மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அன்பான அண்டை வீட்டார்
நசீர் அதாவுல்லாஹ், நவம்பர் 16-30, 2025


மனித சமூகத்தில் உருவாகிய ஓர் அழகிய அற்புதமான உறவுதான் அண்டை வீட்டார் எனும் உறவு. இடைவெளி இல்லாத, நெருக்கமான உறவும் கூட. அவசரமான, நெருக்கடியான,   மகிழ்ச்சியான,  துக்கமான வேளைகளில் உடனடியாக உதவிகை நீட்டுபவர்களும் இவர்களே!

உறவினர்களையும்,  நண்பர்களையும், அவசரகால தொலைப்பேசி எண்களை விடவும் முந்தி வருபவர்கள் அண்டை வீட்டாரே! அண்டை வீட்டாரிடம் அன்புடன் பழகுவது, அழகிய முறையில் உறவாடுவது இறைநம்பிக்கையை பசுமையாக்கும் சிறந்த செயலாக மதிக்கப்படுகிறது.

சின்னச் சின்ன உதவிகளில் இருந்து பெரிய உதவிகள் வரையிலும் அண்டை வீட்டாரின் பங்களிப்பு அதிகம். அவசரகால மருத்துவ உதவியும் ஆலோசனையும் வழங்கி நம் இன்னல் களைவதும் இவர்கள்தான். கவலை, துக்கம் போன்ற நிகழ்வுகளில் நமது மனச்சோர்வை நீக்கி ஆறுதல் தந்து சூழலின் இறுக்கத்தை மாற்றுவதிலும் இவர்களின் பங்களிப்பு உண்டு.
மூன்றாவதும் பெண்பிள்ளை பிறந்து விட்டதே என்று கவலையில் இருந்த குடும்பத்தை இனிப்புகளுடனும், நம்பிக்கை தரும் வார்த்தைகளுடனும் சென்று சந்தித்து, அவர்களின் மனதிற்குள் நம்பிக்கையை விதைக்கும் ஓர் அண்டை வீட்டார் அமைவது பாக்கியமே!

இது தொடர்பான நபிமொழிகளைக் கூறும்போது பெறும் ஆறுதல் அளப்பெரியது. இத்தகைய அழகிய நடத்தைகளை எங்கே தொலைத்து விட்டோம்? இறைவனும் திருக்குர்ஆன் மூலம் ‘அண்டை வீட்டாரிடம் அழகிய முறையில் உறவாடும்படி’ உத்தரவு பிறப்பிக்கிறான்.‘ ..நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும் நன்மை செய்யுங்கள்’ (திருக்குர்ஆன் 4:36)

நபி(ஸல்) அவர்கள், அபூஹுரைரா(ரலி) அவர்களுடைய கையைப் பிடித்து அற்புதமான ஐந்து விஷயங்களைக் கற்றுத் தருகிறார்கள். அவற்றில் ஒன்று அண்டை வீட்டாரிடம் அழகிய முறையில் நடந்து கொள்வது ஆகும்.

‘உமது அண்டை வீட்டாரிடம் நீர் அழகிய முறையில் நடந்து கொள்வீராக. அப்போது நீர் ஓர் இறைநம்பிக்கையாளராக ஆகிவிடுவீர்’ என நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: திர்மிதி)

ஒரு முறை நண்பர் ஒருவரது இல்லம் சென்று இருந்தபோது அவரது சமையல் அறையின் வெளியேற்ற விசிறி (Exhaust Fan) இட மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காரணம் கேட்டபோது புதிய அண்டை வீட்டுக்காரர் சைவ உணவு உண்பவர் என்பதால் நமது அசைவ உணவின் வாசனையால் அவருக்குத் துன்பம் தரக்கூடாது என்று பதில் வந்தது. எவ்வளவு நல்ல நடத்தை!

இஸ்லாம் நலம் நாடுதல் எனும் அம்சத்தில் தனிநபர், குடும்பம், அண்டை வீட்டார், உறவினர்கள் என்று எல்லோரையும் உள்ள டக்கி உள்ளது. வீட்டிற்கும் வீதிக்கும் நடுவே பாலமாக இருப்பவர்கள் நம் அண்டை வீட்டினர்தான். எனவே அவர்களின் நலன் நாடுதல் அவர்களின் உரிமையும் நமது கடமையும் ஆகும்.

இன்றைய நகர்புற வாழ்க்கையில் அடுக்குமாடி  குடியிருப்புவாசிகளாக  இருப்பின் அவர்கள் யாவரையும் அண்டை வீட்டாராகக் கருதலாம்.

முகநூலைத்தான் நமது அண்டை வீடாகப் பார்ப்போமா? வாட்ஸ்அப்பில்தான் நமது நலம் விசாரிப்பா? வாழ்த்துப் பரிமாற்றமா? இரங்கல் செய்திகளா? நாம் ஏன் இயந்திர கதியில் இயங்குகின்றோம்? கூப்பிடு தூரத்தில் இருக்கும் அண்டை வீட்டாரிடம் ஏன் இவ்வளவு இடைவெளி?

செல்வோம் நம் அண்டை வீட்டாரிடம் உறவாட, உரையாட! அன்பை விதைப்போம். நன்மைகளை அறுவடை செய்வோம்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்