மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஆளுநர் வெளியேற வேண்டும்
அமீன், 2025 ஜனவரி 16 - 31


ஆளுநர் வெளியேற வேண்டும்

 

ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை இடம் பெற வேண்டும் என்பது மரபு. அரசமைப்பு விதி 176(1) இன் படி மாநில அரசு தயாரிக்கின்ற உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும். மாநில அரசின் உரையைக் கூடுதல், குறைவு செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. பொறுப்பேற்ற நாள் முதல் மாநில அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி ஒன்றிய அரசின் ஏவலாளாகவே செயல்பட்டு வருகிறார்.

2022 தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல் உரையை முழுமையாகப்படித்தார். 2023ஆம் ஆண்டில் உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களைத் தவிர்த்து விட்டு வாசித்தார். அரசு கொடுத்த உரையில் இருப்பது தான் அவையில் நிறைவேறும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட ஆளுநர் வெளியேறினார். 2024 ஆம் ஆண்டில் முதலிலேயே நாட்டுப்பண் இசைக்கப்படவில்லை என்று கூறி உரையை வாசிக்க மறுத்து அமர்ந்தார். சபாநாயகர் அப்பாவு உரையை வாசித்தார். இந்த ஆண்டு அதே காரணத்தைச் சொல்லி மூன்றே நிமிடத்தில் இடத்தைக் காலி செய்துவிட்டார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் அதனைத் தொடர்ந்து ஆளுநரின் உரையும், இறுதியில் நாட்டுப்பண் இசைப்பதும் ஆண்டாண்டு காலமாக சட்டப்பேரவையில் கடைப்பிடிக்கப்படும் மரபு. மாநில அரசின் உரிமையைக் குறை மதிப்பு செய்யும் வகையில் நாட்டுப்பண் இசைக்க வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்து வெளியேறியது பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.

ஆளுநரின் வெளிநடப்பை சிறுபிள்ளைத்தனமானது என்று விமர்சித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தனது அரசியல் கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?’ என்ற வினாவை எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை ஆர்.எஸ்.எஸின் கொள்கைப் பரப்புரையாளராகவே செயல்பட்டு வருகிறார். மதச்சார்பின்மை ஐரோப்பிய சித்தாந்தம், இந்தியாவிற்கு மதச்சார்பின்மை தேவையில்லை என்றார். திராவிடம் பிரிவினைச் சித்தாந்தம் என்று பேசினார். திருவள்ளுவர் ஆன்மிகவாதி என்றதுடன் வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசினார். போப் மிஷனரி, கார்ல் மார்க்ஸ் கோட்பாடு நாட்டு வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றார். தமிழ்நாடு அல்ல தமிழகம் தான் என்றார். சனாதன தர்மம் அழிவற்றது. அதை விமர்சிக்ககூடாது என்றார்.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் குறித்த மசோதாவில் தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்தார். தமிழ்நாடு உயர் கல்வித் துறையின்பங்களிப்பு இல்லாமலேயே பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினார். ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசினார். ஆன்லைன் ரம்மிக்குத் தடை, நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் மசோதா உள்ளிட்ட 14 மசோதாக்களைக் கிடப்பில் போட்டார். மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி முறையிட்டபோது ‘ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல, நியமிக்கப்பட்டவர்கள் மசோதாக்களைக் கிடப்பில் போட உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என்று உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளானார். ஆளுநர் ரவியின் மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை நீண்ட பட்டியலிடலாம்.

தமிழ்நாட்டு அரசுக்கு போட்டி அரசாங்கம் நடத்துவது போன்று ஆளுநர் ரவி செயல்பட்டாலும் ஆந்திர மாநில சட்டப்பேரவையில் ஆளுநரை அழைக்காமலேயே கூட்டம் நடத்தியது போல அல்லாமல் தமிழ்நாடு அரசு ஆளுநரை அழைத்து அவருக்கு உரிய மரியாதை வழங்கியபோதும் ஆளுநர் வெளிநடப்பு செய்தது முன்னரே திட்டமிடப்பட்ட செயல் வடிவமாகத்தான் பார்க்க முடிகிறது. இத்தனைக்கும் ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில்தான் சம்பளம் பெறுகிறார். நியமிக்கப்பட்ட ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிப்பது இந்திய ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.

ஆளுநரின் அலுவலகப் பணியாளர்களின் சம்பளத்திற்காக மட்டுமே 2021-2022ஆம் ஆண்டில் 1,60,79,000 ரூபாயைச் செலவிட்டிருக்கிறார்கள். ஆளுநர் இல்லச் செலவுகள் 13,91,19,000. ஆளுநர் மாளிகை தேநீர் விருந்துச் செலவு பல இலட்சங்கள். ஆளுநரின் செயலகத்திற்கு மட்டுமே ஓர் ஆண்டிற்கு 2 கோடியே 84 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒருநாள் செலவு 2,45,343 ஆண்டுக்கு 8 கோடியே 95 இலட்சத்து 50 ஆயிரம். மக்களின் வரிப்பணத்தைக் கோடி கோடியாய் செலவழித்து இப்படி ஒரு பதவியால் மாநில அரசு பெற்றது ஒன்றும் இல்லை. எனவே ஆட்டுக்குத் தாடியைப் போன்று நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றைப் பரிசீலிக்க வேண்டிய நேரம் இது. மாநில சுயாட்சி, மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் சட்டசபையிலிருந்து வெளியேறியதைப் போல தமிழ்நாட்டை விட்டே ஆளுநர் ரவி ஒரேயடியாக வெளியேற வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்