மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் மகத்தான தீர்ப்பு
அமீன், நவம்பர் 16- 30, 2024


 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியின்போது ‘உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியச் சட்டம் 2004’ கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் உ.பி.மாநிலம் முழுவதும் 16,000 மதரஸாக்களில் 17 இலட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இச்சட்டத்தை எதிர்த்து அன்ஷûமன் சிங் ரத்தோர் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததையடுத்து, ‘உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. இச்சட்டம் மதச்சார்பின்மையை மீறும் வகையில் உள்ளது. எனவே இங்கு பயிலும் மாணவர்களை முறையான பள்ளிக் கல்வி முறைக்கு மாற்றவேண்டும்’ என்று மார்ச் 22ஆம் தேதி மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மதரஸா, பள்ளி ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு மதரஸாக்களை மூடச் சொன்ன அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து 2024 நவம்பர் 5ஆம் நாள் தீர்ப்பு வழங்கியது.

‘மதரஸா கல்வி வாரியத்தின் நோக்கம், தேவையில் தவறு எதுவும் இல்லை. இது மதச்சார்பின்மையை மீறுகிறது என்ற உயர் நீதிமன்றத்தின் பார்வை தவறானது. மதரஸா கல்வி அரசமைப்புச் சட்டத்தின் 21அ, 25ஆவது பிரிவுகளுக்கு உட்பட்டது. பிரிவு 30 மதம் அல்லது மொழி அடிப்படையிலான அனைத்து சிறுபான்மையினருக்கும் அவர்கள் விருப்பப்படி கல்வி நிறுவனத்தைத் தொடங்கி நிர்வகிக்கும் உரிமையை வழங்குகிறது. சிறுபான்மையினரின் இந்த உரிமையைப் பாது காப்பதும், இத்தகைய கல்வி நிறுவனங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதும் மாநில அரசின் கடமை.பட்டப் படிப்புகளை முறைப்படுத்தும் அதிகாரம் பல்கலைக்கழக மானிய(க்எஇ) குழுவுக்கு உள்ள நிலையில் மதரஸாக்களில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என்பது மாநில சட்டப்பேரவையின் சட்டம் இயற்றும் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாகும். எனவே மதரஸா கல்வி வாரியச் சட்டம் 2004 செல்லும்’ என்று தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பு வரவேற்புக்கு உரியது. இத் தீர்ப்பின் மூலம் 17 இலட்சம் மாணவர்களின் கல்வி பாதுகாக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகங்களின் கல்வி உரிமைகளை உறுதிப்படுத்துவதில் இத்தீர்ப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. மதரஸா மாணவர்களின் கல்வி உரிமையையும், சிறுபான்மையினரின் கல்வி நிலையங்களைப் பாதுகாக்கும் அரசியல் கொள்கைகளையும் இத்தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. மதரஸா கல்வியுடன் பொதுக் கல்வி வழங்குவதற்கும், சமூகத்தில் பங்குகொள்வதற்கு வகை செய்வதற்கும் மாநில அரசுக்கு பொறுப்பு உள்ளது. மதரஸாக்களைத் தவறாகச் சித்திரித்து, மதரஸாக்களுக்கும் கல்வி உரிமை சட்டத்துக்கும் இடையே பிளவை உருவாக்க முயற்சிக்கும் சில அமைப்புகளின் தீய பரப்புரைக்கும் இத்தீர்ப்பு பதிலடி வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில் முறையாக விசாரித்து வழங்கப்பட்ட இதுபோன்ற தீர்ப்புகளினால்தான் நீதிபதி சந்திரசூட் தாம் எண்ணியவாறு வரலாற்றில் நினைவு கூரப்படுவாறே தவிர கடவுளிடம் கேட்டுப் பெற்ற பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்தும் சட்ட முரணான தீர்ப்பினால் அல்ல!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்