மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை காஜி மௌலானா N.P. உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி
மௌலவி வி.எஸ்.முஹம்மது முஸம்மில் அல்புகாரி, நவம்பர் 1-15, 2025


தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி டாக்டர் ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அவர்கள் 2025 மே 24 அன்று இறைவனிடம் மீண்டார்கள். அவர்களது இறப்பிற்குப் பின் தமிழ்நாட்டின் புதிய அரசு தலைமை காஜியாக மௌலானா N.P. உஸ்மான் முஹ்யித்தீன் ஆலிம் பாகவி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மௌலானா N.P. உஸ்மான் முஹ்யித்தீன் ஆலிம் பாகவி அவர்கள் பீர் முஹம்மது ஆலிம், ரசூலம்மா தம்பதியினருக்கு ஏழாவது ஆண் மகனாக 04.05.1945இல் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியை கடையநல்லூரில் பயின்ற மௌலானா சன்மார்க்கக் கல்வி கற்பதற்காக தமிழகத்தின் தாய்க் கல்லூரி என அழைக்கப்படும் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரிக்குச் சென்று அங்கு ஏழு ஆண்டுகள் இறை மார்க்கத்தைக் கற்று பின்னர் மேற்படிப்பாக தேவ்பந்தி, பாஜில் பட்டமும் முஃப்தி பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தின் அப்சல் அல் உலமா பட்டமும் பெற்றார். மௌலானா அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினரும் ஆவார்.

மௌலானா அவர்கள் தான் பயின்ற வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து பேராசிரியராக உயர்ந்து அக்கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தார். சற்றேறக்குறைய 40 ஆண்டு காலமாக இறை மார்க்கக் கல்வியை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய அறப்பணியைச் செய்து வந்தார். இன்றும் கல்லூரியில் மேலாண்மை பேராசிரியராகப் பணியைத் தொடர்கிறார். மௌலானா அவர்கள் இயல்பிலேயே பணிவும் எளிமையும் கொண்டவர்.

கடையநல்லூரில் பிறந்தாலும் பணிச்சூழல் காரணமாக தனது 4 ஆண் மக்களுடன் வேலூரில் வசித்து வருகிறார்.

காஜி முறை உருவான வரலாறு

முகலாய நீதிமன்றங்களில் உருவாக்கப்பட்டது தான் காஜி எனப்படும் Judicial Magistrate System. நவாப்களின் ஆட்சிக் காலத்தில் மாநில நிர்வாகத்திற்குத் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு துறையையும் கண்காணித்தும் நிர்வகித்தும் வந்தனர். ஆளுநர்கள், அவர்களுக்குக் கீழ் காஜிகள், மாகாண வருவாய் அதிகாரி, இராணுவ நிர்வாக அதிகாரி, காவல்துறை என துறைவாரியாகப் பிரிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் அன்றாட உரிமையில், குற்றவியல் பிரச்னைகளுக்கு ஷரீஅத் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் உருவான பிரிட்டிஷ் ஆட்சியில் காஜிகளின் இடத்தை ஆங்கிலேய நீதிபதிகள் பிடித்தனர்.

பாரிஸ்டராக 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களை நீதிபதிகளாக பிரிட்டிஷ் அரசாங்கம் அமர்த்தியது. முஸ்லிம்களின் முக்கிய சிவில் வழக்குகளில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக காஜி முறையை முழுவதுமாகத் தடை செய்துவிடாமல், அவ்வப்போது இயற்றப்பட்ட சில விதிமுறைகளின் மூலம் காஜிகளுக்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.

காஜிகளின் அதிகார வரம்புகளை வகுத்து ஆங்கிலேயர்களால்  கொண்டுவரப்பட்ட சட்டம்தான் Kazi's Act 1864, பிறகு இந்தச் சட்டம் திருத்தப்பட்டு தற்போதுKazi's Act, 1880 ஆக, சட்ட அதிகாரமற்ற விதிமுறைகளாக மாற்றப்பட்டுவிட்டன. தலைமை காஜி என்பவர் இஸ்லாமிய சமூகத்தில் ஒரு முக்கியப் பொறுப்பாளராவார். இஸ்லாமிய சட்டதிட்டங்களை (ஷரீஅத்) செயல்படுத்துவதிலும், சமூகத்திற்கு வழிகாட்டுவதிலும் தலைமை காஜிக்கு பல கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன.

1880இல் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் அரசு தலைமை காஜியாக நியமிக்கப்பட்டவர் காஜி உபைதுல்லா நக்ஷபந்தி ஆவார். இஸ்லாமிய மாதப் பிறைகள், ரமளான் நோன்பு, ஈத் பண்டிகைகள் (பெருநாள்கள்) போன்ற முக்கிய நிகழ்வுகளை அறிவித்து, அவற்றை இஸ்லாமிய சமூகம் எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதல் வழங்குவது இவரது பணிகளில் ஒன்றாகும். அரசின் தலைமை காஜி ரமளான், ஹஜ் பண்டிகை போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படும் தேதிகளை இஸ்லாமியப் பிறை  தென்படுவதன்  அடிப்படையில் அறிவிப்பார்.

முஸ்லிம் தனிநபர் சட்டம் தொடர்பான விஷயங்களில் இஸ்லாமிய ஷரீஅத் (மார்க்கச் சட்டத்தின்) அடிப்படையில் மக்களுக்கு ஆலோசனை வழங்குதல், திருமணம், விவாகரத்து (தலாக்), வாரிசுரிமை, வக்ஃப் போன்ற குடும்ப, சமூக ரீதியான விஷயங்களில்

இஸ்லõமிய சட்டத்தின்படி முடிவுகளை எடுக்க வழிகாட்டுதல் என இஸ்லாமிய சட்ட ஆலோசனையைக் கொடுப்பதும் இவர் பணிகளில் ஒன்றாகும். புதிதாகப்  பொறுப்பேற்றிருக்கும் தலைமை காஜி மௌலானா N.p. உஸ்மான் முஹ்யித்தீன் ஆலிம் பாகவி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.



உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்