மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இலட்சியப் பயணத்தில்..!
சை.ஜாபர் சித்திக், 1-15 டிசம்பர் 2025


நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவிய பின்னர் ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. அது மக்கத்துக் குறைஷிகளோடு இணைந்து பனூ முஸ்தலிக் சமூகத்தார் மதீனா நகரின் மீது போர் தொடுக்க இருப்ப தாகக் கிடைத்த தகவல்.
இப்பிரதேசம் ஏடனையும் ஜெருசலேமையும் இணைக்கும் நறுமணச் சாலையின் நடுவடத்தில் அமைந்துள்ளது. பனூ முஸ்தலிக் சமூகத்தார் வாழ்விடம் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையே உள்ள முரைஸீ எனும் பகுதியாகும்.

மதீனாவிலிருந்து இஸ்லாமியப் படை நபி(ஸல்) அவர்களின் தலைமையை ஏற்று வருவதை அறிந்த பனூ முஸ்தலிக் கோத்திரத்தார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அம்பு எறிதல் என சிறிய அளவிலேயே இந்தப் போர் முடிந்தது, பெரிதாக எந்த பாதிப்பும் யாருக்கும் இல்லை. இஸ்லாமிய அரசுக்கு அரசியல் ரீதியிலான வெற்றியாக அமைந்தது.

பனூ  முஸ்தலிக்  வாழ்விடத்தில் அல்லது அங்கிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு நீர் நிலையில் இஸ்லாமியப் படை முகாமிட்ட போது, நீர் அருந்து வதில் ஏற்பட்ட சிறு தகராறில் மதீனாவாசிகளான அன்சாரிகளில் ஒருவருக்கும் மக்காவாசியான முஹாஜிர்களில் ஒருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது மதீனாவாசியான அவர் ‘ஓ அன்சாரிகளே..!’ என உரக்க அழைத்தார். பதிலுக்கு  மக்காவாசிகள்  ஒருவர்  ‘ஓ முஹாஜிர்களே..!’ என அழைத்தார்.

இச்செய்தியை  அறிந்த  நபி(ஸல்) அவர்கள் ‘அறியாமைக் கால அழைப்பை விடுப்பது ஏன்? மீண்டும் கற்காலத்திற்குச் செல்ல விரும்பவதேன்?’ எனக் கடிந்து கொண்டார்கள்.   குழப்பமான சூழலை அறிந்து கொண்ட நபிகளார் உடனடியாக இங்கிருந்து அனைவரும் பயணத்தைத்  தொடர்வோம்  என்று அறிவிப்பும் செய்தார்கள்.

இங்கே ஒரு செய்தியை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். மதீனாவாசியான முஸ்லிம்களுக்கு  ‘அன்சாரிகள்’  என்றும் புலம்öபயர்ந்து  வந்த  மக்காவாசியான முஸ்லிம்களுக்கு ‘முஹாஜிர்கள்’ என்றும் இறைவன்தான் பெயரை சூட்டினான்.
(புகாரி 3776)

இறைவன்  சூட்டிய  பெயர்களைக் கொண்டு முஹாஜிர்களும் அன்சாரிகளும் தங்களுடைய  கூட்டத்தாரை  உதவிக்கு அழைத்தார்கள். இதைத் தவிர வேறொன்றும் இழி சொல்லும் பழிச் சொல்லும் கூவி ஒருவரையொருவர்  அழைக்கவில்லை.ஆனால் இறைத்தூதர் அவர்களோ இது அறி யõமைக் கால அழைப்பு என்று சொன்ன தன்  காரணம்  அவர்கள்  அழைத்ததன் நோக்கம் தவறானது. ஒற்றுமையை, கட்டமைப்பை உருக்குலைக்கும் செயல். எதையும் ஆராயாமல் பிரச்னையைச் சீராக்க முயற்சி செய்யாமல் தம்முடைய சமூகத்தை அழைப்பது அஞ்ஞான கால அழைப்பாகவே நபிகளார்(ஸல்) கருதினார்கள்.

அவ்விடத்தை விட்டுச் சற்றும் தாமதிக்காமல் விரைவாக தங்களுடைய பயணத்தைத் தொடங்கினார்கள். வழக்கம்போல் ஓய்வெடுக்கும் நேரத்தில் கூட ஓய்வெடுக்காமல் பயணம்  தொடர்ந்தது.  தொழுகைக்கான நேரத்தில் மாத்திரம் தொழுகையை நிறைவேற்றிவிட்டு மீண்டும் பயணம் தொடர்ந்தது. யாருக்கும் கூடாரம் அமைக்கவும் ஓய்வு எடுக்கவும்  அனுமதி  கொடுக்கவில்லை. இரவும் பகலும் என பயணம் நீண்டு கொண்டே போனது. அப்பயணத்தில் நாம் ஏன் வீண் சச்சரவில் ஈடுபட்டோம் ஓய்விலா இத்தொடர் பயணத்தில் உடல் சோர்ந்து மயங்கி விழும் சூழலுக்கு ஆளானோம் என்று தவறிழைத்த தோழர்கள் வருந்தும் நிலை ஏற்பட்டது.

ஓய்வெடுக்க  அனுமதித்தால்  இரு தரப்புகளுக்கும் இடையே வாக்குவாதம் நிகழும், மீண்டும் பிரச்னை தொடங்க வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் பிரச்னையில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் பட்சத்தில் எல்லோருக்கும் சேர்ந்து இந்த தொடர் பயணம் உளவியல் ரீதியிலும் தண்டனையாக அமைந்தது.

அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் கழுத்து மாலை காணாமல் போனதும் பின்னர் அவர்களின் பயணம் பின்தங்கிப் போனதும் அவர்கள் குறித்த அவதூறுச் செய்தி மதீனா நகர் முழுவதும் பரவக் காரணமாக அமைந்ததும் இந்தப் போர்க்களப் பயணம் தான். சமுதாயம் ஓர் உன்னதமான வேலைத் திட்டத்தை நோக்கிப் பயணிக்கும் போது அல்லது முக்கியமான செயலில் ஈடுபடும்போது அதை விட்டும் திசை திருப்பும் சிறு சிறு பிரச்னைகளை அற்ப காரணங்களுக்கு முகம் கொடுப்பது நம்முடைய நோக்கத்தையும் பயணத்தையும் பாதிக்கும் என்பதற்கு மிக முக்கிய எடுத்துக்காட்டு இந்த பனூ முஸ்தலிக் யுத்த களம்.

பனூ முஸ்தலிக் போர் மிகப்பெரும் வெற்றியாகக் கருதப்பட்டாலும் அங்கே நடைபெற்ற அசம்பாவித பிரிவினைகளும் குழப்பங்களும் அதனால் ஏற்பட்ட அவதூறுகளும் முன்னே நிறுத்தப்பட்டு வரலாற்றில் மாறாத வடுவாக நிலைத்து நின்று விட்டது. ஆகவே இந்தச் சமுதாயத்தின் இலட்சியப் பாதையில் அற்ப காரணிகள் எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பயணிப்போம்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்