ஒவ்வொரு முஸ்லிமும் சுவனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற இறை வணக்க வழிபாட்டில் அதிகக் கவனம் செலுத்துவது உண்டு. இறைக் கடமைகளை நிறை வேற்றுவதோடு, மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் உரிமை களையும் நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. குறிப்பாக, அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொண்டால், அதுவும் சுவனம் செல்ல எளிய வழியாக அமையும் என்கிறது.
ஒரு மனிதர் அண்ணலாரிடம் கூறினார்: ‘இன்ன பெண் மிக அதிகமாக உபரியான தொழுகைகள் தொழுகின்றாள். நஃபில் நோன்புகள் நோற்கின்றாள். தர்மம் (ஸதகா) கொடுக்கின்றாள். இந்த விஷயங்களில் அவள் பிரபலமாக விளங்குகின்றாள். ஆனால் தன் அண்டை வீட்டாருக்கு தன் நாவால் துன்பம் விளைவிக்கின்றாள்’. இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் ‘அந்தப் பெண் நரகம் புகுவாள்’ என்று கூறினார்கள்.
அந்த மனிதர் மீண்டும், ‘அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் பர்ளான நோன்புகள், தொழுகளைகள் தவிர உபரியான வணக்கங்களில் ஈடுபடுவதில்லை. பாலாடைக்கட்டியில் சில துண்டுகளை தானம் செய்கின்றாள். ஆனால் தன் நாவினால் அண்டை வீட்டாரைத் துன்புறுத்தவில்லை’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அந்தப் பெண் சுவனம் புகுவாள்’ என்று பதில் அளித்தார்கள். (மிஷ்காத்)
அண்டை வீட்டாரைத் துன்புறுத்தக்கூடாது. அவர்களின் உரிமைகளைப் பேணி நல்ல முறையில் நடந்து கொண்டால் சுவனம் நமக்குக் கிடைக்கும். முந்தைய காலத்தில் அண்டை வீட்டாருடன் இருந்த நேசமும், விட்டுக் கொடுத் தலும், கனிவும் தற்பொழுது வெகுவாகக் குறைந்து, பிரச்னைகளும், சிக்கல் களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அண்டை வீட்டாருடனான பொதுவான பிரச்னைகளாக, அதிகப்படியான இரைச்சலால் ஏற்படும் தொல்லை, கழிவுநீர் சரியாக வெளியேற்றப்படாவிட்டால் அண்டை வீட்டின் முன் தேங்குவது, குப்பைகளைக் குவிப்பது, செல்லப் பிராணிகள், வளர்ப்புப் பிராணிகள் அண்டை வீட்டார்களின் தோட்டத்திற்குள் நுழைவது, சொத்து எல்லைகளைத் தாண்டி, அண்டை வீட்டார் தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பது, விதிகளை மீறுவது, பொதுவான வழிகள், மரங்கள், அல்லது பொது இடத்தில் இருக்கும் பிற வசதிகளை பயன்படுத்துவதில் தகராறுகள், தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவது, அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைவது, தனிப்பட்ட விஷயங்களில் தலையீடு போன்றவற்றால் பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் மிகச் சிறந்த தீர்வு கூறும் இஸ்லாம் அண்டை விட்டாரின் நல்லுறவு பேணும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது. அதனைப் பின்பற்றினாலே இம்மை, மறுமை வெற்றியை அடைய முடியும்.
அண்டை வீட்டாரின் உரிமைகளும் கடமைகளும்
அண்டை வீட்டாருக்கு உதவ வேண்டும். அவர்களுக்குத் தொந்தரவு தரக்கூடாது.சொத்துகளை விற்கும் போது கூட அண்டை வீட்டாருக்கு அது தேவையா, இல்லையா? என்று கலந்தாலோசிக்க வேண் டும். ‘ஒருவரின் தோட்டத்திற்குப் பங்கு தாரரோ, அல்லது அண்டை வீட்டாரோ இருந்தால் அவரிடம் தெரிவிக்காமல் விற்க வேண்டாம்’ என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்.’
அண்டை வீட்டாரின் சுக, துக்கங்களில் பங்கு கொள்ள வேண்டும். அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது, வயிறு நிறைய உண்ணாமல் அவர்களையும் உண்ணச் செய்ய வேண்டும். அவர்களுக்கு நன்மை செய்வதோடு அன்பாக நடக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதில் பங்கு வகிக்க வேண்டும். அண்டை வீட்டாரைக் குறை கூறாமல் கண்ணியப்படுத்த வேண்டும்.
அண்டை வீட்டாருடன் நல்லுறவு பேண..!
அண்டை வீட்டாரோடு மோதல்களைத் தவிர்க்க பொறுமையாகவும், தெளிவாகவும், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னைகளை அமைதியாக நீதியுடன் அணுக வேண்டும். ஆக்ரோஷமான அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும்.
அண்டை வீட்டாரின் குணாதிசயங் களைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது அல்லது குற்றஞ்சாட்டுவது பிரச்னைகளை மேலும் மோசமாக்கும். ஆதலால் சிக்கல்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களைத் தொந்தரவு செய்யாதிருத்தல் அவசியமாகும்.
சத்தம், தூக்கம் கெடுக்கிற செயல்கள், அலட்சியம் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். அவர்களின் துன்பத்திலும், சுகத்திலும் பங்கேற்கவும், உதவவும் தயாராக இருக்க வேண்டும். நோய்க்காலம், மரணம், அவசர நிகழ்வுகளில் நலம் விசாரித்து ஆதரவளிக்க வேண்டும்.விருந்துக்கு அழைக்கும் போது கலந்து கொள்ளவேண்டும். முக்கிய நிகழ்ச்சிகளில் மரியாதை அழைப்புக் கொடுக்க வேண்டும். வீட்டில் சமைத்த நல்லதை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது நல்ல நட்பிற்கு உதவும். உதவி கேட்டால், முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும்.
மரியாதை, நேர்மை, அன்பு, சிரித்த முகம், இனிமையான சொற்கள் உறவைப் பாதுகாக்க உதவும். அவர்களது தனிப்பட்ட விஷயங்களில் கவனமுடன், எல்லையை மீறாமல் பழக வேண்டும். அவர்களுக்கு வெறுப்பான அல்லது விருப்பமில்லாத செயல்கள் செய்யாமல் கண்ணியமுடன் நட்பு பாராட்ட வேண்டும்.
நல்ல உறவுக்கான முக்கியமான மனநிலைகள் இனம், மதம், மொழி என வேறுபாடு பாராமல் அன்பும் கரிசனையும் காட்ட வேண்டும். மலிவான பொருட்களைக் கொடுக்காமல், தரமானதைப் பகிர்ந்து கொள்வது சிறப்பு. நேசத்துடன், இனிமையாகப் பழக வேண்டும்.
இவற்றைக் கடைப்பிடித்து அண்டை வீட்டாருடன் நலம், நட்பு, ஒற்றுமை, அமைதியைத் தர வேண்டும், பெற வேண்டும்.