தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு காரணமாக சென்னையில் காற்றின் தரம் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான இந்தப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
தீபாவளியின் போது நாடு முழுவதும் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை 2016இல் பிறப்பித்தது. தலைநகர் டெல்லி அதன் சுற்றுப்புறங்களில் பட்டாசு வெடிக்க முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டது. இதர மாநிலங்களில் தீபாவளியின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதனைப் பின்பற்றி தமிழ்நாடு அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு, டெல்லியில் பசுமைப் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
பொதுவாக, கட்டுப்பாட்டை மீறிப் பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனைச் சட்டம் 188இன்படி வழக்குப் புதிவுசெய்யப்பட்டு, 6 மாதங்கள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதுதவிர, பசுமைப் பட்டாசு அல்லாத தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிப்பவர்கள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது பிரிவு 285இன்படி வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இத்தகைய கட்டுப்பாடுகள் டெல்லி, சென்னை உள்பட எல்லா நகரங்களிலும் தொடர்ச்சியாக மீறப்படுகின்றன. இதன் விளைவாக, டெல்லியில் இம்முறை உலகச் சுகாதார நிறுவனம் நிர்ணயித்ததை விட 15 மடங்கு காற்று மாசு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி உள்பட 39 இடங்களில் காற்று மாசும் 34 இடங்களில் ஒலி மாசும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் பதிவு செய்யப்படுகின்றன. காற்றுத் தர நிர்ணயத்தின்படி 050க்கும் இடையிலான காற்றின் தரக் குறியீடு ‘நல்லது’. 51 - 100 தரக்குறியீடு ‘திருப்திகரமானது’ 101-200 ‘மிதமானது’. 201-300 ‘மோசம்’ எனக் கருதப்படுகிறது. அதுவே, குறியீடு 300ஐத் தாண்டும்போது மிகுந்த ஆபத்தாக மாறுகிறது. இதில், அக்டோபர் 20 அன்று காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரைக்கும் காற்று மாசுபாட்டுக் குறியீடு சென்னையில் 300ஐத் தாண்டியுள்ளது.
இவ்வாறு காற்றின் தரம் வீழ்ச்சி அடையும்போது அதன் நேரடித் தாக்கம் மனிதர்களின் உடல் நலத்தில் எதிரொலிக்கும். குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகளுக்குச் சுவாசக் கோளாறு உள்ளிட்ட ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இது தவிர காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு ஆகியவை நாய், பூனை, பறவைகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்களையும் கடுமையாகப் பாதிக்கும்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் டன் கணக்கில் (சென்னையில் 3 நாள்களில் 226 டன்) பட்டாசுக் குப்பை அகற்றும் இன்னலுக்குத் தூய்மைப் பணியாளர்கள் ஆளாக்கப்படுகின்றனர். இவ்வளவு இன்னல்களை விளைவிக்கக்கூடிய விதிமீறல்களை அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. குறைந்தபட்சம் மாநகராட்சி வாரியாகப் பொது இடங்களைத் தெரிவு செய்து அங்கு மக்கள் கூடிப் பட்டாசு வெடிக்கும் முறையைப் பின்பற்றலாம். ஒளிமயமான எதிர்காலம் வேண்டும் எனில், தீபாவளித் திருநாளைச் சுற்றுச்சுழலுக்கும் சமூகத்துக்கும் கேடு விளைவிக்காமல் கொண்டாடும் வழியை நோக்கிச் சமூகம் நகர்ந்தாக வேண்டும்.