2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் என்று இஸ்ரேல் அறிவித்து போர் என்ற பெயரில் நடத்திய இன அழிப்பு வெறியாட்டம் 467 நாள்களுக்குப் பிறகு தற்காலிக மாக நிறுத்தப்பட்டுள்ளது. 2025 ஜனவரி 16ஆம் நாள் போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டாலும் போர் நிறுத்தத்திற்காகக் குறிக்கப்பட்ட 19ஆம் தேதி காலை வரை இரக்கமற்ற கொலைவெறித் தாக்குதலை இஸ்ரேல் நிகழ்த்தியது.
கடந்த 15 மாதத் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1139 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 47,107 ஃபலஸ்தீன பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1,11,747 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 70 விழுக்காடு பெண்களும் குழந்தைகளும்தான். லான்செட் இதழ் 41% கூடுதலாக மரணம் நடந்துள்ளது என மதிப்பிடுகிறது. இது வரை நடந்த உலக யுத்தத்தில் இந்தளவு குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டதில்லை. இன்குபேட்டரில் இருக்கும் குழந்தைகள், நோயாளிகள், ஐநா முகாம்களில் இருந்தவர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், வழிபாட்டுத் தலங்களில் இருந்தவர்கள் என அனைவரையும் கொன்று குவித்து இஸ்ரேல் ஆடிய கோர தாண்டவம் அருவருப்பானது. இந்த இன அழிப்புப் படுகொலையின் மூலம் இஸ்ரேலின் கோர முகத்தை உலகம் கண்டுள்ளது.
காஸாவின் 92% வீடுகளும், 88% கல்வி நிலையங்களும், 68% விளைநிலங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. 800 பள்ளிவாசல்களும் 4 பழமையான தேவாலயங்களும் தரைமட்டமாகின. 88 விழுக்காடு காஸா அழித்தொழிக்கப்பட்டது. உணவும், மருந்துகளும் தடைசெய்யப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பசியாலும், குளிராலும் மக்கள் செத்து மடிந்த போதும் உணவுக்குப் பதில் மணல் மூட்டைகளை அனுப்பியது இஸ்ரேல். இத்தனை பேரழிவுகளை நிகழ்த்திய பிறகுதான் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. முதல் கட்டம் முழுமைப்படுத்தப்பட்டால் அடுத்த இரு கட்டங்களும் இறுதி செய்யப்படும். முதல் கட்டம் 42 நாள்கள் நடைமுறையில் இருக்கும். அதன் படி இஸ்ரேல் இராணுவம் மத்திய காஸாவிலிருந்து படிப்படியாக வெளியேறும். காஸா மக்கள் மீண்டும் வடக்குக் காஸாவில் குடியேறலாம். காஸாவிற்கு ஒரு நாளைக்கு 600 டிரக்குகள் மூலம் உணவு, அத்தியாவசிய உதவிப் பொருள்கள் அனுமதிக்கப்படும்.
ஹமாஸ் 33 பணயக் கைதிகளை இரண்டு கட்டமாக விடுவிக்கும். ஃபலஸ்தீன ஆயுள் தண்டனைக் கைதிகள் 110 பேரையும், 1000 ஃபலஸ்தீன பொதுமக்களையும் இஸ்ரேல் விடுவிக்கும். ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக் கைதிக்கும் 33 ஃபலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும். 2023 அக்டோபர் 7க்கு பின்னர் கைது செய்யப்பட்ட ஃபலஸ்தீனப் பெண்களையும் 19 வயதுக்குக் குறைவான சிறார்களையும் இஸ்ரேல் விடுதலை செய்யும். உயிருடன் இருக்கும் அனைத்துப் பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின்னர் இறந்தவர்களின் உடல்களைப் பரிமாறிக் கொள்வது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும். இறுதியில் இஸ்ரேல் இராணுவம் காஸா விலிருந்து முழுவதுமாக வெளியேறும்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் போன்ற வல்லாதிக்க நாடுகள் ஆயுதங்களையும், பெரும் பணத்தையும் அள்ளிக் கொட்டினார்கள். இஸ்ரேல் தனது முழு பலத்தையும் காண்பித்தது. ஆனால் இஸ்ரேலால் ஹமாஸை அழிக்க முடியவில்லை. சல்லடை சல்லடையாகத் துளைத்தபோதும் இறுதிவரை ஹமாஸின் இருப்பிடத்தையும், பிணைக் கைதிகளின் இடத்தையும் இஸ்ரேலால் நெருங்கக் கூட இயலவில்லை. தமது தோல்வியை ஒப்புக் கொண்டு இஸ்ரேலின் இராணுவத் தலைவர் ஹெர்சி ஹலேவி(Herzi Halevi) தமது பதவியை இராஜினமா செய்தார். ‘இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) இஸ்ரேல் குடிமக்களைப் பாதுகாக்கும் பணியில் படுதோல்வி அடைந்து விட்டது. இந்த பயங்கரமான தோல்வியை ஒப்புக் கொள்கிறோம்’ என்று கூறி அவர் பதவியைத் துறந்துள்ளார்.
இஸ்ரேலும், அமெரிக்காவும் மிகப் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்டால் நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேல் தலைவர்கள் பிற நாடுகளுக்குச் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்திலிருந்து இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
‘இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அவர்களின் பலம் அதிகரித்துள்ளது’ என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன் கூறியுள்ளார். ஃபலஸ்தீனிற்கான ஆதரவு பன்மடங்கு பெருகியுள்ளது. ஃபலஸ்தீன் பக்கமுள்ள நியாயத்தை உலகம் புரிந்து கொண்டது. பிணைக் கைதிகள் விசயத்தில் ஹமாஸின் அழகிய அணுகுமுறையும் பாதுகாப்பும் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நீதிக்காகவும், வாய்மைக்காகவும் உலகம் முழுவதும் போராடும் அனைவருக்குமான நம்பிக்கையை ஹமாஸ் இன்று மீட்டுத் தந்துள்ளது. சத்தியம் சோதனைக்கு உள்ளாக்கப்படும். ஆனால் ஒருபோதும் தோற்காது என்ற நம்பிக்கைப் பாடத்தை ஹமாஸ் உலகிற்கு எடுத்தியம்பியுள்ளது. அசைக்க முடியாத இறைநம்பிக்கையும் அசாத்தியமான பொறுமையும் வெற்றிக்கான சூத்திரங்கள் என ஹமாஸ் நிரூபித்துள்ளது.
இப்போது போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் இது நிரந்தரமான போர் நிறுத்தத்திற்கு இட்டுச் செல்லுமா என்பதை வரும் காலம்தான் பதில் சொல்லும். இஸ்ரேல் எப்போதும் தமது வாக்குறுதியில் நிலைத்திருப்பதில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எந்த நேரத்திலும் எதையும் அறிவிக்கக் கூடியவர். நீண்ட நெடுங்காலமாக நடந்து வரும் இந்தப் போர் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டுமெனில் சுதந்திர ஃபலஸ்தீனம் அமைய வேண்டும். அது மட்டுமே இறுதித் தீர்வாக அமையும்.