பிப்ரவரி 15ஆம் தேதி உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் ‘தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காதது ஏன்?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை. பி.எம். ஸ்ரீ(PM Shri) பள்ளிகள் மட்டுமல்ல, பல்வேறு பிரச்னைகள் இதற்குக் காரணம்’ என்று கூறியது கடும் கண்டனத்திற்கும் எதிர்ப்புக்கும் உள்ளானது.
மாநில அரசிடமிருந்து வரும் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து நிதியை வழங்கும் ஒன்றிய அரசு நிதி தர மறுப்பதும், அதற்குக் கூறப்பட்ட காரணமும், சொல்லப்பட்ட விதமும் ஏற்புடையதல்ல. ஆணவத்தின் உச்சத்தில் நின்று பாஜக அரசு பதிலளித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் போக்கு எதேச்சதிகார மமதையையே காட்டுகின்றது.
‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாய மாக்குகிறது என்று கல்வி அமைச்சரால் கூற முடியுமா?’ என்று வினா எழுப்பிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசின் மிரட்டலுக்குத் தமிழ்நாடு பணியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
புதியக் கல்விக் கொள்கை இந்தியைத் திணிக்கிறது, குலக் கல்வியை ஆதரிக்கிறது, மூன்றாம், ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வை நடத்தக் கட்டாயப்படுத்துகிறது, தொழிற்கல்விக்கு வழி அமைக்கிறது என்பன போன்ற பல விமர்சனங்களை முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் புதிய தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி மாநில சுயாட்சியைப் பறிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்து வந்தாலும் இப்போது கல்வி ஒத்திசைவுப் பட்டியலில்தான் இருக்கின்றது. இச்சூழலில் ஒன்றிய அரசு மாநிலத்தைக் கட்டாயப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை. இந்த மிரட்டல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. தமிழைத் தாய்மொழியாகவும், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் கொண்டு இருமொழிக் கொள்கையுடன் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் கொடிகட்டிப் பறந்து வரும் சூழலில் மூன்றாவது ஒரு மொழியைத் திணிக்க முயல்வது மறைமுக இந்தித் திணிப்பை அது திட்டமிடுவதை யாவரும் அறிய முடியும்.
1960களிலிருந்து இந்தித் திணிப்பை எதிர்த்து காத்திரமாகப் போராடி வரும் தமிழ்நாட்டை மிரட்டிப் பணிய வைக்க ஒன்றிய அரசு முயல்வது அதற்கு அழிவையே தரும். அகில இந்திய அளவில் பள்ளிக் கல்வியிலிருந்து உயர் கல்விக்குச் செல்வோரின் விழுக்காட்டை அதிகரிப்பதாகச் சொல்லி அதற்கு முரணான மொழித் திணிப்பைக் கையிலெடுத்திருப்பது இடைநிற்றலுக்கே வழி வகுக்கும். மாணவர்களுக்குக் கல்விப் பாரம் அதிகரித்துள்ள சூழலில் மொழித் திணிப்பு இன்னும் பெரும் சுமையாகவே மாறும். ஒன்றிய அரசு மாநில சுயாட்சியைப் பறிக்கும் அடாவடித்தனத்தை நிறுத்த வேண்டும். மாநிலங்களுக்கான உரிமையை வழங்க வேண்டும். தேவைக்கேற்ப ஒரு மொழி விரும்பிக் கற்கப்படவேண்டுமே தவிர திணிப்பு எதற்கும் தீர்வு அல்ல.