மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அண்டை வீட்டார் யார்?
டாக்டர். கலீலுர் ரஹ்மான் M.B.B.S., M.S, நவம்பர் 16-30, 2025



பக்கத்து வீடுக்காரர் என்றால் ஒருவருக்கு முன்புறமும் பின்புறமும் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உள்ள நாற்பது வீடுகள் என ஹசன்(ரலி) கூறுகிறார்கள்: (அதபுல் முஃப்ரத்).

ஆயிஷா(ரலி) நபி முஹம்மது(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள், ‘எனக்கு இரண்டு அண்டை வீட்டார் இருந்து ஒருவருக்குத்தான் அன்பளிப்பு கொடுக்க முடியும் என்ற நிலையில் யாருக்குக் கொடுப்பது?’ நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள், ‘யாருடைய வீட்டு வாயில் உங்கள் வீட்டு வாயிலுக்கு மிக அருகில் உள்ளதோ அவருக்குக் கொடுங்கள்.’ (புகாரி)

நமது நாற்புறமும் உள்ள நாற்பது வீடுகள் அண்டை வீட்டாராக இருந்தாலும் நம் வீட்டு வாயிலுக்கு அருகில் யார் வீட்டு வாயில் உள்ளதோ அவரே முன்னுரிமை பெறுகிறார். அபூஹுரைரா(ரலி) கூறினார்கள்: ‘அருகில் உள்ள அண்டை வீட்டாரை விட்டு விட்டு தூரத்தில் இருக்கும் அண்டை வீட்டாரிடம் இருந்து ஆரம்பிக் காதீர்கள். மாறாக வெகு தொலைவில் இருக்கும் அண்டை வீட்டாருக்கு முன்பாக வெகு அருகில் உள்ள அண்டை வீட்டாரிடம் தொடங்குங்கள்.’

அண்டை வீட்டாருக்கு நன்மை செய்வது இறைகட்டளை

‘மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் யாரையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள் நல்லது செய்யுங்கள்! மேலும், உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டைவீட்டார், அந்நியரான அண்டைவீட்டார், பக்கத்தில் இருக்கும் நண்பர், வழிப்போக்கர், உங்கள் கைவசத்தில் உள்ள அடிமைகள் (பணியாளர்கள்) ஆகியோருடன் நயமாக நடந்து கொள்ளுங்கள். நன்மையும் உதவியும் செய்யுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; வீண்பெருமையிலும் கர்வத்திலும் உழல்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை.’ (திருக்குர்ஆன் 4:36)

இந்த வசனத்தில் பக்கத்தில் இருக்கும் நண்பர் என்பது நம்மோடு வாழ்வில் பயணிப்பவர்கள் அனைவரையும் குறிக்கும். கடைத்தெருவில் சந்திப்பவராக, கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் பணம் செலுத்திக் கொண்டிருக்கும்போது நம் பக்கத்தில் நிற்பவராக, பயணச்சீட்டு வாங்க நம்மோடு வரிசையில் நிற்பவராக, காலை நடைபயிற்சியில் எதிர்படுபவராக நம்மோடு இரயிலில் பயணிப்பவராக என வெகு தற்காலிகமாக உடனிருப்பவர்களாக இருக்கலாம். இவர்களிடம் எல்லாம் நயமாக நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு நன்மையும் உதவியும் புரிய வேண்டும் என்கிறான் இறைவன். எத்தகைய உயர்ந்த பண்பாட்டு நடத்தைøயயும் நாகரிகத்தையும் மனிதனிடம் எதிர்பார்க்கிறான் இறைவன்.


ஓர் ஐரோப்பிய நாட்டின் தலைநகரத்தில் நான் ஒருவரிடத்தில் நடைபாதையில் நின்று வழிகேட்டுக் கொண்டிருந்தேன். அவருக்கு ஆங்கிலத்தில் பேச வராவிட்டாலும் இயன்ற அளவு எனக்கு வழியைப் புரிய வைத்துக்கொண்டிருந்தார். அப்போது நடைபாதையில் வந்த மற்றுமொரு உயரமான ஐரோப்பியர் எங் களைக் கடந்து செல்ல வேண்டும் எங்களுக்கு இடையில்தான் செல்ல வேண்டும். சற்று தாம தித்து நின்று பார்த்தார் எங்கள் உரையாடல் முடிவதாயில்லை. ஆதலால் ‘எக்ஸ்கியூஸ் மீ’ என்று சொல்லிவிட்டு எங்கள் பார்வை தொடர்பை துண்டிக்காமலும் உரையாடலுக்கு இடையூறு இல்லாமலும் தனது முழங்காலை மடக்கி தன் உயரத்தைக் குறைத்துக்கொண்டு கடந்து சென்றார். நடைபாதையில் வழியை அடைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்களே என எரிச்சலடையாமல்! இத்தகைய நாகரிகமான நடத்தையைத்தான் இறைவன் மனிதனிடம் எதிர்பார்க்கிறான்.

தபால் நிலையத்திலோ வங்கியிலோ ஒரு படிவம் பூர்த்தி செய்வதற்கோ கைசாற்றிடுவதற்கோ பேனா கேட்டால்கூட எரிச்சல்பட்டு முனங்கி திட்டிக்கொண்டே பேனாவை கொடுக் கும் நாகரிகம் எங்கே? அந்த ஐரோப்பியர் காட்டும் நாகரிக நடத்தை எங்கே?

அண்டை வீட்டார் உரிமைகள் அதி முக்கியம்

உமர்(ரலி),  ஆயிஷா(ரலி)  அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) கூறினார்கள், எங்கே அண்டை வீட்டாருக்கு வாரிசுரிமை வழங்கும்படி சொல்லிவிடுவார்களோ எனும் அளவுக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பற்றி விரிவாக நெடுநேரம் எடுத்துரைத்தார்கள். ஜிப்ரீல்(அலை) வரிசையாக பக்கத்து வீட்டுக்காரரின் உரிமைகளைப் பட்டியலிட்டுக் கூறியுள்ளார்கள். அந்தப் பட்டியல் நீண்டதாக இருந்திருக்கிறது. இறைத்தூதர்(ஸல்) அடுத்து உங்கள் சொத்தில் வாரிசுரிமை உண்டு எனச் சொல்லிவிடுவார் களோ என்று எதிர்பார்க்கும் அளவுக்கு அத்தனை உரிமைகளைப் பட்டியலிட்டுள்ளார்கள்.


அபூஹுரைரா(ரலி)  அறிவிக்கிறார்கள்: ‘ஒரு முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அவன் நம்பிக்கையாளன் அல்ல’ என்று மும்முறை கூறினõர்கள். ‘யாரைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள்’ எனக் கேட்கப்பட்டது. அப்போது இறைத்தூதர் கூறினார்கள்: ‘எந்த மனிதனின் தீமையிலும் தவறான நடத் தையில் இருந்தும் அண்டை வீட்டுக்காரர் பாதுகாப்பாக உணரவில்லையோ அந்த மனிதன்’ என்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)

நம்மிடமிருந்து  நம்முடைய  பக்கத்து வீட்டுக்காரர் பாதுகாப்பாக உணரவில்லையென்றால் நமக்கு நம்பிக்கை (ஈமான்) இல்லை எனும் அளவுக்கு முக்கியமானதாக அண்டை வீட்டார் உரிமைகள் உள்ளன என்பதை நாம் உணர வேண்டும்.

இறைத்தூதர் முஹம்மது(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) கூறுகிறார்கள்:

‘இறைவனையும் இறுதித்தீர்ப்பு நாளையும் நம்புகிற ஒருவன் தனது அண்டை வீட்டருக்குக் கேடு செய்யாமல் அன்பு காட்டுபவராக இருக்கட்டும். விருந்தினரை நன்றாக உபசரிக்கட்டும். பேசினால் நன்மையைப் பேசட்டும் அல்லது வாய் மூடி மௌனமாக இருக்கட்டும்.’ (புஹாரி, முஸ்லிம்). ஈமான் உள்ள ஒருவன் தன் அண்டை வீட்டாருக்கு ஊறு விளைவித்தல் கூடாது என மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

இறைத்தூதர் முஹம்மது(ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் அறிவிக்கிறார்கள்: ‘அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த தோழர் யார் என்றால் அவருடைய தோழர்களுக்கு சிறந்தவரே! அல்லாஹ்வுடைய பார்வையில் யார் சிறந்த அண்டைவீட்டுக்காரர் என்றால் அவருடைய அண்டை வீட்டுக்காரருக்குச்
சிறந்தவராய் இருப்பவரே!’

என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

அண்டை  வீட்டாரைப்  பார்த்தால் புன்னகை புரியுங்கள். எந்த சக மனிதனைப் பார்த்தாலும் புன்னகை புரிவது அறச்செயல். மனிதனின் தனிச் சிறப்புகளில் ஒன்று புன்னகை. செலவேதும் இல்லை. உங்கள் மனநிலையிலும் எதிர்வருபவர் மனநிலையிலும் மகிழ்ச்சி மலரும். முகமன் கூறுங்கள். வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளுங்கள். சுக துக்கங்களிலே பங்கெடுத்துக் கொள்ளுங்கள். மரணம் சம்பவித்தவரின் அண்டை வீட்டார் மூன்று நாள்கள் உணவளித்தல் நபிவழி. பக்கத்து வீட்டினர் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவன் நம்பிக்கையாளன் அல்ல என இறைத்தூதர்  முஹம்மது(ஸல்)  கூறியதாக இப்னு அப்பாஸ் அறிவிக்கிறார்கள்.(பைஹகி).

உங்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் பொதுச்சுவர் இருந்து அவசியத்திற்காக ஒரு ஆணி அடிக்க வேண்டும் என்று கேட்டால் அனுமதியுங்கள். மணக்க மணக்க குருமா வைத்தால் சற்று அதிகரித்து பக்கத்து வீட்டுக்கும் கொடுத்தனுப்புங்கள். அவர் தேவையில்லாதவராக இருந்தாலும் நம் வீட்டில் குருமா வைத்தால் இவ்வளவு மணம் வருவதில்லையே என்ற உணர்வு வரலாம் என்பது போன்ற நுட்பமான உணர்வுக்கும் இறைத்தூதர் மதிப்பளித்தார்கள். ஆட்டின் குளம்பைப் போல அற்பமான பொருளாக இருந்தாலும் பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளுங்கள். பக்கத்து வீட்டுக்காரர் ஏழையாக இருந்து ஒரு பிடி அவல் கொடுத்தாலும் முக மலர்ச்சியுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

முஆத் இப்னு ஜபல் அறிவிக்கிறார் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) கூறினார்கள்: ‘பக்கத்து வீட்டுக்காரர் கடன் கேட்டால் கொடுங்கள். உதவி கேட்டால் உதவுங்கள். தேவையில் இருந்தால் தேவையை நிறைவேற்றுங்கள். நோயுற்றால் அவரிடம் நலம் விசாரிக்கச் செல்லுங்கள். அவர் இறந்துவிட்டால் மரண ஊர்வலத்தைப் பின்தொடருங்கள். அவருக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சி கொள்ளுங்கள். வாழ்த்துச் சொல்லுங்கள். அவருக்கு இடர் வந்தால் கவலை கொள்ளுங்கள். ஆறுதல் சொல்லுங்கள்.

உங்கள் வீட்டு சமையல் பாத்திரத்திலிருந்து எழும் நல்ல மணத்தில் இருந்து அவருக்கு வரும் சிரமத்தைப் போக்க அவ ருக்கும் சிறிது கொடுத்தனுப்புங்கள். பக்கத்து வீட்டுக்காரருக்குக் காற்றும் வெளிச்சமும் போகாத அளவுக்கு அவர் அனுமதித்தால் தவிர உயர்த்திக் கட்டாதீர்கள். வீட்டுக்குப் பழங்கள் வாங்கி வந்தால் பக்கத்து வீட்டாரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அவ்வளவு வசதி இல்லையென்றால் உங்கள் வீட்டுக் குழந்தைகள் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு ஏக்கம் வரும் வகையில் பழங்களை வெளியில் எடுத்துச் சென்று உண்ணாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பின் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்: ‘நான் சொல்வதைப் பூரணமாக புரிந்துகொள்ள முடிகிறதா?’ இறைகருணை பெற்றவர்கள் தவிர வேறு யார் ஒருவரும் அண்டை வீட்டாரின் உரிமையை முழுமை
யாக நிறைவேற்ற முடியாது.’

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த போது அவரது அண்டை வீட்டார் இவர்கள் போகும் பாதையில் குப்பைகளைப் போடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்வார்கள். அங்காடிக்குச் சென்றால் அக்கம் பக்கத்தவரிடம் உங்களுக்கு ஏதேனும் கடைவீதியில் வாங்கி வர வேண்டுமா எனக் கேட்பார்கள். நம் வீட்டுமுன் இருக்கிற குப்பையை முறைவாசல் என்ற பெயரில் பக்கத்து வீடு எதிர் வீட்டின் பக்கம் பரப்பிவிடும் செயலைத் தவிர்ப்போம்.

நாம்  வளர்க்கும்  மரம்  செடிகளின் கிளைகள் பக்கத்து வீட்டுக்குள் நீண்டு அங்கே இலைகள் உதிர்ந்து குப்பையாகாமல் பார்த்துக் கொள்வோம். நாம் வளர்க்கும் பிராணிகள் பக்கத்து வீட்டுக்குள் பாய்ந்து கேடு விளைவிக்காமல் பார்த்துக் கொள்வோம். இறைவனும் இறைத்தூதரும் காட்டித் தந்த வழியில் அண்டை வீட்டாரிடம் அன்புடனும் நாகரிகத்துடனும் நடந்து கொள்வோம். இன்றைய வெறுப்பரசியல் சூழலில் அன்பொழுகும் நடத்தையால் வெறுப்பை வேரருப்போம்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்