இஸ்ரேல், ஃபலஸ்தீனுக்கு இடையே அறிவிக்கப்பட்ட புதிய போர் நிறுத்தம் நம்பிக்கை தரும் நேர்மறையான புரட்சிகர நடவடிக்கையாகும். இந்தப் போர் நிறுத்தம் காஸாவில் இரு ஆண்டுகளாக நடந்த முன்னெப்போதும் இல்லாத இரத்தக் களரிக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது. காஸா மக்கள் பேரழிவை அனுபவித்து வரும் நிலையில் இந்தப் போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
இது அவர்களுக்கு மிகவும் தேவையான இளைப்பாறுதலை வழங்கும். இருப்பினும் ஃபலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த மண்ணில் கண்ணியம், பாதுகாப்பு, சுதந்திரத்துடன் வாழக்கூடிய முழு இறையாண்மை மிக்க சுதந்திரமான ஃபலஸ்தீன அரசு நிறுவப்படாமல் அமைதியும் நீதியும் முழுமையடையாது என்பதை வலியுறுத்துகிறோம். இந்த தற்காலிக அமைதி ஒரு விரிவான, நியாயமான அமைதிக்கு அடித்தளமாக அமைய வேண்டும். மீண்டும் புதிய அழிவுக்கு முன்னோடியாக இருக்கக் கூடாது. இந்த முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கிய உலகெங்கிலும் உள்ள துணிச்சலான மக்களுக்கு எங்களது பாராட்டுகள்.
மனிதாபிமானத்திற்கு எதிரான இந்தப் போர் பல அரசாங்கங்களின் பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ள சாதாரண மக்களின் இரக்கம், மனசாட்சியின் நீதிமிக்க உணர்வை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஃபலஸ் தீன மக்கள் ஆக்கிரமிப்பு, முற்றுகை, பயத்திலிருந்து விடுபட்டு முழு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசில் வாழும் உரிமையைப் பெறும் வரை உயிர்ப்புடன் இருக்க வேண்டும். காஸாவில் பொதுமக்கள் அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பு அல்லது நிலைப்படுத்தல் என்ற பெயரில் ஃபலஸ்தீன மக்களுக்கு விருப்பமில்லாத வெளிநாட்டுச் சக்திகள் திணிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காஸாவின் நிர்வாகம் அங்குள்ள மக்களின் விருப்பத்தையும் ஆசைகளையும் பிரதிபலிக்க வேண்டும். காஸா மக்களுக்கு உணவு, மருந்து, வீட்டுவசதி, நம்பிக்கை ஆகியவை அவசரமாகத் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு நாள் தாமதமும் அப்பாவி உயிர்களைப் பறிக்கிறது. ஃபலஸ்தீன மக்களின் மன உறுதியும் திடமான நிலைப்பாடும் உலகிற்கு ஒரு நேர்த்தியான வழிகாட்டியாகத் திகழ்கிறது. காஸா மக்களின் தைரியம், பொறுமை, அசைக்க முடியாத நம்பிக்கை உலகை ஊக்கப்படுத்தியுள்ளது. இந்தப் போர் நிறுத்தம் நீதி, சமத்துவத்தின் அடிப்படையில் நீடித்த அமைதியின் விடியலாக அமைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
இந்திய அரசு போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பில் கோட்பாட்டு, செயலூக்கமான பங்கு வகிக்க வேண்டும். ஃபலஸ்தீனுக்கு தனது வரலாற்று ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். ஃபலஸ்தீன மக்களால் சுதந்திரமாக ஆளப்படும், சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முழு இறையாண்மை கொண்ட ஃபலஸ்தீன அரசு விரைவாக உருவாக்கப்படுவதற்கு வாதிட வேண்டும்.