நமக்குத் தொலை தூரமான மௌரிட்டானியாவின் ஸஹேல் பாலைவனத்தில் இருக்கும் ஓர் அமைதியான கிராமம் டாலி கூம்பே.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அக்கிராமத்தில் வியப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
அங்கு வசித்த ஒரு பெண்ணுக்கு, ஆண் குழந்தை ஒன்று பார்வை இல்லாமல் பிறந்தது. அன்று முதல் இன்று வரை, அவரின் சந்ததியினர் கண்பார்வை அற்றவர்களாகவே பிறந்து வருகிறார்கள். இவ்வாறாக அக்கிராமத்தில் இன்றளவிலும், அதிகமான மக்கள் பார்வை இல்லாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஏன் இப்படி ஒரு குறைபாடு என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அது குறையா அல்லது ஒரு வகையான வாய்ப்பா என்று யோசிக்கும் வகையில் அவர்களின் நடப்பும் வாழ்வும் நம்மை வியப்படையச் செய்கிறது.
ஆம்! நவீன உலகின் வாசனையும் வசதிகளும் துளியும் அக்கிராமத்தில் இல்லை.
இருப்பினும் அக்கிராமத்தில் ஐவேளையும் தொழுகைக்கான அழைப்புச் சத்தம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. காலையிலும் மாலையிலும் டாலி கூம்பே கிராம மக்கள் இறைவனை திக்ர் செய்த வண்ணமாக இருக்கிறார்கள். குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் கல், மரப் பலகைகளில் செதுக்கி சிறு குழந்தைகளுக்கும் கற்பித்து மனனம் செய்யவும் வைக்கிறார்கள் பார்வையற்ற அம்மக்கள்.
நவீனம் இல்லாத பூமியின் இந்தப் பகுதியில் கூட இறை வசனங்கள் இவ்வாறு பாதுகாக்கப்படுவதை நினைத்து வியப்பதா அல்லது பார்வை இன்றியும் மார்க்கத்தைக் கடைப்பிடித்துக் கல்வியையும் போதிக்கும் இம்மக்களின் ஈமானை நினைத்து வியப்பதா என்று தெரியவில்லை.
இம்மக்கள், 1450 ஆண்டுகளுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களின் சபையில் நடந்த ஒரு சம்பவத்தையும் ஒரு சில குர்ஆன் வசனங்களையும் கூட நினைவூட்டுகிறார்கள். பார்வையற்ற நபித்தோழரை நபி(ஸல்) அவர்கள் கடுகடுத்த சம்பவமும் பின் ஜிப்ரீல்(அலை) மூலமாக இறைவன் இறக்கிய குர்ஆன் வசனங்களும் தான் அவை.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் முக்கியமான குறைஷித் தலைவர்களிடம் இஸ்லாத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபொழுது, பார்வையற்ற ஒருவர் ஆர்வமாக நபியிடம் சென்று தனக்கு குர்ஆன் வசனங்களை விளக்குமாறு இடையில் பேசி கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அவரைக் கண்டுக்கொள்ளாமல் நபி(ஸல்) அவர்கள் குறைஷித் தலைவர்களுடன் தொடர்ந்து உரையாட முற்பட்டபோது, ஜிப்ரீல் (அலை) மூலம் இறைவன், ‘அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார். அவரிடம் அந்த பார்வை அற்றவர் வந்தபோது, (நபியே! உம்மிடம் வந்த) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?’ என்று தொடங்கும் 80ஆம் அத்தியாயத்தின் வசனங்களை இறக்கியருளினான்.
குறைஷித் தலைவர்களைக் காட்டிலும் பார்வையற்ற நபித்தோழர் இறைவனின் பார்øவயில் எந்த அளவுக்கு மேலானவராக இருந்திருந்தால் உடனே இறைவன் வானங்களில் இருந்து ஜிப்ரீல்(அலை) அவர்களை இறக்கி நபிக்கு காலத்திற்கும் அழியாத இவ்வசனங்களை அறிவித்திருப்பான் என்று நாம் சிந்திக்க வேண்டும்.
இப்பொழுது கூறுங்கள், நிஜத்தில் இந்த டாலி கூம்பே கிராம மக்கள் பார்வையற்றவர்களா அல்லது இறைவனின் வேத வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் மறந்து கொண்டும் வாழும் நாமா?