வக்ஃப் என்னும் சொல் வகஃபா என்னும் அரபுச் சொல்லை ஆணி வேராகக் கொண்டு அமைந்துள்ளது. அதற்குப் பொருள் ‘நிறுத்து’ அல்லது ‘நிலையாக வைத்திரு’ என்பதாகும்.
ஓர் உடைமை அல்லது சொத்தை இஸ்லாமிய மேம்பாட்டிற்காகவும் அறக்கட்டளைக்காகவும் நிரந்தரமாக அர்ப்பணிப்பதைக் குறிக்கின்றது. அதாவது ஓர் உடைமை (சொத்து) வக்ஃப் என்று முடிவு செய்யப்பட்டால், அச் சொத்தை விற்கவோ, வாரிசுரிமை கொண்டாடவோ, தானம் கொடுப்பதிலிருந்தோ விலக்கு ஏற்பட்டுவிடும்.
கல்வி, மருத்துவம், வறுமை ஒழிப்புக்காக நிரந்தரமாக சொத்தை அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது. அந்தச் சொத்திலிருந்து வரும் வருமானம் சமூக நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். வக்ஃப் இஸ்லாமிய சமுதாயத்தின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு சிறந்த ஏற்பாடாகும்.
இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா அமைந்துள்ளது. வக்ஃப் சொத்துகள் இஸ்லாமிய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக ஒரு பெரும் கருவூலமாக உள்ளது. வக்ஃப் நிறுவனங்கள் திறன் கொண்ட நிறுவனமாக இருப்பினும் நிர்வாகத்தின் ஆளுமைக் குறைபாட்டாலும், பயன்பாடுகள் குறைவாலும் தவறாகவும் பயன்படுத்தப்படு கின்றது.
இஸ்லாமிய வளர்ச்சி வங்கி(IsDB) இந்திய நாட்டின் ஓர் அங்கமாக இல்லாவிட்டாலும் இஸ்லாமிய நிதியின் உறுதியான கட்டமைப்பு, அதனைப் பற்றிய அறிவு பகர்தல், வளர்ச்சி, ஆதரித்தலில் முக்கியத்துவம் காட்ட முனைகின்றது.
இந்தியாவில் வக்ஃப் நிறுவனங்களின் பரிமாணம், தற்போதைய நிலை
அரசு நகராட்சிகளுக்கு வரும் நிதி நாட்டு மக்களின் மீது சுமத்தப்படும் வரிப்பணத்தில் இருந்து பெறப்படுவது போல் அல்லாமல், இந்தியாவில் உள்ள வக்ஃப் நிறுவனங்கள் அந்தந்த மாநிலத்தின் வக்ஃப் வாரியங்களால் நிர்வகிக்கப்பட்டு, தனியார் அறக்கட்டளைகளால் நிதி அளிக்கப்பட்டு இதனைக் கொண்டு இஸ்லாமிய சமுதாயம் பயனடைகின்றது.
இந்திய நாட்டில் வக்ஃப் நிறுவனங்கள் ஆறு கோடி சொத்துகளை உரிமை கொண்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 1.2 இலட்சம் கோடி(14.4 பில்லியன்). இத்தனை மதிப்புள்ள சொத்துகளை வைத்திருந்தும், இந்நிறுவனங்களிலிருந்து ஈட்டும் ஆண்டு வருமானம், அதன் மதிப்பீட்டிலிருந்து ஒரு விழுக்காட்டிற்கும் (1%) குறைவாகவே உள்ளது. அவற்றில் சில இன்னும் குறைவாக ரூ 193 கோடி (19.5 பில்லியன்)ஆக உள்ளது.
இவ்வாறு இந்திய வக்ஃப் நிறுவனங்களிலிருந்து மிகப் பெரும் வருமானம் இஸ்லாமிய சமுதாயத்திற்குக் கிடைத்தும் கல்வி, மருத்துவம், வறுமை ஒழிப்பிற்காக அருமையான வாய்ப்புகளை தவற விட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மூலகாரணமாக அமைவது ஆக்கிரமிப்பு, நிர்வாகத்தில் ஆளுமைக் குறைபாடு, நவீன உத்திகள் தொழில்நுட்பங்களைக் கையாளுவதில் குறைபாடு ஆகும்.
முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் பரவலõகவும், குடும்ப நிர்வாகங்களாலும் நடத்தப்பட்ட வக்ஃப் நிறுவனங்கள், ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அரசு மேற்பார்வைக்குள் வந்தது. இறுதியாக இந்திய விடுதலைக்குப் பிறகு மாநில வக்ஃப் வாரியங்கள், பாரம்பரிய அறங்காவலர்களிடமிருந்த வக்ஃப் நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில ஆட்சியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
தொடர்ச்சியான இம்மாற்றங்கள் இருப்பினும் ஆக்கிரமிப்பு, கவனிப்பின்மை, குறைவான வெளிப்படைத்தன்மை, சரியில்லாத அன்றாட நிர்வாகப் பொறுப்பு ஆகியவற்றால் வக்ஃப் சொத்துகள் சரியாகப் பராமரிக்கப்படாததால் வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025 உருவாவதற்கு வழிவகுத்தது.
வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025 வாய்ப்புகளும் கவலைகளும்
இந்தத் திருத்தச் சட்டம், வக்ஃப் நிர்வாகத்தை மறுசீரமைக்கும் நோக்கத்தில் பல புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது. அவற்றில் சில:
டிஜிட்டல் பதிவு, மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம்
இனி அனைத்து வக்ஃப் சொத்துகளும் ஆன்லைன் தளத்தின் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். இதன் நோக்கம், ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை உருவாக்கி நகல் பதிவு மோசடிகளைத் தடுப்பதாகும்.
பயனாளரின் வழியாக வக்ஃப் ஒழிப்பு
நீண்ட கால பயன்பாட்டில் உள்ள சொத்துகளை வக்ஃப் சொத்துகளாக அறிவிப் பதை ரத்து செய்வதன் மூலம் நில உரிமையைச் சார்ந்து உருவாகும் சண்டைகள் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு. அதே சமயம் இத் திருத்தத்தினால் நிலுவையில் உள்ள பல வக்ஃப் சொத்துகள் அங்கீகாரம் கிடைக்காமல் போக அபாயம் உள்ளதாகக் கவலை அளிக்கின்றது.
அரசாங்கச் சொத்துகளைச் சரிபார்த்தல்
அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்து களை வக்ஃப் சொத்துகளாக அறிவிக்க முடி யாது. இதனால் ஏற்படும் குழப்பங்களுக்கு மூத்த வருவாய் அதிகாரிகளால் தீர்ப்பளிக்கப்படும்.
மதம் சார்ந்த நம்பிக்கைச் சான்று கட்டாயம்
குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் தனிநபர் ஒருவருக்குத்தான் வக்ஃப் செய்ய அனுமதி வழங்கப்படும்.
வக்ஃப் தீர்ப்பாயங்களின் மறுசீரமைப்பு
இந்த திருத்தச் சட்டம், வக்ஃப் தீர்ப்பாயங்களில் இஸ்லாமியச் சட்டங்களை கற்றறிந்த வல்லுநர் ஒருவர் இருப்பதை மீண்டும் கட்டாயமாக்கி உள்ளது.
வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025 என்பது கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் ஒரு சட்டமாகும். இது வக்ஃப் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்யும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டாலும், முஸ்லிம் சமுதாயத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ‘இது அரசின் அதிகப்படியான தலையீடு’ ‘பயனாளரின் வழி வக்ஃப் (Waqf by User) திருத்தம் பாரம்பரிய நடைமுறைகளை அழிக்கும் என்றும் அஞ்சுகின் றனர். மேலும் இந்தத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் இஸ்லாமிய அமைப்புகளுடன் போதுமான ஆலோசனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சõட்டும் உள்ளது.
இத்தனை விமர்சனங்களையும் தாண்டி, இச்சட்டம் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. இது இஸ்லாத்தின் பெண்களின் வாரிசுரிமையைப் பாதுகாக்கும் ஒன்றாகவும் அமைகின்றது. வக்ஃப் வாரியங்களில் பெண்கள், புறக்கணிக்கப்பட்ட குழுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
மேலும் டிஜிட்டல் முறைகளில் பதிவுகள் பராமரிப்பு, நிர்வாகத்தை தொழில்முறையாக்குவது ஆகியவற்றினால் ஊழல் தடுக்கப்பட்டு சொத்துகள் பாதுகாக்கப்படுகின்றன.
உலகளாவிய சிறந்த நடைமுறைகள், இந்தியாவுக்கான பாடங்கள்
துருக்கி, மலேசியா நாடுகள் இன்றைய காலகட்டங்களில் வக்ஃப் நிர்வாகங்களை நவீனப்படுத்தி, சமுதாய நலனுக்காகப் பொருளாதாரத் திறனை வெளிப்படுத்தியதில் வெற்றி கண்டுள்ளது. துருக்கியின் Directorate General of Foundations (அடித்தளங்களின் பொது இயக்குநரகம்) மிகப்பெரிய அளவில் வணிகச் சொத்துகளையும், வியாபாரங்களையும் நிர்வகித்து வருகின்றது.
அதேசமயம், மலேசியா Cash Waqf, Corporate Waqf போன்ற முறைமைகளை அறிமுகப்படுத்தி மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் போன்ற முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி வழங்கி வருகின்றது. இவற்றின் மூலம் செயலற்ற, பாரம்பரிய நிர்வாகத்திலிருந்து பயனுள்ள, உற்பத்தி வாய்ந்த நிர்வாகத்திற்கு மாறியதைத் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது.
இந்த உலகளாவிய வழிமுறைகளைப் பின்பற்றி இந்தியாவும் பரவ லாக்கப்பட்ட, குடும்ப அடிப்படையிலான நிர்வாகத்திலிருந்து விலகி, வக்ஃப் நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பைச் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தொழில் முறையாக வழிநடத்தலாம். இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் வக்ஃப் நிறுவனங்களின் மீது கவனம் செலுத்தி அவற்றை உற்பத்தித் திறன் கொண்டு நிலையான வருமானம் ஈட்டும் சொத்துகளாக மாற்றுவதில் முனைப்புக் காட்ட வேண்டும்.
இறுதியாக மலேசிய நாட்டின் ‘இவக்ஃப்’ முயற்சிகள் மூலம் நவீனமயமாக்கப்பட்ட டிஜிட்டல் அணுகுமுறை, அரசாங்கத்தில் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றினால் ஊழல், நிர்வாகக் குளறுபடிகள் களையப்பட்டு வக்ஃப் அதனின் அடிப்படைக் கொள்கையான சமூகம், பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகத் திகழும்.
திறன் மேம்பாடு: காணாமல் போன இணைப்பு
நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி சமுதாயத்தின் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க இந்திய வக்ஃப் நிர்வாகத்திற்குத் திறன் மேம்பாடு தேவை. தற்போதுள்ள நிர்வாகத்தில் தொழில் சார்ந்த வல்லுநர்களும், பரவலாக்கப்பட்ட அமைப்புகளின் குறைவால் நிர்வாகம் மிகவும் கடுமையான குளறுபடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. முத்தவல்லிகள் (Mutawallis), வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கு தொழில்முறைக் கணக்கீடு, சொத்து நிர்வகிக்கும் திறமைகளைப் பற்றி விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டால், வக்ஃப் சொத்துகள் பொருளாதாரத்தை உயர்த்தி, சமூகத்திற்கு நிலையான வருமானத்தையும் கொண்டுவரும்.
திறன் மேம்பாடும், வெளிப்படைத் தன்மையும் பொறுப்பு உணர்வை ஊக்குவிப்பதும் சமுதாயத்தின் அச்சத்தை நிவர்த்தி செய்ய அடிப்படையாய் அமையும். வக்ஃப் அதிகாரிகளுக்குத் தகவல் வெளிப்படுத்தல், பிளாக்செயின் தொழில்நுட்பம், டிஜிட்டல் பதிவுகள் ஆகியவற்றின் அவசியத்தைப் பற்றிய பயிற்சி அளிப்பதன் மூலம், நிர்வாகத்தை ஈர்ப்புøடயதாக நம்பகமானதாக மாற்றலாம். இது மலேசியாவின் இவக்ஃப் முயற்சிகள் போன்ற உலகளாவிய மாதிரிகளுடன் ஒத்துப்போகிறது. அவை தகவல்களைப் பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் வெற்றிகரமாக நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.
வக்ஃப் நிறுவனங்களுக்குப் புதிய நன்கொøடகளை ஈர்ப்பதற்காக, அதன் நம்பிக்கையை மீட்டெடுப்பது மிக முக்கியம் மட்டுமின்றி வக்ஃப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், குறிப்பாக ஒதுக்கப்பட்ட சமூகங்களின் வளர்ச்சிக்கும் சக்தி வாய்ந்த கருவியாகச் செயல்படுகின்றது.
இஸ்லாமிக் டெவலப்மென்ட் வங்கியின் (IsDB) ஊக்கமூட்டும் பங்கு
இந்தியா, இஸ்லாமிக் டெவலப்மென்ட் வங்கியின்(IsDB) ஓர் உறுப்பினராக இல்லாவிட்டாலும், வங்கியின் சிறந்த வல்லுநர்கள் இந்தியாவின் வக்ஃப் சொத்துகளை மீட் டெடுப்பது தொடர்பான விஷயங்களில் அந்த வங்கியின் அனுபவம் இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ள பார்வைகள், வழிகாட்டுதல்களை வழங்க முடியும்.
IsDB, இந்திய வக்ஃப் அமைப்பை ஆதரிக்கக்கூடிய வழிகளில் அறிவுப் பரிமாற்றம், தொழில்நுட்ப உதவி ஆகியவற்றின் மூலம் கல்வி நிறுவனங்கள், வக்ஃப் அறங்காவலர்கள், அரசல்லாத அமைப்புகள் (NGO) ஆகியவற்றுக்குத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வழங்கலாம்.
முக்கிய முன்முயற்சிகள்
பொதுத் திறன் வளர்ச்சி
(General Capacity Development)
வக்ஃப் நிர்வாகிகள், சட்ட நிபுணர்களுக்காக டிஜிட்டல் சொத்து மேலாண்மை, இஸ்லாமிய நிதி, நிர்வாகத் தரநிலைகள் போன்ற தலைப்புகளில் சான்றிதழ், டிப்ளமோ அளவிலான கட்டமைக்கப்பட்ட கல்வித் திட்டங்களை உருவாக்குதல்.
ஆலோசனை / தொழில்நுட்பத் திறன் மேம்பாடு (Advisory / Technical CapacityDevelopment)
வக்ஃப் நிபுணர்களுக்குப் பதிவுகளை டிஜிட்டல் வடிவமாக்குதல், சொத்து வரைபடத்திற்காக GIS பயன்பாடு, மையப்படுத்தப்பட்ட தரவுத்தள அமைப்பு ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சிகள், தொழில்நுட்ப உதவி வழங்குதல்.
கூட்டாண்மைகள் (Partnerships)
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்(AligarhMuslim University) ஜாமியா மில்லியா இஸ்லாமியா(Jamia Millia Islamia) போன்ற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வக்ஃப் நிர்வாகம் தொடர்பான நிர்வாகப் பயிற்சி (executive) பாடநெறிகளை வழங்குதல்.
அறிவுப் பரிமாற்றம் (Knowledge Exchanges)
இந்திய வக்ஃப் பங்குதாரர்கள் மற்ற நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்ற வக்ஃப் மீளுயிர்ப்புத் திட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் வகையில் மன்றங்கள், பணிமனைகள் (forums workshops) ஏற்பாடு செய்தல்.
இந்த முயற்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டால், IsDB இந்திய வக்ஃப் அமைப் பில் அமைப்பு சார்ந்த மாற்றத்திற்கான கிரியா ஊக்கியாக(catalyst) மாற முடியும். இதன் மூலம் தற்போது சிறியதும் குறைந்த செயல்திறன் கொண்ட அமைப்புகளை, சமூக, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் சக்திவாய்ந்த இயந்திரங்களாக மாற்றவும், அதேசமயம் வக்ஃப் (திருத்த) சட்டம் 2025 உடன் இணக்கத்தையும் உறுதி செய்ய முடியும்.
மேலும் விவரங்களுக்கு:
htps:// blogs.isdbinstitute.org/waqf&governane&india&reform&capacity&inclusive&dev/
https://www.researchgate.net/publication/383870642_THE_ECONOMIC_VALUE_OF_WAQF_ASSETS_IN_INDIA_A_STUDY_OF_THE_SACHAR_COMMITTEE'S_REPORT
https://prsindia.org/billtrack/the-waqf-amendment-bill-2024
இஸ்லாமிக் டெவலப்மென்ட் வங்கி நிறுவனத்தின் (IsDB Institute) மூத்த மின்கற்றல் நிபுணர் (Senior E-Learning Specialist)
தமிழில் : பானு ஹமீத்