முதலீட்டுத் திட்டங்களும், மேம்பாட்டு யோசனைகளும் நல்லெண்ணம் கொண்ட சர்வதேசக் குழுக்களால் வடிவமைக் கப்பட்டுள்ளன. மேலும் எதிர்கால காஸாவிற்கு வேலை வாய்ப்புகள் நம்பிக்கையை உருவாக்கும். இந்த முதலீடுகளை ஈர்ப்பதற்கும் எளிதாக்குவதற்கும் பாதுகாப்பு, நிர்வாகக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

பங்கேற்கும்  நாடுகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விருப்பமான கட்டணங்கள் அணுகல் விகிதங்களுடன் காஸாவில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்படும்.

காஸாவை விட்டு வெளியேற யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். வெளியேற விரும்புவோர் சுதந்திரமாக வெளியேறவும், சுதந்திரமாகத் திரும்பியும் வரலாம். மக்கள் காஸா பகுதியில் இருப்பதை ஊக்குவிக்கப்படும். மேலும் சிறந்த காஸாவை உருவாக்க அவர்களுக்கு வாய்ப்பளிப்போம்.

ஹமாஸ், பிற பிரிவுகள் காஸாவின் நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது எந்த வடிவத்திலும் எந்தப் பங்கையும் வகிக்காது என்று ஒப்புக்கொள்கின்றன. சுரங்கப்பாதைகள், ஆயுத உற்பத்தி வசதிகள் உட்பட அனைத்து இராணுவ  பயங்கரவாத  உள்கட்டமைப்புகளும் அழிக்கப்படும்; மீண்டும் கட்டப்படாது. சுயாதீன கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ் காஸாவில் இராணுவ மயமாக்கலை நீக்கும் செயல்முறை இருக்கும். இதில் ஒப்புக்கொள்ளப்பட்ட செயல்முறை மூலம் பயன்பõட்டிற்கு  அப்பால்  நிரந்தரமாக ஆயுதங்களை வைப்பது என சர்வதேச அளவில் நிதியளிக்கப்பட்ட ஆயுதங்களைத் திரும்ப வாங்குதல் மறு ஒருங்கிணைப்புத் திட்டத்தின் மூலம் ஆதரிக்கப்படுவது ஆகியவை அடங்கும். புதிய காஸா ஒரு வளமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அதன் அண்டை நாடுகளுடன் அமைதியான சகவாழ்வுக்கும் முழுமையாக உறுதியளிக்கும்.

ஹமாஸ் பிரிவுகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதையும், புதிய காஸா அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது அதன் மக்களுக்கோ எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதையும் உறுதி செய்வதற்கு பிராந்திய பங்காளிகளால் ஓர் உத்தரவாதம் வழங்கப்படும்.

காஸாவில் உடனடியாக நிலைநிறுத்த ஒரு தற்காலிக சர்வதேச நிலைப்படுத்தல் படையை(ISF) உருவாக்க அமெரிக்கா அரபு, சர்வதேசக் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படும். காஸாவில் சரிபார்க்கப்பட்ட ஃபலஸ்தீன காவல் படைகளுக்கு ISF பயிற்சி அளித்து ஆதரவளிக்கும். மேலும் இந்தத் துறையில் விரிவான அனுபவமுள்ள ஜோர்டான், எகிப்துடன் கலந்தாலோசிக்கும். இந்தப் படை நீண்ட கால உள்நாட்டுப் பாதுகாப்புக்குத் தீர்வாக இருக்கும். எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க ISF இஸ்ரேல், எகிப்து உடன் புதிதாகப் பயிற்சி பெற்ற ஃபலஸ்தீன காவல் படைகளுடன் இணைந்து  செயல்படும்.  காஸாவுக்குள் வெடிமருந்துகள் நுழைவதைத் தடுப்பதும் காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவும் புத்துயிர் பெறவும் பொருட்களின் விரைவான பாதுகாப்பான ஓட்டத்தை எளிதாக்குவதும் மிக முக்கியம். மோதல் நீக்க வழிமுறையை இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும்.

இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிக்கவோ அல்லது இணைக்கவோ மாட்டாது. ISF கட்டுப் பாடு நிலைத்தன்மையை நிறுவுவதால், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் IDF ஒப்புக் கொள்ளப்படும் இராணுவ மயமாக்கலை நீக்குதலுடன் இணைக்கப்பட்ட தரநிலைகள், காலக்கெடுவின் அடிப்படையில் பின்வாங்கும். இது இஸ்ரேல், எகிப்து அல்லது அதன் குடிமக்களுக்கு இனி அச்சுறுத்தலாக இல்லாத பாதுகாப்பான காஸாவை உருவாக்கும் நோக்கத்துடன் இருக்கும். நடைமுறையில் IDF படிப்படியாக அது ஆக்கிரமித்துள்ள காஸா பிரதேசத்தை ISFயிடம் ஒப்படைக்கும். அவர்கள் காஸாவிலிருந்து முழுமையாகத் திரும்பப் பெறப்படும் வரை, காஸா மீண்டும் எழுச்சி பெற்று பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து முறையாகப் பாதுகாக்கப்படும் வரை ISF காஸாவில் இருக்கும்.

இந்தத் திட்டத்தை ஹமாஸ் தாமதப்படுத்தினால் அல்லது நிராகரித்தால், IDFயிடம் இருக்கும் பயங்கரவாதமற்ற பகுதிகள் ISFக்கு ஒப்படைக்கப்பட்டு மேற்கூறிய அளவிடப்பட்ட உதவி நடவடிக்கைகள் தொடரும்.

ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்கள் மனநிலைகளை மாற்ற முயற்சிக்கும் வகையில் அமைதியிலிருந்து பெறக்கூடிய நன்மைகளை வலியுறுத்துவதன் மூலம் சகிப்புத்தன்மை, அமைதியான சகவாழ்வு ஆகியவற்றின் மதிப்புகளின் அடிப்படையில் இரு மதங்களுக்கு இடையேயான உரையாடல் செயல்முறை நிறுவப்படும்.

காஸா மறுசீரமைப்பு முன்னேறும் அதே வேளையில் ஃபலஸ்தீன ஆட்சி சீர்திருத்தத் திட்டம் உண்மையாக நிறைவேற்றப்படும்போது ஃபலஸ்தீன சுயநிர்ணய உரிமை, மாநில அந்தஸ்து பெறுவதற்கான நம்பகமான பாதைக்கான நிலைமைகள் இறுதியாக உருவாகக்கூடும். இது ஃபலஸ்தீன மக்களின் விருப்பமாக நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

அமைதியான,  வளமான  சகவாழ்வுக்கான அரசியலுக்கு உடன்பட இஸ்ரேலுக்கும்  ஃபலஸ்தீனர்களுக்கும்  இடையே அமெரிக்கா ஓர் உரையாடலை நிறுவும்.

ஒப்பந்தத்தின் குறைபாடுகள்

ட்ரம்பின் அமைதி ஒப்பந்தம் பல நாட்டுத் தலைவர்களால் பாராட்டப்பட்டு வரவேற்கப்பட்டிருந்தாலும் இதனை நடைமுறையில் செயல்படுத்தி வெற்றி காண முடியுமா? என சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் அறிவுஜீவிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் இதில் நிறைய கூறுகள் விளக்கப்படாமலும், நேரம் குறிப்பிடப்படாமலும் நடைமுறைப்படுத்தப்படும் வழிகள் தெளிவுபடுத்தப்படாமலும் உள்ளது. அமைதியை நிலை நிறுத்துவதை விடவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா இஸ்ரேலிய நலன்களை மையமாகக் கொண்டதாக உள்ளது.

முதலில் இந்த ஒப்பந்தத்தில் இரண்டு முக்கியப்  பங்குதாரர்களாக  ஹமாஸ் இஸ்ரேல் இருக்கின்றனர். ஆதலால் அவர்கள் இருவர்களிடமும் பேசி அவர்களின் கோரிக்கைகள் நிபந்தனைகளின் அடிப்படையில் தான் ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட முடியும். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேலுடனும் அவரின் நட்பு நாடுகளுடன் மட்டுமே கலந்தாலோசித்து இதைத் தயாரித்துள்ளார். இன் னொரு பங்குதாரரான ஹமாசுக்கு இங்கு எந்த முக்கிய இடமும் தரப்படவில்லை.

ஹமாசிடம் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் விடுவித்து காஸா மக்களையும் ஹமாஸ் அமைப்பையும் ஆயு தங்கள் அற்ற நிராயுதபாணிகளாக ஆக்கு வதை இந்த ஒப்பந்தத்தின் முதன்மைக் கூறாக இருக்கிறது. இவை நடந்த பின்னரும் இஸ்ரேல் ஃபலஸ்தீன் மீது தாக்குதல் நடத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காஸாவை  மட்டும்  மையப்படுத்திய இந்த ஒப்பந்தத்தில் நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் 2 State solution குறித்தோ மேற்குக்கரை குறித்தோ எந்தக் கூறுகளும் இடம் பெறவில்லை.

காஸாவை சர்வதேச அமைப்பு ஒன்று நிர்வகித்து மறு கட்டமைப்பு செய்யும் எனவும் ISF எனும் சர்வதேச நாடுகளின் பாதுகாப்புப் படை காஸாவைப் பாதுகாத்து ஃபலஸ்தீன காவல் படையை உருவாக்கி அதற்கு பயிற்சி அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் ஃபலஸ்தீனர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை விட சர்வதேச நாடுகளின் நலன், முடிவுகள் நிலைநிறுத்தப்படும்.

இந்த முழு ஒப்பந்தத்தில் எந்த ஓர் இடத்திலும் காஸாவில் இனப்படுகொலையை நடத் தியவர்களைக் கண்டறிய எந்தக் குழுவோ அல்லது அவர்களுக்குத் தண்டனை வழங்குவது குறித்தோ எந்த ஒரு தகவலும் இடம்பெறவில்லை.

இவ்வாறாக இன்னும் பல பிரச்னைகள் இந்த அமைதி ஒப்பந்தத்தில் உள்ளதாகவும் இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த  ஒப்பந்தத்தை  இஸ்ரேல்  எந்த விதத்தில் பேணும் என்பது குறித்த ஐயமும் எழுகின்றது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் கூட இஸ்ரேல் ஃபலஸ்தீன் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றது. ஃபலஸ்தீன் பிரச்னைக்கு இந்த அமைதி ஒப்பந்தம் ஓர் இளைப்பாறுதலைத் தரலாமே தவிர இதுவே நிரந்தரத் தீர்வாக அமையாது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்