மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அண்டை வீட்டார் அன்றும் இன்றும் என்றும்
மௌலவி வி.எஸ்.முஹம்மது முஸம்மில் அல்புகாரி, நவம்பர் 16-30, 2025


மனித உறவுகள் மகத்தானவை. நம் குடும்பம், இரத்த உறவுகள் தாண்டி நம் வாழ்வுப் பயணத்தில் வழித்துணை மனிதர்களாக அறிமுகமாகி வரும் சிலர் ஆழமான உறவையும் மறக்கவியலா  அனுபவத்தையும் தந்து விடுவார்கள். அவர்களில் ஒரு பந்தம்தான் நம் அண்டை வீட்டினர்.

நம்மோடு இறுதி வரை உறவாடும் அண்டை வீட்டினர் உறவை ஒரு மனிதனுக்கு இறைவனால் வழங்கப்படும் ஆகச்சிறந்த  அருட்கொடைகளில் ஒன்றாக நல்ல மனைவி, நல்ல வாகனம் அடுத்ததாக நல்ல அண்டை வீட்டினராக இணைத்துச் சொன்னார்கள் அண்ணல் நபிகளார்(ஸல்) அவர்கள்.

காலையில் எழுந்ததும் அண்டை வீட்டினர் முகத்தில் தான் நம் கண் விழிக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் அவசரத்திற்கு உப்பு இல்லை என்றாலும், நடுநிசி நேரத்தில் அவசர மருத்துவ உதவி ஆனாலும் நாம் தட்ட வேண்டியது நம் வீட்டின் அருகிலுள்ள வீட்டின் வாசல் கதவைத்தான். நாம் உணவையும் உறவையும் பரிமாறிக் கொள்ளும் அண்டை வீடுகளில்தான் நாம் வெளியூர் செல்லும் போது நம் வீட்டின் திறவுகோலைப் பத்திரமாகக் கொடுத்து விட்டுச் செல்கிறோம்.

ஒரு நாள் நம் பிரேதத்தைக் குளிப்பாட்டி, கபனிடும் கைகள், ஜனாசாவைச் சுமந்து செல்லும் தோள்கள் அவர்களுடையதாகவும் இருக்கலாம். இவ்வாறாக நம் வாழ்வின் எல்லை வரை அண்டை வீட்டினருடன் கொண்டிருக்கும் உறவு நீடித்திருக்கக் கூடிய உறவாகும். அண்டை வீட்டினருடன் உறவு பாராட்டும் நடைமுறை இன்றைய காலத்தில் அரிதாகி வருகிறது. நம் இளம் தலைமுறையினருக்குச் சில உறவு முறைகளின் பெயரே தெரியவில்லை என்றால் அண்டை வீட்டாருடன் உறவு முறை பற்றிச் சொல்லவா வேண்டும்?.

அலைப்பேசி பெருகிவிட்ட காலத்தில் அண்டை வீட்டினர் அருகில் இருந்தும் தூரமானவர்களாகி விட்டார்கள். இப்போதெல்லாம் சிலர் வீதியில் பேசிக் கொண்டு நடப்பதில்லை. குனிந்து கொண்டே அலைப்பேசியைப் பார்த்துக் கொண்டே தான் நடக்கிறார்கள். நகர்புறங்களில் இப்படி என்றால் சென்னை போன்ற பெருநகரங்களில் அண்டை வீட்டினர் யார் என்றே தெரியாத தீப்பெட்டி கட்டிடவாசிகள் அண்டை வீட்டினருடன் கொண்டிருக்கும் உறவு முறைகளைப் பற்றி நாம் யூகித்துக் கொள்ளலாம்.

எங்களது கடையநல்லூர் போன்ற இஸ்லõமிய ஊர்களில் திருமணம் போன்ற வைபவங்களில் திருமண வீட்டின் அருகில் உள்ள வீடுகளில் வைத்து உணவை இரண்டு பேர் சேர்ந்து உண்ணும் ‘தாலாவில்’(தட்டில்) பரிமாறுவார்கள். திருமண வீட்டின் விருந்து உபசரிப்பில் ‘கலம்’ என அழைக்கப்படும் தாலாவில் வட்டாரவாசிகளே பரிமாறுவார்கள். திருமண விருந்தின் சுகந்தம் மண வீட்டைத் தாண்டி வட்டாரம் எங்கும் பரவி எல்லோருடைய வீட்டிலும் மணக்கோலம் பூக்கும்.

ஆனால் இன்று அந்த பாரம்பரிய நடைமுறை மாறி திருமண மண்டபங்களில் பரிமõறப்படும் டேபிள் கலாச்சாரம் தொற்றிவிட்டது. மணவிழாவிற்கு அழைத்து விருந்தாளிகளை நடுத்தெருவில் வைத்தா கவனிப்பது? அதிலும் கொடுமை டேபிளில் உணவு உண்பதற்குப் பின்னால் நம் தவணைக்கு நாம் நின்று கொண்டிருக்க வேண்டும். நாம் சாப்பிடும் போதும் பின்னால் ஒருவர் நின்று கொண்டே காத்துக் கொண்டிருப்பார். உணவோடு சேர்த்து அன்பையும் பரிமாறும் உறவுகள் பரிமாறிய காலம் போய் இன்று சிறுவர்கள்  பரிமாற  பணியமர்த்தப்படுகிறார்கள்.

திருமண வீட்டினரும் விருந்தினர்களைக் கவனிக்கும் பாதி வேலை குறைந்து விடுகிறது  என்பதால்  தெருப்பந்திகளையே விரும்புகின்றனர். வட்டாரத்தில் பாதி வீடுகளுடன் சண்டையிட்டு பேசாமல் உறவை முறிப்பவர்களுக்கு இந்த முறை வசதியாகிப் போய் விடுகிறது.

திருமணம் என்றாலும் வீட்டில் ஓர் இழப்பு என்றாலும் முதல் ஆளாக உறுதுணையாக இருக்கக் கூடியவர்கள் நம் அண்டை வீட்டினரே! இவ்வாறாக நாம் வாழ்வின் அனைத்து நல்லது கெட்டதுகளிலும் முன் நின்று நமக்கு உதவும் அண்டை வீட்டினர் உரிமைகளைப் பேண வேண்டிய விஷயத்தில் இஸ்லாம் பல உரிமைகளையும் கடமைகளையும் நமக்குச் சொல்லித் தருகிறது.

‘எவர் இறைவனின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப் படுத்தட்டும்’  என  நபி(ஸல்)  அவர்கள் கூறியபோது, ‘இறைவனின் தூதரே, அண்டை வீட்டாருக்குச் செலுத்த வேண்டிய கடமைகள் யாவை?’ என நபித்தோழர்கள் வினவினர். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ‘உங்களிடம் அவர் ஏதேனும் கேட்டால், அவருக்கு அதைக் கொடுங்கள்; அவர் உதவி தேடினால், அவருக்கு உதவுங்கள்; அவர் தம் தேவைக்குக் கடன் கேட்டால், அவருக்குக் கடன் கொடுங்கள்; அவர் உங்களை விருந்துக்கு அழைத்தால், அவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் நோயுற்றால், அவரை நலம் விசாரியுங்கள்; அவர் இறந்துவிட்டால், அவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள்.

அவருக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், அவருக்கு ஆறுதல் கூறுங்கள்; தனது வீட்டில் சமைத்த இறைச்சியின் வாசனை யின் மூலம் அவருக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம்.  (ஏனெனில்  வறுமையின் காரணமாக அவருக்கு இறைச்சி சமைக்கும் வாய்ப்புக்  கிடைக்காமல்  இருக்கலாம்) ஆயினும், அதிலிருந்து சிறிதளவு அவரின் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்; அவரின் அனுமதியின்றி உங்கள் வீட்டை உயர்த்தி, அவரின் வீட்டிற்கு காற்று வராதபடிக் கட்டாதீர்கள்’ எனக் கூறினார்கள்’.

அண்டை வீட்டினர் விஷயத்தில் இஸ்லாம் எந்த அளவிற்கு வழிகாட்டுதல்கள் வழங்கி இருக்கிறது என்பதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழியில் நாம் புரிந்து கொள்ளலாம்.

எது அண்டை வீடு?

அண்டை வீடுகள் என்று வரும் போது அடுத்த வீடு, எதிர் வீடு, பின் வீடு யாவும் அடங்கும். ‘இந்த உரிமை எது வரைக்கும்?’ என இமாம் ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘முன் பக்கமாக 40 வீடுகளும், பின்பக்கமாக 40 வீடுகளும், வலதுபுறம் 40 வீடுகளும், இடதுபுறம் 40 வீடுகளும் அண்டை வீடுகளின் உரிமையில் வரும்’ என்று பதில் கூறினார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்: ‘இறைத்தூதர் அவர்களே, எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகளார் ‘இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு’ என்றார்கள். (புகாரி)

முஸ்லிம்  தனது  அருகிலிருக்கும் முஸ்லிம் அண்டை வீட்டினருக்கு உபகாரம் செய்வதுடன் தனது உபகாரத்தை நிறுத்திக் கொள்ளாமல் முஸ்லிமல்லாத அண்டை வீட்டினருக்கும்  அதை  விரிவுபடுத்த வேண்டும். ஏனெனில், இறை மார்க்கத்தின் மாண்புகள் ஏற்றத் தாழ்வுகள் அற்றது. அது மத, இன, ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி உலகின் அனைவரையும் தனது நற்செயல்களால் சூழ்ந்து கொள்ளும் நற்பண்புகளைப் போதிக்கிறது.

அண்டை வீட்டினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

நல்லதை ஏவி தீமையைத் தடுத்தல்.

அவர்களுடன் நட்புறவாடலைத் தொடர்வது.

அவர்கள் நோயுற்றவர்களாக இருந்தால் மருத்துவத்திற்கு உதவி செய்தல்.

பொருளாதாரத் தேவை உடையவர்களாக இருந்தால் கடன் கொடுத்து உதவுதல்.

அவர்கள் உங்களிடம் கொடுத்த அமானி தங்களையும்  இரகசியங்களையும் பேணிப் பாதுகாத்தல்.

விருந்து  உபச்சாரத்தில்  அவர்களைக் கலந்து கொள்ளச் செய்தல்.

அவர்கள் ஏழைகளாக இருப்பின் ஜகாத் ஸதக்கா போன்ற தர்மங்கள் அளிப்பதில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்தல்.

தவிர்ந்து இருக்க வேண்டியவை

அண்டை வீட்டினருக்குத் தொல்லை தருதல்.

இறைவனின் மீது ஆணை, அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்’ என நபி(ஸல்) அவர்கள்  மூன்று  முறை  கூறினார்கள். ‘அவன் யார்?’ என்று நபிகளாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) ‘எவனது நாச வேலைகளிலிருந்து  அவனது  அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில் லையோ அவன் தான்’ என்று பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஷûரைஹ்(ரலி), புகாரி)

‘நான் நல்லது செய்துவிட்டேன், அல்லது கெடுதல் புரிந்துவிட்டேன் என்று நான் அறிந்து கொள்வது எப்படி?’ என ஒரு மனிதர் நபிகளாரிடம் கேட்டார். அதற்கு நபி(ஸல்) ‘நீ நல்லது செய்துவிட்டாய் என்று உனது அண்டை வீட்டாரிடம் கேள்விப்பட்டால், நீ நல்லது செய்துவிட்டாய். நீ கெடுதல் செய்து விட்டாய் என்று உனது அண்டை வீட்டாரிடம் கேள்விப்பட்டால், நீ கெடுதல் செய்து விட்டாய்’ என்றார்கள்’. (நூல்: அஹ்மது)

அண்டை வீட்டாருக்கு நோவினை தரும் விஷயங்கள்

இருவருக்கும்  பொதுவான  சுவரில் கட்டை, ஆணி, கம்பி போன்றவற்றை அடிப்பது.

அண்டை வீட்டாருக்குக் காற்று, சூரிய வெளிச்சம் தடையாகும் விதத்தில் அவர்களது அனுமதியின்றி தமது வீட்டை உயரமாகக் கட்டிக் கொள்வது.

அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சப்தங்களை அதிகரித்து கதவுகளைத் தட்டுவது; குறிப்பாக இரவு நேரங்களில் அவர்களைத் தூங்கவிடாமல் சப்தமிட்டு பேசுவது. டி.வி ஒலிபெருக்கியைச் சப்தமாக வைப்பது.

குப்பைகளை அவர்களது வீட்டின் பக்கம் ஒதுக்குவது.

அவர்களுக்குச் சொந்தமான பொருள்களை  அவர்கள்  அனுமதி  இன்றி எடுப்பது.

கடன் வாங்கினால் கொடுக்காமல் காலம் கடத்துவது.

பகரமாக வாங்கிய பொருளைத் திருப்பிக் கொடுக்கின்ற  பொழுது  குறைத்துக் கொடுப்பது.

அவர்களது குடும்ப விவகாரங்களில் தலையிடுவது; அது பற்றி பிற வீடுகளில் புறம் பேசுவது.

அவர்களது வீடுகளில் திருடுவது.

அவர்களது குடும்பப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது.

சொல்லாலும் செயலாலும் அவர்கள் மனம் புண்படும்படி நடப்பது.

அவர்களிடம் சண்டையிட்டு பகைமை பாராட்டுவது.

போன்ற விஷயங்களைத் தவிர்த்து இருப்பதன் மூலம் நாம் அண்டை வீட்டாருடன் நல்ல தொடர்பை மேற்கொள்ளலாம்.

நாம் வசிக்கும் நமது பகுதிகளில் நாம் என்னவாக இருக்கின்றோம்? சமூக பொதுக் காரியங்களில் பங்கேற்கின்றோமா? அல்லது நம்மோடு வசிப்பவர்களுக்குத் தீங்கு விளை விக்கிகின்றோமா? அல்லது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றோமா என்பதை வைத்துத்தான் நாம் அவர்களுடைய மனதில் நிலைத்து நிற்கின்றோம்.

சிறந்த  அண்டை  வீட்டினர்  யார் என்றால் நமது வெற்றிடம் அவர்களை வெறுமையடையச் செய்ய வேண்டும். நம்மோடு இருப்பதே அவர்கள் எப்போதும் விரும்ப வேண்டும். அண்ணல் நபிகளாரின் ஆருயிர் தோழர் அபூபக்கர்(ரலி) மிகச் சிறந்த பண்புகளால் எல்லோராலும் விரும்பக்கூடிய மனிதராக இருந்தார்.

அபூபக்கர்(ரலி) அவர்கள் தாயகம் துறந்து அபிசீனியாவை நோக்கிச் சென்றார்கள். பர்குல் ஃகிமாத் எனும் இடத்தை அடைந்த போது அப்பகுதியின் தலைவர் இப்னு தகினா என்பவர் அபூபக்கர் அவர்களைச் சந்தித்தார். அவர் அபூபக்கரிடம் ‘எங்கே செல்கிறீர்?’ என்று கேட்டார். அபூபக்கர்(ரலி) அவர்கள் ‘இறை மார்க்கத்தை ஏற்றதால் குறைஷிகள் என்னை மக்காவை விட்டு வெளியேற்றி விட்டனர். எனவே அபிசீனியா நோக்கி பயணம் செல்கிறேன்’ என்று கூறினார்கள்.

அதற்கு இப்னு தகினா ‘உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது. வெளியேற் றப்படவும் கூடாது. ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கின்றீர். உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்றீர். பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கின்றீர். விருந்தினர்களை  உபசரிக்கின்றீர்.  துன்பமுற்றவர்களுக்கு உதவுகின்றீர். எனவே நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன். ஆகவே திரும்பி உமது ஊருக்குச் சென்று உமது இறைவனை வணங்குவீராக’ என்று கூறினார்.

இப்னு தகினா தம்முடன் அபூபக்கர்(ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு குறைஷி பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம் அபூபக்கரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது. வெளியேற்றப்படவும் கூடாது. ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற, விருந்தினரை உபசரிக்கின்ற, பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கின்ற,  துன்பப்படுபவர்களுக்கு உதவுகின்ற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா? என்று கேட்டார். ஆகவே குறைஷியர் இப்னு தகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூபக்கர்(ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர்.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் நாம் நம்முடைய வட்டாரத்தில் இருந்து வெளியேறி வேறு இடத்திற்குக் குடியேறச் சென்றால் நம்மை நம் அழகிய பண்புகளால் கவரப்பட்டு சமுதாயத் தொண்டினால் பயன டைந்து நீங்கள் எங்களை விட்டுச் செல்லாதீர்கள் என்று தடுத்து நிறுத்தக்கூடிய அளவிற்கு உண்டான சிந்தனையை நாம் விதைத்துள்ளோமா? நம் மறைவிற்குக் கண்ணீர் சிந்தும் கண்ணீர்த் துளிகளை நாம் சேமித்து வைத்துள்ளோமா?

நம் வீடுகளைத் தாண்டியும் நாம் சுமக்க வேண்டிய பொறுப்புகள் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம்  இருக்கின்றது.  அவர்களுடன் நல்லுறவைப் பேணுவது அவசியம் தேவை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் தான் நமக்கான சுவனத்தின் துருப்புச் சீட்டுகள்..!

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்