மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

நாட்டு நடப்பும், நாட்டு வெடிகுண்டும்!
அமீன், அக்டோபர் 16-31, 2024


 


2024 அக்டோபர் 8ஆம் நாள் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 9 மாத குழந்தை உட்பட மூன்றுபேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர். அருகிலுள்ள வீடுகள் பெரும் சேதமடைந்தன. சுற்றிலும் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரை ஓடுகள் சிதறின, சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.


இந்த விபத்துக்குக் காரணமான திருப்பூர் பாண்டியன் நகர் சத்யா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் அவரது உறவினர் சரவணகுமார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அன்றாடச் செய்திகளில் ஒரு செய்தியாக ‘திருவிழாவிற்குப் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து குழந்தை உட்பட மூவர் பலி’ என்ற அளவிலேயே ஊடகங்களில் இடம்பெற்றிருந்தது.


கார்த்திக் யார்? சட்ட விரோதமாக அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப் படுகிறது என்று சொன்னால் காவல்துறைக்கு இது ஏன் தெரியாமல் இருந்தது? அந்தளவுதானா காவல்துறையின் செயல்பாடு இருக்கிறது? பட்டாசு தயாரிக்க இவ்வளவு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்க வேண்டுமா? பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் முறையாக அனுமதி பெற்றுச் செய்ய வேண்டியதை குடியிருப்புப் பகுதியில் சட்ட விரோதமாகச் செய்தது ஏன்? வெடிகுண்டுகள் சட்ட விரோதமாகத் தயாரிக்கப்படுகின்றன என்றால் சட்ட விரோதமாக இதனை வாங்குபவர்கள் யார்? இந்த வெடிகுண்டுகள் யாருக்காகத் தயாரிக்கப்படுகின்றன? எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன? இதன் பின்னணியில் இயங்கும்b திட்டம் என்ன? என்பன குறித்த கேள்விகள் இங்கு எழவில்லை. காரணம் இதில் ஒரு முஸ்லிம் தொடர்பு கொள்ளவில்லை என்பது தான்.


கார்த்திக்கிற்குப் பதில் ஒரு முஸ்லிம் இருந்திருந்தால் நாட்டு வெடிகுண்டு என்பது நாட்டைத் தகர்க்க பயங்கர வெடிகுண்டுத் தயாரிப்பு என்று பேசப்பட்டிருக்கும். ஐஎஸ், முஜாஹிதீன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என இந்தச் செய்தி சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும். பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி யாக வெளியாகி ஊடகங்களில் பல்வேறு விவாத அரங்குகள் நடத்தப்பட்டிருக்கும். சிபிஐ, என்ஐஏ என தமிழ்நாடு முழுவதும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும்.
தவறு யார் செய்தாலும் தவறுதான். தண்டனை எல்லாருக்கும் ஒன்றுதான் என்ற நிலையிலிருந்து இதுபோன்ற விவகாரங்களை ஊடகங்களும், காவல்துறையும், அரசும் அணுக வேண்டும். திருப்பூர் நிகழ்வை நாட்டு வெடிகுண்டு எனக் கடந்து விடாமல் இதற்கான காரணம் ஆய்வு செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை குற்றவாளிகளிடமிருந்து பெற்று அரசு அதிகப்படுத்திக் கொடுக்க வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்